வெள்ளி, 31 ஜூலை, 2015

சங்கீத சங்கதிகள் - 55

கேட்டுப் பாருங்கள் !  - 1943 -க்குச் சென்று !





1 ஆகஸ்ட் 1941. ‘கல்கி’ இதழ் தொடங்கப் பட்டது.
நாளை  ( 1 ஆகஸ்ட் 2015 -இல் ) கல்கி பவள விழா கொண்டாடுகிறது. ‘கல்கி'க்கு என் வாழ்த்துகள்!

இன்று என்னிடம் 1941 கல்கி இதழ்கள் ஒன்றும் இல்லை!  ஆனால், மழலைப் பருவ ’கல்கி’ இதழ் ஒன்றிலிருந்து ஒரு பத்தியை, கல்கி பவள விழாவைக் கொண்டாடும்  வகையில்  இங்கிடுகிறேன் !

சில குறிப்புகள்:

பேராசிரியர் ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி 1941 ஜனவரியில் ‘ஆனந்த விகடனை’ விட்டு விலகினார்.

பிறகு மூன்றாவது சிறைவாசம் சென்றார் - மூன்று மாதம்.

41 ஆகஸ்டில் ‘கல்கி’ பத்திரிகை தொடங்கியது.

விகடனில் பிரபலமாக இருந்த , ‘கல்கி’ அங்கே ஆசிரியராய் இருந்தபோது எழுதிய சில தொடர்களைப் போலவே ‘கல்கி’யிலும் சில தொடர்கள் வரத் தொடங்கின. ஆனால் வேறு பெயர்களில்.

உதாரணமாக, ரேடியோக் கச்சேரிகளைப் பற்றிய  “கேட்டுப் பாருங்கள்”  என்ற தொடர். ( இதைக் ‘கல்கி’யே எழுதியிருப்பார் என்பது என் யூகம்)  ( விகடனில் வந்த இத்தகைய தொடர் “ரேடியோ எப்படி?”; கல்கியில் பின்னர் “வான சஞ்சாரம்” என்ற பெயரில் ஒரு ரேடியோ விமரிசனத் தொடர் வந்தது .)

எனக்குக் கிட்டிய ( மூர் மார்க்கெட்டில் ”அந்தக் காலத்தில் “ தேடி அலைந்து பிடித்தது என்பதே உண்மை! இதெல்லாம் பின்னே எப்படிக் கிட்டும்! ) ஒரு பத்தியைப் பாருங்கள்! இது ஜூன் 1943-இல் வந்தது. எப்படி வருடம், மாதத்தைத் துல்லியமாகக் குறிக்கிறேன் என்கிறீர்களா? அந்தப் பத்தியுடன் வந்த ‘வட்டமேஜை’ பத்தியையும் படியுங்கள்! புரியும்!


இதில் படம் வரைந்த “சாமா” வை நினைவு இருக்கிறதா?  அவர்தான் கல்கியில் சேர்ந்த முதல் ஓவியர். கல்கியில் குழந்தைக் கதைகள் பல எழுதிய “ராஜி”யின் இளைய சகோதரர்.

சரி, “வட்ட மேஜை”யில் வந்த வாசகர் கடிதத்தைப் படியுங்கள்! ( கல்கியின் சிறைவாசக் கட்டுரைத் தொகுப்பின் விளம்பரத்தையும் படியுங்கள்!)


[ நன்றி: கல்கி ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள் ;

வான சஞ்சாரம்

ரேடியோ எப்படி?

சங்கீத சங்கதிகள்: மற்ற கட்டுரைகள்

ஞாயிறு, 26 ஜூலை, 2015

கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -1

கவிமணி 
கே.குமாரசுவாமி 


ஜூலை 27. கவிமணி அவர்களின் பிறந்த நாள்.

கவிமணியின் வலது கையாய் இருந்த அவருடைய மருகர் குமாரசுவாமி ‘கலைமகளில்’ 1954-இல் அவரைப் பற்றி எழுதிய ஒரு கட்டுரையை இங்கிடுகிறேன்.







[ நன்றி : கலைமகள் ]

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]



தொடர்புள்ள பதிவுகள்:  

கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை

பாடலும் படமும் - 4 : கவிமணி

செவ்வாய், 21 ஜூலை, 2015

கவிதை எழுத வாங்க! : கவிதை

கவிதை எழுத வாங்க!




கணினி மூலம் இணையம் புகுந்து
. கவிதை எழுத வாங்க!
இணையம் மூலம் உலகத் தமிழர்
. இதயம் நிறைக்க வாங்க!
கணைக ளோடு கனிவும் கலந்து
. கடமை சுட்ட வாங்க!
அணிகள் இட்டு, அன்னை தமிழுக்
. கழகு சேர்க்க வாங்க!   (1)

உலகச் சுழலில் உமக்கு நேரும்
. உரசல் கவிதை ஆகும்!
கலந்த இதயக் காதல் உணர்வுக்
. கனவு கவிதை ஆகும்!
பலகை மனதில் நினைவுப் பலப்பம்
. பதித்தல் கவிதை ஆகும்!
அலைக்கும் பணியில் அமைதி கொடுக்கும்
. அன்பும் கவிதை ஆகும்!  (2)

அன்பு(உ)ம் நெஞ்சில் அமர்ந்த பின்னர்
. அழைக்கும் குரலே கவிதை
வன்மை வழியில் மாந்தர் சென்றால்
. வாடும் மனமே கவிதை
பெண்மைக் கொருவன் பின்னம் செய்தால்
. பிடரி சிலிர்த்தல் கவிதை
தொன்மை மரபில் துளிர்க்கும் புதுமைத்
. துள்ளல் யாவும் கவிதை!   (3)


பார்க்கும் பொருளில் பார்ப்போன் கலந்து
. பார்வை ஆதல் கவிதை
தீர்க்க மான தேடல் விளைக்கும்
. தெளிவின் வெளிச்சம் கவிதை
ஆர்க்கும் சொற்கள் ஓய்ந்த பின்னர்
. அமையும் அமைதி கவிதை
மார்க்கம் தேடி வெற்றி கண்ட
. மனத்தின் ராகம் கவிதை     (4)

இசையுள் கார்வை போலக் கவிதை
. இழைந்து மீட்ட வேண்டும்
கசையைப் போலச் சொல்லைச் சொடுக்கிக்
. கவனம் ஈர்க்க வேண்டும்
நிசமும் புனைவும் கைகள் கோத்து
. நேர்மை ஒளிர வேண்டும்      
திசைகள் எட்டும் எதிரொ லிக்கும்
. சிந்தை மேன்மை வேண்டும்      (5)

பழமைத் தமிழின் விழுமம் யாவும்
. பழுது போக வில்லை !
அழகுத் தமிழின் ஓசை இன்பம்
. அதுவும் மறைய வில்லை!
செழுமை புனைவும் உணர்ச்சி சேர்த்துச்
. செய்யுள் எழுத வாங்க!
நிழலை ஒதுக்கி நேர்த்திப் பாடல்
. நிறைய எழுத வாங்க!      (6)


பசுபதி 

[ வாட்டர்லூ தமிழ் அரங்கம் , கனடா ; புத்தாண்டுக் கவியரங்கம், 2006 ]

தொடர்புள்ள பதிவுகள்:

கவிதைகள்

வெள்ளி, 10 ஜூலை, 2015

சசி -11: குடியிருக்க ஓர் இடம்

குடியிருக்க ஓர் இடம்
சசி



நான் குடியிருந்த வீட்டைக் காலி செய்யும்படி வீட்டுக்காரன் வெகு கண்டிப்பாகச் சொல்லி மூன்று மாதங்களுக்கு மேலாகியும், நான் வீட்டைக் காலி செய்யக்கூடவில்லை. வேறு வீடு கிடைத்தால் அல்லவா காலி செய்வதற்கு? நானும் எங்கெல்லாமோ தேடிப் பார்த்துவிட்டேன்; எங்கேயும் வீடு காலியாவதாகத் தெரியவில்லை. எனவே, ''கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்களேன், தயவுபண்ணி'' என்று தினம் பத்துத் தடவை வீட்டுக்காரன் காலில் விழுந்து கேட்டுக்கொள்ள வேண்டியிருந்தது.

இந்தச் சமயத்தில் ஊரிலிருந்து வந்த என் நண்பர் ஒருவர் எனக்கு ஒரு அபூர்வமான யோசனை சொல்லிக் கொடுத்தார். அதாவது, 'மாஜிஸ்ட்ரேட் கோர்ட்'டுக்குத் தினம் போய் வந்தால், யாருக்கு நீண்ட நாள் சிறைவாச தண்டனை கிடைக்கிறதென்று தெரிந்து கொள்ளலாம் என்றும், அந்த ஆசாமியின் வீட்டுக்கு வாடகைக்குப் போய்விடலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த யோசனை ரொம்பவும் சரியானதென்று எனக்கும் தோன்றியதால், நான் அன்று முதல் தினந்தவறாமல் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டுக்குப் போய் வரும் வழக்கத்தை ஆரம்பித்துக்கொண்டேன். நல்லவேளையாக, முதல் வாரத்துக்குள்ளாகவே நான் எதிர்பார்த்த பலனும் கிட்டிவிட்டது. ஆமாம்! ஒரு பாங்கியில் நுழைந்து கொள்ளையடித்த குற்றத்துக்காக வேலாயுதம் என்ற ஆசாமிக்கு இரண்டு வருஷக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பைக் கேட்டதும் எனக்கு ஒரே குதூகலமாகிவிட்டது. 'மாஜிஸ்ட்ரேட் நீடூழி வாழட்டும்!' என்று அவரையும் வாழ்த்திவிட்டு, அங்கிருந்த ஒரு சிப்பந்தியை அணுகி, ''கைதி வேலாயுதத்துடன் அவசரமாக ஒரு நிமிஷம் பேச வேண்டுமே!'' என்றேன்.

''அதற்கென்ன! பேஷாகப் பேசுங்களேன்!'' என்று அவர் என்னை அழைத்துக்கொண்டு போய் வேலாயுதத்தின் முன்னால் நிறுத்தினான்.

''வேலாயுதம்! உங்களுக்கு இம்மாதிரி தண்டனை கிடைத்ததைப் பற்றி நான் ரொம்பவும் வருத்தப்படுகிறேன்'' என்று கண்ணில் நீரை வரவழைத்துக்கொண்டு கூறி னேன்.

ஆனால், அவன் சற்றுக்கூட மனம் கலக்கமடைந்தவனாகத் தெரியவில்லை. ''தண்டனைஅடைந்த நானே சந்தோஷத்தோடு இருக்கும்போது நீங்கள் ஏன் சார் வருத்தப்பட வேண்டும்?' என்று என்னைக் கேட்டான்.

எனக்கு அந்தக் கேள்வி மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கவே, ''உங்களுக்கு என்னமாக சந்தோஷம் ஏற்படமுடியும்?'' என்று கேட்டேன்.

''என்னைப்போல் நீங்களும் குடியிருக்க வீடு கிடைக்காமல் திண்டாடிவிட்டுக் கடைசியில் உங்களுக்கு இம்மாதிரி இரண்டு வருஷம் நிம்மதியாகக் குடியிருக்க ஒரு சிறை கிடைத்தால், அப்போது தெரியும் ஏன் சந்தோஷம் உண்டாகாதென்று!'' என்றான்.

''அப்படியானால் காலி செய்ய உமக்கு வீடு எதுவும் இப்போது இல்லையா?'' என்று கேட்டேன்.

''வீடு இருந்தால், நான் ஏன் சார் அநாவசியமாக ஒரு திருட்டுக் குற்றத்தில் வேண்டுமென்றே மாட்டிக்கொண்டு இங்கே வருகிறேன்? ஏன் சார் முழிக்கிறீங்க? உங்களுக்கும் வீடு அகப்படாமல் தவிக்கிறீர்களா, என்ன? அட! ஒன்றுக்கும் பயப்படாதீர்கள் சார்!'' என்று அவன் எனக்குத் தேறுதல் கூறினான்.

[ நன்றி: விகடன் ] 

தொடர்புள்ள பதிவுகள்;




திங்கள், 6 ஜூலை, 2015

கவி கா.மு.ஷெரீப் -1

யார் கவிஞன்? 
கவி கா.மு.ஷெரீப் 



ஜூலை 7.  கவி கா.மு.ஷெரீப்பின் நினைவு தினம்.

2014-இல்  கவி கா.மு.ஷெரீப்பின் நூற்றாண்டு விழா கொண்டாடப் பட்டது. அப்போது வந்த தமிழ் இந்து கட்டுரை யைப் படித்தவுடனேயே நானும் ஒரு பதிவை இடவேண்டும் என்று தோன்றியது. ஆனால் தாமதம் தவிர்க்க முடியவில்லை . அன்பர்கள் மன்னிக்கவும்.

இதோ அவர் ‘ தமிழ் முழக்கம்’ பத்திரிகையில் 1955-இல் எழுதிய ஒரு கட்டுரை . கட்டுரையில் அவருக்குப் பிடித்த சில கவிதைகளையும் குறிப்பிடுகிறார்!












































[ நன்றி : தமிழ் முழக்கம்,  தமிழம் வலை www.thamizham.net  ]

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:

கவி கா.மு.ஷெரீப்