செவ்வாய், 22 மே, 2018

1070. கா.சி.வேங்கடரமணி - 2

போகிற போக்கில் 
கா.சி.வேங்கடரமணி 


’பாரதமணி’ ஆசிரியராய் இருந்த கா.சி.வேங்கடரமணி ஒவ்வொரு இதழிலும் இத்தலைப்பில் ஒரு தலையங்கக் கட்டுரை எழுதுவார். இதோ, அவர் 1938-இல் பாரதமணி முதல் இதழில் எழுதிய  தலையங்கம்.தொடர்புள்ள பதிவுகள்:
கா.சி.வேங்கடரமணி

திங்கள், 21 மே, 2018

1069. சங்கீத சங்கதிகள் - 153

தலைமுறைக்கும் போதும்!' 
உ.வே. சாமிநாதையர்


தஞ்சை ஜில்லாவில் உள்ள ஒரு பெரிய கிராமத்திலே பல வருஷங்களுக்கு முன்பு  தனவந்தர் ஒருவர் இருந்தார்.  அவருக்கு மிக்க பணமும் பூஸ்திதியும் உண்டு.  பொருளை விருத்தி செய்வதிலும் அதனைக் காப்பாற்றுவதிலும் நல்ல திறமையுள்ளவர்; அவற்றிற்குரிய வழிகளையறிந்து அவ்வாறே பெருமுயற்சியுடன் ஒழுகிவந்தார்.  வயல்களுக்குத் தாமே நேரிற் சென்று
வேலைக்காரர்களிடமிருந்து வேலை வாங்குவார்; தாமும் செய்து காட்டுவார்.

பயிர்த் தொழிலில் மிக்க ஊக்கமும் பயிற்சியும் உடையவர்.  'தொழுதூண்
சுவையின் உழுதூணினிது' என்பதை நன்றாக அறிந்தவர்.  ஆனால், கல்வியில்  அவருக்கு ஒருவிதமான பழக்கமும் இல்லை; மற்ற ஜனங்களோடு அதிகமாக நெருங்கிப் பழகுவதுமில்லை.  யாவருக்கும் இன்பமளித்து மகிழ்விக்கும் சங்கீதத்திலோ சிறிதேனும் அவருக்கு விருப்பமில்லை.  வயல்களில் நிகழும் நிகழ்ச்சிகளும் உண்டாகும் ஓசைகளுமே அவருக்கு எல்லாவித இன்பத்தையும் அளித்தன.

இப்படியிருக்கையில் அந்தக் கனவானுடைய வீட்டில் ஒரு கல்யாணம் நிகழ்ந்தது.  உறவினர்களும் பிறரும் அவருக்கு ஊக்கமூட்டி அக்கல்யாணத்தை மிகவும் பிரபலமாக நடத்தவேண்டுமென்று சொன்னார்கள்.  அவர்களுடைய வசமாயிருந்த அவர் அக்கல்யாணத்தில் அவர்கள் விருப்பத்தின்படியே ஒரு சிறந்த சங்கீதக் கச்சேரி நடத்த உடன்பட்டார்.  பெரிய பணக்காரரானமையால் எவரை வேண்டுமானாலும் வரவழைக்கலாமல்லவா?  நண்பர்களுடன் கலந்து யோசித்து அக்காலத்தில் தஞ்சை சமஸ்தானத்தில் பிரபல சங்கீத வித்துவான்களாக இருந்த ஆனை, ஐயா என்பவர்களை வருவித்து அவர்களைக் கொண்டு சங்கீதக் கச்சேரியை நடத்த எண்ணினார்.

ஆனை, ஐயா என்பவர்கள் சகோதரர்கள்; இரட்டைப் பிள்ளைகளென்று
வழங்கப்படுவார்கள்.  வையைச்சேரி என்னும் ஊரில் அவர்கள் பிறந்தவர்கள். ஆனை என்பது ஒருவர் பெயர்; ஐயா என்பது மற்றொருவர் பெயர்.  இருவரும் சங்கீதத்தில் நல்ல பயிற்சியுடையவர்கள்; எக்காலத்திலும் பிரியாது சேர்ந்தே வசிப்பவர்கள்; சங்கீதத்தில் இணையற்ற வித்துவானாக விளங்கிய ஸ்ரீ மகாவைத்தியநாதையரவர்களுடைய தாய்வழியில் முன்னோர்கள்; வடமொழி தென்மொழி தெலுங்கு என்னும் மூன்று மொழிகளிலும் சிறந்த பழக்கமும் அவற்றில் கீர்த்தனம் இயற்றும் வன்மையும் உடையவர்கள்; அவர்கள் ஸ்வரம், பல்லவி
முதலியவற்றை எப்பொழுதும் சேர்ந்தே பாடுவார்கள்; சிவபக்திச் செல்வம்
வாய்ந்தவர்கள்; விபூதி ருத்ராக்ஷங்கள் அணிபவர்கள்; திருவையாற்றிலுள்ள ஸ்ரீ தர்மசம்வர்த்தனியம்பிகை விஷயமாகவும் ஸ்ரீ பிரணதார்த்திஹரர்
விஷயமாகவும் பல கீர்த்தனங்களை இயற்றியுள்ளார்கள்.

ஒருசமயம் தஞ்சாவூர் ஸம்ஸ்தானத்திற்கு ஹைதராபாத்திலிருந்து பல விருதுகள் பெற்ற முகம்மதிய சங்கீத விற்பன்னரொருவர் வந்திருந்தார்.  அவர் இந்துஸ்தானி சங்கீதம் பாடி அரசரையும் பிறரையும் மகிழ்வித்தார்.  அரசர் மிக்க மகிழ்ச்சியை அடைந்து, "இந்த இந்துஸ்தானி சங்கீதத்தை யாரேனும் இங்கே கற்றுக்கொண்டு பாடமுடியுமா?" என்று சபையிலுள்ள சங்கீத வித்துவான்களையெல்லாம் கேட்டபோது அங்கு வீற்றிருந்த ஆனை, ஐயா இருவரும், "இரண்டு மாதம் அவகாசம் கொடுத்தால் நாங்கள் முயன்று பார்ப்போம்" என்றார்கள்.  அவ்வாறே இரண்டு மாதம் பயின்று அந்தச் சங்கீதத்தைத் தவறின்றி அரசருக்குப் பாடிக் காட்டினார்கள்.  அதுவரையில் தஞ்சையிலேயே இருந்த முகம்மதிய வித்துவான் கேட்டு வியப்புற்று, "நாங்கள் எவ்வளவோ கஷ்டப்பட்டுத் தக்க ஆசிரியரிடம் பல வருஷங்கள் பயின்று கற்றுக்கொண்ட இந்த அருமையான வித்தையை இவர்கள் கேள்வியினாலேயே இவ்வளவு விரைவில் கற்றுக் கொண்டார்களே! இவர்கள் எதையும் எளிதிற் கற்றுக்கொள்வார்களென்று தோற்றுகின்றது!" என்று சொல்லி மிகவும் பாராட்டினரென்று சொல்வார்கள்.

இத்தகைய வித்துவான்கள் மேற்கூறிய கனவான் வீட்டுக் கல்யாணத்திற்கு வந்து சேர்ந்தார்கள்.  அவர்கள் வரவை அறிந்த ஜனங்கள் யாவரும் அவர்களுடைய பாட்டைக் கேட்க மிக்க ஆவல் கொண்டு வந்து கூடினார்கள். வெளியூர்களிலிருந்தும் பலர் வந்தனர்.  அவர்களுடைய பெருமை எங்கும் பரவியிருந்ததால் அவர்கள் பாட்டைக் கேளாவிடினும் அவர்களை நேரே பார்த்துவிட்டாவது போகலாமென்று பலர் வந்திருந்தனர்.  இவ்வளவு கூட்டத்தையும் கண்ட தனவந்தருக்கு உள்ளுக்குள்ளே மிக்க சந்தோஷம் உண்டாயிற்று.  எல்லோரும் தம்மை உத்தேசித்தே வந்துள்ளார்கள் என்பது அவருடைய நினைவு.

முகூர்த்த நாளின் மாலையில் சங்கீதவினிகை நடந்தது.  ஆனை, ஐயாவைச் சுற்றிலும் பிரபலர்களான வித்துவான்கள் பலர் அமர்ந்திருந்தார்கள்.
கூட்டம் அமைதியாகவிருந்து கேட்டு வந்தது.  வீட்டு எஜமான் அப்போதுதான் தமது கௌரவத்தைக் காட்டவேண்டுமென்று சுறுசுறுப்பாகப் பல காரியங்களையும் கவனித்துவந்தார்.  உணவுக்கு வேண்டியவற்றையும் பிற உபசாரங்களுக்கு உரியவற்றையும் செவ்வனே அமைக்குமாறு அங்கங்கே உள்ளவர்களை ஏவிக்கொண்டும்
அடிக்கொருதரம் சங்கீதக்கச்சேரி நடக்குமிடத்திற்கு வந்து கூட்டத்தையும்
பாடுபவர்களையும் சுற்றிப்பார்த்துக் கனைத்துக்கொண்டும் காற்றாடிபோல் சுழன்று வந்தார்.  உண்மையில் சங்கீதம் என்பது இன்னதென்று தெரியாமையால் அவருக்கு அதிலே புத்தி செல்லவில்லை.


ஆனை, ஐயா இருவரும் ஒரு பல்லவி பாட ஆரம்பித்தனர்.  பலபல சங்கதிகளையும் கற்பனை ஸ்வரங்களையும் அமைத்துப் பாடினர்.  அங்கிருந்தவர்கள், 'இதுவரையில் இவ்வாறு கேட்டதே இல்லை' என்று கூறி அதில் ஈடுபட்டனர்.  அதனால் ஊக்கம் மிக்க பாடகர்கள் இருவரும் தங்கள் மனோபாவ விரிவுக்கேற்றபடி பாடிக்கொண்டிருந்தார்கள்.  அங்கிருந்த யாவரும் ஒரே நோக்கமாக ஆனந்தக்கடலில் மூழ்கியிருந்தனர்.

அப்பொழுது ஒரு தூணின் அருகில் நின்றுகொண்டு எஜமான் கவனித்தார்.  அவர் தம் மூக்கின் மேல் விரலை வைப்பதும் அடிக்கடி முகத்தைச் சுளிப்பதும் வாயினால் வெறுப்புக்குரிய ஒலியை உண்டாக்குவதும் அவருக்கு ஏதோ மனத்தில் ஒருவித வருத்தம் இருப்பதை வெளிக்காட்டின.  வரவரக் கண்கள் சிவந்தன.  இரண்டுதடவை தூணில் தட்டினார்.  அவருக்குக் கோபம் வந்த காரணம் ஒருவருக்கும் தெரியவில்லை.  திடீரென்று பலத்த குரலில், "வித்துவான்களே, நிறுத்துங்கள்
உங்கள் சங்கீதத்தை.  இங்கே இருப்பவர்களுக்கெல்லாம் ஒன்றும் தெரியாதென்று நினைத்துவிட்டீர்களோ!  நானும் ஒரு நாழிகையாக எல்லா வேலையையும் விட்டுவிட்டுக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
திருப்பித் திருப்பிச் சொன்னதையே சொல்லிக்கொண்டிருக்கிறீர்களே! அதற்கென்ன அர்த்தமென்று நான் கேட்கிறேன்" என்று கர்ஜனை செய்தார்.  யாவருக்கும் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஊசியினால் குத்தினதுபோல் ஓர் உணர்ச்சி பிறந்தது.    "இவர்களைப் பெரிய சங்கீத வித்துவான்களென்று பொறுக்கியெடுத்தார்கள்!  இதற்குத்தான் முதலிலேயே கல்யாணத்துக்குப் பாட்டுக் கச்சேரி வேண்டாமென்று சொன்னேன்.  இருக்கிறவர்களெல்லாம் பிடுங்கி எடுத்துவிட்டார்கள்.  இவர்களுக்குக் கொடுக்கும் பணத்தை வைத்துக்கொண்டு விவசாயத்தை விருத்தி செய்யலாமே!" என்று மேலும் மேலும் கத்திக்கொண்டிருந்தார் பிரபு.

சங்கீதம் நின்றுவிட்டது.  அப்போது ஆனை, ஐயா அவர்களின் மனநிலையை யாரால் சொல்ல முடியும்?  அங்கிருந்தவர்களிற் பெரிய வித்துவான்களெல்லாம் கண்ணில் நீர்ததும்ப அவ்விருவருக்கும் சமாதானம் சொன்னார்கள்.  அவர்கள் உடனே கல்யாண வீட்டினின்றும் வெளியே போனார்கள்.  கூட்டம் அவர்களைத் தொடர்ந்து சென்றது.  அவ்விருவரும் ஒரு வார்த்தையும் பேசவில்லை.  அளவற்ற வருத்தத்தை அடக்கிக் கொண்டவர்களென்பதை அவர்கள் முகங்கள் காட்டின.  அப்பால் நேராக
அவ்வூரிலுள்ள வேங்கடேசப் பெருமாள் கோவிலுக்கு வந்து பெருமாளைத்
தரிசித்தனர்; தரிசித்தபோதே ஓவென்று கதறிவிட்டார்கள்.  உடன்
வந்தவர்களெல்லோரும் அசைவற்று நின்றனர்.  ஆனை என்பவர் தம்முடைய வருத்த மிகுதியால் அடியிற்கண்ட கீர்த்தனத்தைப் பாடத் தொடங்கினார்.

இராகம்: புன்னாகவராளி; தாளம்: ஆதி

(பல்லவி)

போதும் போதும் ஐயா தலைமுறைக்கும்    (போதும்)

(அநுபல்லவி)

மாதுவளர்வர காபுரி தனில் விளங்கிய
மங்கை யலர்மேலுமிக மகிழ் வேங்கடாசலனே   (போதும்)

(சரணங்கள்)

1.

அரியென் றெழுத்தையறி யாதமூடன்றன்னை
...ஆதி சேஷ னென்றும்
ஆயுத மொன்றுமறி யாதவன்றனை
...அரிய விஜய னென்றும்
அறிந்து மரைக்காசுக் குதவா லோபியைத்
...தானக் கர்ண னென்றும்
அழகற்ற வெகுகோரத் தோனை யேமிக
...அங்கஜனே யென்றும் - புகழ்ந்தலைந்தது   (போதும்)

2.

காசுக் காசைகொண்டு லுத்தனைச் சபைதனில்
...கற்பக தருவென்றும்
கண்தெரி யாக்குருட னென்றறிந்துஞ் சிவந்த
...கமலக் கண்ண னென்றும்
பேசுத லெல்லாம் பொய்யா மொருவனைப்
...பிறங்கரிச் சந்த்ர னென்றும்
பெற்ற தாய்தனக்கு மன்ன மிடான் றன்னைப்
...பெரியதர்ம னென்றும் -- புகழ்ந்தலைந்தது  (போதும்)

3.

அறிவில் லாதபெரு மடையர்தம் அருகினை
...அல்லும் பகலும் நாடி
அன்னை *உமாதாச* னுரைக்கும் பதங்களை
...அவரிடத்திற் பாடி
அறிவரோ வறியா ரோவென் றேமிக
...அஞ்சி மனது வாடி
ஆசை யென்னும்பேய்க் காளா யுலகினில்
...அற்பரைக் கொண் டாடித்-திரிந்தலைந்தது   (போதும்)

(*உமாதாசனென்பது ஆனையென்பவர் முத்திரை.  அதனைத் தாம் இயற்றும் ஒவ்வொரு கீர்த்தனத்திலும் அமைத்துப் பாடுவது அவர் வழக்கம்.)

இந்தப் பாட்டைப் பாடி மேலும் சில தோத்திரங்களைச் செய்துவிட்டு
அவ்வூராரிடத்தில் விடைபெற்று அவ்வித்துவான்கள் இருவரும் தங்கள்
இருப்பிடம் போய்ச் சேர்ந்தார்கள்.  அதற்குப்பின் தெய்வ சந்நிதானத்திலன்றி வேறொருவரிடமும் அவர்கள் சென்று பாடியதில்லையென்பர்.

(இந்தக் கீர்த்தனத்தையும் வரலாற்றையும் எனக்குச் சொன்னவர்கள் ஸ்ரீ
மகாவைத்திய நாதையரவர்கள்.)

===

தொடர்புள்ள பதிவுகள்:
சங்கீத சங்கதிகள்

உ.வே.சா 

ஞாயிறு, 20 மே, 2018

1068. பி.ஸ்ரீ. - 23

வள்ளுவர் காட்டும் நட்புச் செல்வம் -2
பி. ஸ்ரீ.’சுதேசமித்திர’னில் 1945-இல் வந்த ஒரு கட்டுரை
தொடர்புள்ள பதிவுகள்:

பி. ஸ்ரீ படைப்புகள்

சனி, 19 மே, 2018

1067. காந்தி - 27

21. சுயராஜ்ய ஜுரம்!
கல்கி


கல்கி’ ‘மாந்தருக்குள் ஒரு தெய்வம்’ என்ற தொடரில் 1948 -இல் எழுதிய  21-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் .  [ இந்தத் தொடர் முடிவு பெறவில்லை. 41 அத்தியாயங்களே வந்தன ]
===

நாகபுரி காங்கிரஸ் முடிவடைந்தவுடனே 1921-ஆம் வருஷம் பிறந்தது. பாரத மக்களைச் சுயராஜ்ய ஜுரம் பற்றிக் கொண்டது. ஜுரத்தின் வேகம் நாளுக்கு நாள் ஏறிக் கொண்டிருந்தது.

நாகபுரி காங்கிரஸில் ஒற்றுமையான முடிவு ஏற்பட்டதின் பயன் உடனே தெரிந்தது. கல்கத்தாவில் ஸ்ரீ சித்தரஞ்சன தாஸும் அலகாபாத்தில் பண்டித மோதிலால் நேருவும் வக்கீல் தொழிலை நிறுத்தி விட்டதாக அறிவித்தார்கள். ஸ்ரீ சித்தரஞ்சன தாஸ் மாதம் ஒன்றுக்கு வக்கீல் தொழிலில் ஐம்பதினாயிரம் ரூபாய் சம்பாதித்த செய்தி நாடெங்கும் பிரசித்தமாயிருந்தது. அவர் அத்தொழிலை விட்டதைப் போன்ற தியாகம் உலக சரித்திரத்திலேயே கிடையாது என்று சொல்லலாம். அலகாபாத்தில் பண்டித மோதிலால் நேருவும் ஏராளமாகச் சம்பாதித்து வந்தவர். அத்துடன், பண்டித மோதிலால் நேரு அரசர்களெல்லாம் பொறாமைப்படும்படியான சுகபோக வாழ்வு நடத்தி வந்தார் என்றும் மக்கள் அறிந்திருந்தார்கள். ஆகவே, மேற்கண்ட இரு தலைவர்களின் மாபெரும் தியாகம் பாரத மக்களின் உள்ளத்தைக் கவர்ந்து விட்டதில் வியப்பில்லை யல்லவா?

தாஸையும் நேருவையும் போலப் பிரபலமில்லாத பல வக்கீல்கள், - நூற்றுக் கணக்கானவர்கள், - தேசமெங்கும் தங்கள் தொழிலை விட்டு ஒத்துழையாமை இயக்கத்தைச் சேர முன்வந்தார்கள். இப்படி முன்வந்த வக்கீல்களில் ஏழைகளாயிருந்தவர்களுக்குப் பொருள் உதவி செய்வதற்காக வென்று ஒரு மனிதர் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை அளித்தார்! அதற்கு முன்னால் இவ்வளவு பெரிய நன்கொடையைப் பற்றி யாரும் கேள்விப் பட்டதில்லையாதலால் தாஸ் – நேருவின் தியாகத்தைப் போலவே இந்த நன்கொடையும் மக்களைத் திகைக்கப் பண்ணியது. நன்கொடை அளித்தவரின் பெயர் சேத் ஜம்னாலால் பஜாஜ். இவர் மார்வார் தேசத்தில் பிறந்தவர். வியாபார நிமித்தமாக மத்திய மாகாணத்துக்கு வந்து வர்தாவில் குடியேறியவர். வர்த்தகத் துறையில் பெரும் பொருள் திரட்டிக் கோடீசுவரர் ஆனவர். இத்தகையவர் மகாத்மாவின் அந்தரங்கச் சீடர்களில் ஒருவரானார். அந்த வருஷத்திலிருந்து மரணமடையும் வரையில் காங்கிரஸ் மகா சபையின் பொக்கிஷதாராக விளங்கினார். முதல் லட்சம் கொடுத்த பிற்பாடு தேசத்துக்காக இன்னும் எவ்வளவோ லட்சம் கொடுத்தவர். பிற்காலத்தில் மகாத்மா சபர்மதி சத்தியாக்கிரஹ ஆசிரமத்தை விட்டு வெளியேற நேர்ந்தபோது வர்தாவுக்கு அருகில் ஒரு கிராமத்தில் ஆசிரமம் ஸ்தாபித்தது சேத் ஜம்னாலாலின் காரணமாகத்தான்.

புதிய அரசியல் திட்டத்தின்படி சட்டசபைகளை அங்குரார்ப் பணம் செய்து வைப்பதற்கு ஜார்ஜ் மன்னரின் சித்தப்பாவான கன்னாட் கோமகன் (டியூக் ஆப் கன்னாட்) விஜயம் செய்தார். அவருடைய விஜயத்தையும் விஜயம் சம்பந்தமான வைபவங்களையும் பகிஷ்காரம் செய்யவேண்டுமென்று காங்கிரஸ் தலைவர்கள் கட்டளையிட்டார்கள். அதன்படியே கன்னாட் கோமகன் கப்பலில் வந்து இறங்கிய அன்று நாடெங்கும் ஹர்த்தால் நடந்தது. கன்னாட் கோமகன் இந்தியப் பொதுமக்களுக்கும் தலைவர்களுக்கும் சமரசம் கோரி விண்ணப்பம் விடுத்தார். "நான் கிழவன்; வேண்டிக் கொள்கிறேன்; சென்று போனதையெல்லாம் மறந்து மன்னித்து விடுங்கள்; புதிய அரசியல் திட்டத்தை ஏற்றுக்கொண்டு நடத்துங்கள்!" என்று மன்றாடினார். இந்த விண்ணப்பம் செவிடன் காதில் ஊதின சங்காக முடிந்தது. அரசரின் பிரதிநிதி வேண்டிக் கொண்டதை மக்கள் பொருட்படுத்தவில்லை. காந்தி மகாத்மாவின் வாக்கையே சிரத்தையுடன் கேட்டார்கள். மாகாண சட்டசபைகளுக்கும் மாகாண மந்திரிகளுக்கும் மதிப்பே ஏற்படவில்லை.

மூவகை பகிஷ்காரங்களில் இன்னொன்று கலாசாலை பகிஷ்காரம் அல்லவா? நாகபுரி காங்கிரஸுக்குப் பிறகு இந்தப் பகிஷ்காரமும் ஓரளவு பலன் தந்தது. கல்கத்தாவில் தேசபந்து தாஸ் விடுத்த விண்ணப்பத்தின் பலனாக ஆயிரம், பதினாயிரம் என்ற கணக்கில் மாணாக்கர்கள் கலாசாலைகளை விட்டு வெளியேறினார்கள். மார்ச்சு மாதம் நடக்கவேண்டிய பரீட்சைகள் பல கலாசாலைகளில் நடைபெறவே இல்லை. கல்கத்தாவைப் போல் அவ்வளவு அதிகமாக இல்லா விட்டாலும் மற்ற மாகாணங்களிலும் பல மாணவர்கள் கலா சாலை பகிஷ்காரம் செய்தார்கள்.

இவ்விதம் பள்ளிக்கூடங்களையும் கலாசாலைகளையும் விட்டு வந்த மாணாக்கர்களில் ஒரு பகுதியார் தேச சேவைக்கே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணம் செய்தார்கள். முதலில் இவர்கள் காங்கிரஸ் பிரசாரத்தில் ஈடுபட்டார்கள். பிறகு கள்ளுக்கடை மறியல், விதேசித் துணிக்கடை மறியல், சாத்வீகச் சட்ட மறுப்பு ஆகியவற்றில் ஈடுபட்டுச் சிறைக்கூடம் சென்றார்கள். வாலிபப் பிராயத்துக்குரிய ஆர்வத்துடனும் ஆவேசத்துடனும் தேசத் தொண்டில் ஈடுபட்ட இந்த ஆயிரக் கணக்கான மாணாக்கர்கள் பாரத நாட்டின் விடுதலைக்குப் பெரிதும் காரணமாயிருந்தார்கள்.

சர்க்கார் கல்வி ஸ்தாபனங்களை விட்ட மாணவர்கள் மேலே கல்வி கற்க விரும்பினால் அவர்களுக்கு வசதி இருக்கவேண்டும் என்பதற்காகத் தேசீய கல்வி ஸ்தாபனங்கள் சில ஏற்பட்டன. இவற்றில் குஜராத் வித்யா பீடம், காசி வித்யா பீடம், அலிகார் ஜமியா மிலியா ஆகியவை முக்கியமானவை.

நாகபுரியில் மகாத்மா தயாரித்த புதிய காங்கிரஸ் அமைப்பு இப்போது வேலை செய்யத் தொடங்கியது. இதற்கு முன்னாலெல்லாம் ஜனங்கள் வருஷத்துக்கு ஒரு தடவை,-டிசம்பர் கடைசி வாரத்திலே தான்,- காங்கிரஸைப் பற்றிப் பத்திரிகைகளிலே படிப்பார்கள். இப்போது தினந்தோறும் காங்கிரஸைப் பற்றிய செய்திகளைப் படிக்க நேர்ந்தது.

சென்னையில் வெளியான தினப் பத்திரிகைகளில் ஒவ்வொரு நாளும் ஒரு கட்டத்துக்குள்ளே ஒரு விண்ணப்பமோ, அறிக்கையோ வெளியாகி வந்தது. அதன் அடியில் "ச. இராஜகோபாலாச்சாரி, காங்கிரஸ் பொதுக் காரியதரிசி" என்று கையொப்பம் இட்டிருக்கும். நாகபுரியில் பண்டித மோதிலால் நேருவும் ஸ்ரீ சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியாரும் காங்கிரஸ் மகா சபையின் பொதுக் காரியதரிசிகளாகத்தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். தென்னிந்தியாவில் ஸ்ரீ ச. இராஜகோபாலாச்சாரியார் காங்கிரஸ் பிரசாரத்தைத் தீவிரமாக நடத்தத் தொடங்கினார். தினந்தோறும் பொதுமக்களின் கவனம் காங்கிரஸ் திட்டங்களின்மீது செல்லும்படி பத்திரிகைகளில் அறிக்கை வெளியிட்டு வந்தார்.


காங்கிரஸ் காரியக் கமிட்டி ஒவ்வொரு மாதமும் கூடியது.நடந்த வேலைகளைப்பற்றி ஆராய்ந்து நடக்கவேண்டிய வேலைகளைப் பற்றித் தீர்மானித்தது. நாடெங்கும் காங்கிரஸ் தலைவர்கள் சுற்றுப் பிரயாணம் செய்து மக்களின் உற்சாகத்தைப் பெருக்கி வந்தார்கள்.

காந்தி மகாத்மா மௌலானா முகம்மதலி அல்லது ஷவுகத் அலியைத் தம்முடன் அழைத்துக் கொண்டு சுற்றுப்பிரயாணம் செய்தார். மகாத்மாவும் மௌலானாவும் போகுமிடங்களிலெல்லாம் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் திரண்டு வந்தார்கள். ஐம்பதினாயிரம், லட்சம் என்று ஜனங்கள் பொதுக் கூட்டங்களில் சேர்வது அவர்களுடைய சுற்றுப் பிரயாணத்தில் சர்வ சாதாரணமாயிருந்தது. அவர்கள் பிரயாணம் செய்யும்போது ரயில்வே ஸ்டே ஷன்களில் ஆயிரக்கணக்கான ஜனங்கள் கூடினார்கள். இரவு பகல் என்று பாராமல் தலைவர்களின் தரிசனம் கோரினார்கள். "வந்தே மாதரம்" "அல்லாஹு அக்பர்""மகாத்மா காந்திக்கு ஜே!" என்ற கோஷங்கள் வானைப் பிளந்தன; ரயிலுக்குள் தூங்க முயன்ற தலைவர்களின் செவிகளையும் பிளந்தன.

இந்தச் சுற்றுப் பிரயாணத்தின்போது மகாத்மா ஒரு தடவை "நான் சொல்லும் நிபந்தனைகளை நிறைவேற்றினால் ஒரு வருஷத்துக்குள்ளே சுயராஜ்யம் தருவேன்!" என்றார்.

"நிபந்தனைகளை நிறைவேற்றினால்" என்பதைப் பலர் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. "ஒரு வருஷத்துக்குள் சுயராஜ்யம்" என்பதை மட்டும் பிடித்துக் கொண்டார்கள்.

"ஒரு வருஷத்துக்குள் சுயராஜ்யம்" என்னும் செய்தி மக்களிடையே பரவியது. "அவ்விதம் மகாத்மா வாங்கிக் கொடுக்கப் போகிறார்" என்ற நம்பிக்கையும் பரவியது. பொது மக்களின் சுயராஜ்ய ஜுரம் மேலும் மேலும் ஏறிக்கொண்டே சென்றது!

மார்ச்சு மாதக் கடைசியில் பெஜவாடாவில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூடியது. தலைவர்கள் தேசத்தின் நிலைமையை ஆராய்ந்து பார்த்தார்கள். "பட்ட பகிஷ்காரம், சட்டசபை பகிஷ்காரம், கோர்ட் பகிஷ்காரம், கலாசாலை பகிஷ்காரம்" ஆகியவைகள் எல்லாம் ஓரளவிலேதான் வெற்றி பெற்றிருந்தன. பொது மக்களின் உற்சாகம் அளவில்லாமல் பெருகிக் கொண்டிருந்தது. ஆனால் பொங்கி வழிந்து வீணாகிக் கொண்டிருந்ததே தவிர அந்த உற்சாகம் காரியத்தில் பயன்படுத்தப் படவில்லை.

மக்களின் உற்சாகத்தைக் காரியமாக மாற்றுவதற்கு மகாத்மா காந்தி மூன்று திட்டங்களை வகுத்தார்.

"(1) ஒரு கோடி காங்கிரஸ் அங்கத்தினரைச் சேருங்கள்;
(2) திலகர் சுயராஜ்ய நிதிக்கு ஒரு கோடி ரூபாய் சேருங்கள்;
(3) தேசத்தில் இருபது லட்சம் இராட்டை சுற்றும்படி செய்யுங்கள்" என்று சொன்னார்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அந்தத் திட்டத்தை ஒப்புக் கொண்டது. ஜூன் மாதக் கடைசிக்குள் திட்டம் நிறை வேற வேண்டும் என்று தீர்மானித்தது.

இத்திட்டம் தேசமெங்கும் சுருசுருப்பை வளர்த்தது. திட்டத்தை நிறைவேற்றுவதற்குப் புதிய காங்கிரஸ் அமைப்பு மிகவும் உதவி செய்தது.

மாகாண காங்கிரஸ் கமிட்டிகளும், ஜில்லா காங்கிரஸ் கமிட்டிகளும், தாலுகா காங்கிரஸ் கமிட்டிகளும், கிராம காங்கிரஸ் சபைகளும் ஏற்பட்டன. மேற்படி கமிட்டிகளுக்கெல்லாம் காரியாலயங்கள் ஏற்பட்டன. அந்தக் காரியாலயங்களின்மீது நடுவில் இராட்டை பொறித்த மூவர்ணக் கொடி பறந்தது.

ஆங்காங்கு சர்க்கார் கச்சேரிகளுக்குப் போட்டியாகக் காங்கிரஸின் காரியாலயங்கள் ஏற்பட்டு வருவதாகப் பொது ஜனங்கள் எண்ணினார்கள்.

முரட்டுக் கதர்ச் சொக்காயும், வெள்ளைக் கதர்க்குல்லாயும் தரித்த தலைவர்களும் தொண்டர்களும் நாடெங்கும் சஞ்சரித்தார்கள். பட்டணங்களிலும் கிராமங்களிலும் காங்கிரஸ் மகா சபைக்கு அங்கத்தினர்களைச் சேர்த்தார்கள்.

காங்கிர இலட்சியம் அச்சிட்ட லட்சக்கணக்கான அங்கத்தினர் நமூனாக்கள் நாடெங்கும் விநியோகிக்கப்பட்டன.

புதிய அமைப்பின்படி, காங்கிரஸ் இலட்சியத்தில் கையெழுத்துப் போட்டு நாலணா வருஷ சந்தா கொடுப்பவர்கள் எல்லாரும் காங்கிரஸ் அங்கத்தினர்கள் அல்லவா? நாலணாச் சந்தாவுடன் காங்கிரஸ் இலட்சியத்தில் கையெழுத்துக்கள் வாங்கப்பட்டன. ஜூன் மாதக் கடைசிக்குள் அறுபது லட்சம் அங்கத்தினர்கள் சேர்ந்து விட்டதாகப் பின்னால் கணக்கு வெளியாயிற்று.

நாடெங்கும் உள்ள தச்சர்கள் கைராட்டினம் செய்யும் வேலையில் ஏவப்பட்டார்கள். நூற்றுக் கணக்கிலும் ஆயிரக் கணக்கிலும் ராட்டினங்கள் செய்யப்பட்டன. பரண்களிலே கிடந்த பழைய இராட்டினங்கள் எல்லாம் எடுக்கப்பட்டன. கைராட்டினத்தின் ரீங்காரம் தேசமெங்கும் கேட்கலாயிற்று. பெஜவாடா திட்டத்தின்படி கிட்டத்தட்ட இருபது லட்சம் ராட்டினங்கள் ஜூன் முடிவுக்குள் வேலை செய்யத் தொடங்கி விட்டதாகக் கணக்குச் சொன்னார்கள்.

இந்த ராட்டினங்களில் நூல் உற்பத்தி எவ்வளவு ஆயிற்று என்பதும், இவை நீடித்து வேலை செய்தனவா என்பதும் வேறு விஷயங்கள். அவற்றைக் குறித்துப் பிற்பாடு கவனிக்கலாம். காங்கிரஸ் அங்கத்தினர் எண்ணிக்கையும் கைராட்டினங்களின் தொகையும் நிச்சயமாகக் குறிப்பிட்ட தேதிக்குள் கணக்கிட முடியாதவை. ஆனால் திலகர் சுயராஜ்ய நிதி விஷயம் அப்படியல்ல.

வசூலித்த தொகைகளுக்கு அவ்வப்போது கணக்கு வந்தது. பணம் பாங்கில் சேர்ந்தது. ஆகையால் போட்ட திட்டம் நிறைவேறியதா என்பதை ஜூன் மாதம் 30-ஆம் தேதி நிச்சயமாய்ச் சொல்லி விடலாம்.

ஜனத்தொகை விகிதாச்சாரப்படி ஒவ்வொரு மாகாணத்துக்கும் ஒரு கோடியைப் பங்கீடு செய்து வசூல் வேலை ஆரம்ப மாயிற்று. எல்லா மாகாணங்களிலும் துரிதமாகவே வசூல் வேலை நடந்து வந்தது. ஆனாலும் குறிப்பிட்ட பங்கீட்டின்படி ஒரு கோடி ரூபாய் வசூலாகும் என்று தோன்றவில்லை. ஒரு பொது நிதிக்கு ஒரு கோடி ரூபாய் வசூலிப்பதென்பது அந்த நாளிலே நினைக்கவும் முடியாத காரியம்.

அதற்கு முன்னால் பல தடவை காங்கிரஸுக்கு நிதி சேர்க்கும் முயற்சியை ஆரம்பித்துப் பலன் கிட்டாமல் கைவிட்டு விட்டார்கள். பத்தாயிரம் ரூபாய்க்குமேல் காங்கிரஸுக்கு எப்போதும் கையிருப்பு இருந்ததில்லை.

அப்படியிருக்க ஒரு கோடி ரூபாய் வசூல் ஆவது எப்படி? நடக்கக் கூறிய காரியமா? பெரும்பாலான ஏழைகளிடம் கொடுக்கப் பணம் கிடையாது. பணக்காரர்களுக்குக் கொடுக்க மனம் கிடையாது. மனம் இருந்தாலும் காங்கிரஸ் நிதிக்குக் கொடுத்தால் சர்க்காரால் உபத்திரவம் நேரிடுமோ என்ற பயம் ஒரு பக்கம். இந்த நிலையில் ஒரு கோடி ரூபாய் வசூலாவது நடக்காத காரியம் என்று பலரும் எண்ணினார்கள்.

ஜூன் மாதம் 15-ஆம் தேதி வரையில் ஐம்பது லட்சம் ரூபாய்கூட வசூலாகவில்லை. சந்தேகப் பிராணிகளின் வாக்குப் பலித்து விடும் என்றே தோன்றியது. ஜூன் மாதம் 15-ஆம் தேதிக்கு மேல் ஆமதாபாத்தில் ஸ்ரீ வல்லபாய் பட்டேலும் பம்பாயில் மகாத்மா காந்தியும் பணம் வசூலிக்க ஆரம்பித்தார்கள்.

தினந்தோறும் ஐந்து லட்சம், பத்து லட்சம் என்று நிதி வசூல் பெருகிக் கொண்டு வந்தது. ஆமதாபாத்தில் பத்து லட்சம் ரூபாயும், பம்பாயில் இருபத்தைந்து லட்சம் ரூபாயும் வசூலாயிற்று. இந்தச் செய்திகள் மற்ற மாகாணங்களிலும் நிதி வசூலைப் பெருக்கின. ஜூன் மாதம் 30-ஆம் தேதி முடிந்த போது மொத்தம் ஒரு கோடி பதினைந்து லட்சம் ரூபாய் சேர்ந்து விட்டதாகத் தெரிந்தது.

காங்கிரஸுக்கு மகத்தான வெற்றி மகாத்மாவின் சக்திக்கு திட்டமான சாட்சி. இந்தியாவின் தேச பக்திக்கு ஐயமில்லாத அத்தாட்சி. திலகர் சுயராஜ்ய நிதிக்கு ஒரு கோடிக்கு மேலே வசூலாகி விட்டதென்னும் செய்தி நாடெங்கும் உற்சாகக் கிளர்ச்சியை உண்டாக்கிற்று.
பொது மக்களின் சுயராஜ்ய ஜுரம் இன்னும் அதிகமாகி மேலே ஏறியது.

( தொடரும்)


தொடர்புள்ள பதிவுகள்:

மகாத்மா காந்தி
'கல்கி’ கட்டுரைகள்

[  நன்றி: : http://www.projectmadurai.org/  ]

வெள்ளி, 18 மே, 2018

1066. ஆ.ரா.இந்திரா -1

பெண்டிர் நிலை
ஆ.ரா.இந்திரா

‘உமா’ இதழில் 1956-இல் வந்த ஒரு கட்டுரை.

ஆ.ரா.இந்திரா 2016-இல் மறைந்தபோது, திருப்பூர் கிருஷ்ணன் எழுதியது:

கம்பரும் ஹோமரும் உள்ளிட்ட பல ஒப்பாய்வு நூல்களை எழுதியவர். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாய் கல்லூரிப் பேராசிரியையாகப் பணியாற்றியவர். சென்னை எத்திராஜ் கல்லூரி முதல்வராக இருந்தவர். ரா.பி. சேதுப்பிள்ளையின் நேரடிப் பார்வையில் கம்ப ராமாயணச் சிறுபாத்திரங்கள் குறித்து ஆய்வு செய்தவர். கம்ப ராமாயணத்திலும் சிலப்பதிகாரத்திலும் ஆழங்கால் பட்டவர் . 34 ஓரங்க நாடகங்கள் எழுதியவர். தமிழ் போலவே ஆங்கிலத்திலும் பெரும் புலமை பெற்றவர்.
====

விகடனில் அவர் எழுதி சித்திரலேகா படங்கள் வரைந்த ‘சித்திரச் சிலம்பு’ பிரபலமானது.