புதன், 4 மார்ச், 2015

லா.ச.ராமாமிருதம் -9: சிந்தா நதி - 9

லா.ச.ராமாமிருதம் -9: சிந்தா நதி - 9
5. சொல் 
லா.ச.ரா 
            



“ கவிதைக்கும் வசனத்துக்கும் என்ன வேறுபாடு? பொருளின் முலாம் ஓசையா? ஓசையையும் அடக்கித்தான் பொருளா? ஓசைக்கும் பொருளுக்கும் நிக்கா மேல் இழுத்த திரைதான் வார்த்தை? அது கவிதையோ, வசனமோ எதுவானால் என்ன? எல்லாம் கவித்வமே” -
     --- -  லா.ச.ரா 






    அன்றொரு நாள்.

    தெருவில் போய்க்கொண்டிருக்கையில், மாலை யிருளில் யாரோ ஒருத்தி இன்னொரு ஆளிடம் பேசும் குரல் பிரிந்து வருகிறது.

    "அந்த ஆசாமியா, நீ சொல்றதை நம்ப முடியல்லியே! அவன் முதுகைத் தடவினால் வவுத்திலிருக்கிறதைக் கக்கிக் கொடுத்திடுவானே!" ஸ்தம்பித்துப் போனேன். இந்த நாட்டுப்புறத்தாளிடம் இத்தனை கவிதையா?

    போன வாரம் அடுப்புக்கரி வாங்க விறகு மண்டிக்குப் போனேன். நாடார், 'போன வாரம் கிலோ ரூ.1-50. கிஸ்ணாயில் தட்டுப்பாடு ஆனவுடனே கரி மேலே மார்க்கெட் பிரியமாயிட்டுது!" பிரியமாம். விலை உயர்வை உணர்த்தும் நேர்த்தி எப்படி?

    சமீபத்தில் ஒரு கலியாணத்துக்குப் போயிருந்தேன். மணப்பெண்ணின் தம்பி, சின்னப் பையன், பதினாலு வயதிருந்தால் அதிகம். என்னைப் பந்தியில் இடம் தேடி உட்கார வைத்து, உபசரித்து, பேச்சோடு பேச்சாக:

    "மாமா, வந்தவாளை உபசாரம் பண்ணி, திருப்திப்படுத்தி, இந்தச் சமயத்தைப் பரிமளிக்கச் செய்வதை விட எங்களுக்கென்ன வேலை?"

    இவ்வளவு ஓசை இன்பத்துடன், மனத்துடன் சொல்லிக் கொடுத்த வார்த்தையா? இராது!' Sponaneous ஆக, இந்த வாண்டினிடமிருந்து எப்படி வருகிறது? அப்பவே பாயசம், அதில் போடாத குங்குமப்பூவில், பரிமளித்தாற்போல் பிரமை தட்டிற்று.

    இன்னொரு சமயம். குழந்தை அம்மாவைக் கேட்கிறது. "அம்மா, இந்த மூக்கை (முறுக்கை)த் தேந்து (திறந்து) தாயேன்!" இதில் ஸ்வரச் சொல், 'திறந்து'.

    இவை என் எழுத்துப் பிரயாசையில் நான் கோர்த்த ஜோடனைகள் அல்ல. தற்செயலில் செவியில் பட்டு, நினைவில் தைத்து, தைத்த இடத்தில் தங்கி, 'விண், விண், விண்...'

    குளவிகள்.

    வாய்ச் சொல்லாகக் கண்ட பின்னர், வார்த்தை எழுத்தில் வடித்தாகிறது. வாய்ச் சொல்லுக்கும் முன்னாய உள்ளத்தின் எழுச்சியின் உக்கிரத்தை மழுப்பாமல் எழுத்தில் காப்பாற்றுவது எப்படி?

    இதுதான் தேடல்.

    தேடல் என்றால் டிக்ஷனரியில் அல்ல.

    உன் விதியில் தேடு.

    பிற வாயிலாகப் பிறந்த வார்த்தைகளின் தனித் தன்மையை அதனதன் ஓசையினின்று தவிர்த்து, அதனதன் மோனத்தில் நிறுத்தி, த்வனியை அடையாளம் கண்டு கொண்டதும், த்வனி தீட்டும் மறு ஒவியங்கள் பயங்கும் மயக்கம். புலன் மாறாட்டத்தில் செவி பார்க்கும், கண் கேட்கும், உணர்வு மணக்கும்.

    பாதங்களடியில் மணியாங்கற்களின் சரக் சரக்.

    தருக்களின் இலைகளினூடே, காற்றின் உஸ்!.....

    அந்தி வேளையில் விண்மீன்கள் ஜரிகை கட்டிய இருள் படுதாவின் படபடப்பு.

    நடு நிசி. கடற்கரையில் ஓடத்தடியில், அலை மோதிப் பின் வாங்குகையில், கரையில் விட்டுச் சென்று, கண் சிமிட்டும் நீல நுரைக் கொப்புளங்களின் மின் மினுக்கு.

    சமயங்களில், கிராமத்தில், நக்ஷத்ர ஒளியினாலேயே செண்டு கட்டினாற் போலும் கருவேல மரத்தின் மேல் நெருக்கமாகப் படர்ந்து அப்பிய மின்மினிப் பூச்சிக் கூட்டங்கள்.

    கிசுகிசு என்னவோ இன்னதென்று தெரியாது. ஆனால் என்னவோ நேரம் நலுங்குகிறது. இதோ என் ராஜா வரப் போகிறார் என்கிற மாதிரி மகத்துவத்தை எதிர் நோக்கும் அச்சத்தில் இரவின் ரகஸ்ய சப்தங்கள். பூவோடு பூ புல்லோடு புல். காயோடு இலையின் உராய்வுகள்-

    சப்த மஞ்சரி.

    செம்பருத்திச் செடியடியில் சலசல- புஸ்.....ஸ்.

    உச்சி வேளை, தாம்பு சரிந்து, கிணற்றுள் வாளி விழும் 'தாடல்.'

    மறுக்கப்பட்ட காதல், தன் வேட்கையின் தீர்வைத் தேடி அடி மேல் அடி வைக்கும் கள்ளத்தனத்தில், கதவுக் கீலின் க்ற்...றீ...ச்.....'

    திடு திடு. புழக்கடையில் திருடன் ஒடுகிறான்.

    இல்லை.

    பிரமை-
    * * *

    கம்யூனிகேஷனில் எத்தனை விதங்கள், ஸ்வரங்கள், ஸ்ருதிகள், அதிர்வுகள், உருவங்கள், உருவகங்கள், நயங்கள், நயனங்கள்!
    * * *

    திடீர் திடீர் எனக் காரணம் தெரியா மகிழ்ச்சி.

    இனம் தெரியா-துக்கம். உடனே ஏக்கம்.

    ராக் ரஞ்சித்.

    ராக் துக்.

    வரிகளை மடித்து எழுதினால் மட்டும்

    பிராசத்தால் மட்டும்

    கவிதை உண்டாகி விடாது. வசன கவிதை ஆகி விடாது.

    கேட்கிறேன். உள்ளபடி கவிதைக்கும் வசனத்துக்கும் என்ன வேறுபாடு?

    பொருளின் முலாம் ஓசையா? ஓசையையும் அடக்கித் தான் பொருளா?

    ஓசைக்கும் பொருளுக்கும் நிக்கா மேல் இழுத்த திரைதான் வார்த்தை?

    அது கவிதையோ வசனமோ எதுவானால் என்ன?

    எல்லாம் கவித்வமே.

    கெளரி கல்யாண வை போ க மே

    நித்ய கல்யாண வை போ க மே

    கவிதா கல்யாண வை போ க மே

    முதன் முதலில், ஒசை வயிறு திறந்ததும், அதனின்று பிரிந்தது வார்த்தை அல்ல. சொல்தான் பிறந்தது.

    சொல் வேறு. வார்த்தை வேறு.

    சொல் என்பது நான். என் தன்மை, என் பொருள், என் தேடல், என் சுழி, என் ஆரம்பம், என் முடிவு, முடிச்சு, முடிச்சின் அவிழ்ப்பு. அதற்கும் அப்பால் என் மறு பிறப்பு. எல்லையற்ற பிறவி மூலம் என் புதுப்பிப்பு.

    ஆதிமகனும் ஆதிமகளும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்ட முதல் சமயம் கண்ட உள்ள எழுச்சி தேடிய வடிகால், இருவரும் கண்ட முதல் சொல்லின் தரிசனத்தை அனுமானத்தில் காணக்கூட மனம் அஞ்சுகிறது.
    * * *

    சிந்தா நதி தலைக்கு மேல் ஆழத்தில், மண்டை ஒடுள் தோற்றங்கள்.
    -----------------


[ நன்றி: தினமணி கதிர், மதுரைத் திட்டம்,  ஓவியம்: உமாபதி ]

தொடர்புள்ள பதிவுகள்:
லா.ச.ரா: சில படைப்புகள்

கருத்துகள் இல்லை: