ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

தி.ஜானகிராமன் -1

பூட்டுகள்

தி.ஜானகிராமன் பிப்ரவரி 28. தி.ஜானகிராமனின் பிறந்தநாள்.

இந்தவருட ‘ஆஸ்கர்’ விழாவைத் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டே இந்தத் ‘தமிழ் ஆஸ்கர்’ எழுத்தாளரின் நினைவில் அவருடைய ஒரு கட்டுரையை இங்கிடுகிறேன்.

கோபுலுவின் சித்திரம் ஒரு ‘போனஸ்’. ( மூலப் படங்கள் இல்லாத அச்சு நூல்களைப் படிக்கவே எனக்கு வரவரப் பிடிக்கவில்லை!)

“அபூர்வ மனிதர்கள்” தொடர் தினமணி கதிரில் 1982-இல் வந்தது. அதன் முதல் கட்டுரை இது!
 [ நன்றி: தினமணி கதிர் ]

தொடர்புள்ள பதிவுகள்:

தி.ஜானகிராமன்

சனி, 27 பிப்ரவரி, 2016

திருப்புகழ் -10

திருப்புகழ் ; ஒரு எழுத்தாளர் பார்வையில் 

சுஜாதா 

பிப்ரவரி 27. சுஜாதா அவர்களின் நினைவுதினம்.

[ நன்றி: விகடன் ] 

அவர் நினைவில், அவருடைய பல விசிறிகளும் படித்திருக்க மாட்டாத, அவருடைய ஒரு கட்டுரையை இங்கிடுகிறேன் !

இது “ திருப்புகழ் கருவூலம்” என்ற மலரில் 88-இல் வெளியானது. “திருப்புகழ் அன்பர்கள்” ( கருநாடக மாநிலம்) வெளியிட்ட மலர்.
===
தொடர்புள்ள பதிவுகள்:
சுஜாதா
திருப்புகழ்

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

உ.வே.சா - 5

மூன்று மகாமகங்களும், கும்பகோண புராணமும் 

உ.வே.சாமிநாதய்யர்


”என் சரித்திர”த்தில் மூன்று மகாமகங்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார் உ.வே.சா.  “மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின்  சரித்திர” த்திலும் ஒரு சிறிய பகுதி உள்ளது.  அக்காலப் பழக்க வழக்கங்களை அறிய அப்பகுதிகளை இங்கிடுகிறேன்.

[ சில்பி, நன்றி: விகடன்,  மகாமகம் 1945 ] 


1873 

[ ஆங்கிரஸ வருஷம் (1873). உ.வே.சா. பெரிய புராணத்தில் கண்ணப்ப நாயனார் புராணத்தைப் பாடம் கேட்டு வருகையில், அவருக்குப் பெரியம்மை பூட்டி விடுகிறது. அதனால் உ.வே.சா தன் அம்மானின் ஊராகிய சூரியமூலைக்கு ( திருவாவடுதுறைக்கு வடக்கே உள்ள ஊர்)  சென்றுவிடுகிறார்.   அந்த வருடம் நடந்த மகா மகத்தைப் பற்றி இப்படி “என் சரித்திரத்”தில் எழுதுகிறார். ]


அந்த வருஷம் (1873) மகாமக வருஷம். மகாமக காலத்தில்
கும்பகோணத்திற் பெருங்கூட்டம் கூடுமென்றும் பல வித்வத்சபைகள்
நடைபெறும் என்றும் கேள்வியுற்றிருந்தேன். ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் தம்
பரிவாரங்களுடன் சென்று தங்குவாரென்றும், பல வித்துவான்கள் அவர் முன்
கூடுவார்களென்றும், பிள்ளையவர்களும் அவருடன் போய்த் தங்குவாரென்றும் அறிந்தேன். “நம்முடைய துரதிர்ஷ்டம் எவ்வளவு கொடியது! பன்னிரண்டு வருஷங்களுக்கு ஒருமுறை வரும் இவ்விசேஷத்துக்குப் போய் வர நமக்கு முடியவில்லையே! பிள்ளையவர்களைச் சார்ந்தும் அவர்களோடு சேர்ந்து இப்புண்ணிய காலத்தில் நடக்கும் விசேஷங்களைக் கண்டு களிக்க முடியாமல் அசௌக்கியம் நேர்ந்து விட்டதே!” என்றெல்லாம் நினைந்து நினைந்து வாடினேன்.

சூரிய மூலையிலிருந்து சிலர் மகா மகத்துக்குப் போய் வந்தனர். அங்கே
சுப்பிரமணிய தேசிகரும் பிள்ளையவர்களும் வந்திருந்தார்களென்றும் * பல பல விசேஷங்கள் நடைபெற்றனவென்றும் அவர்கள் வந்து சொல்ல எனக்கும்
இயல்பாகவே இருந்த வருத்தம் பின்னும் அதிகமாயிற்று.( *  இந்த விசேஷங்கள் என்ன  என்பதை உ.வே.சா.  “மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரத்”தில் சிறிது சொல்கிறார்.   “ தமிழ்நாட்டின் பல பாகங்களிலுள்ள ஜமீந்தார்களும் மிட்டாதார்களும் பிரபுக்களும் சிஷ்யகோடிகளும் வித்துவான்களும் அங்கு வந்து தேசிகரைத் தரிசித்து மகிழ்வடைந்தார்கள்; அந்த நகரிலுள்ள சைவப் பிரபுக்களிற் பலர் மகேசுர பூஜையும், பட்டணப் பிரவேசமும் மிகவும் சிறப்பாக நடத்தி வைத்தார்கள். சுப்பிரமணிய தேசிகர் ஒரு பெரிய சபை கூட்டி வித்துவான்களுக்கெல்லாம் ஏற்றபடி ஸம்மானம் செய்தனர். வந்தவர்களில் தமிழ்ப் பாஷையில் அபிமானமுள்ள பெரும்பாலோர் இவரைப் ( பிள்ளையவர்களைப்)  பார்த்து இவரின் வாக்கின் பெருமையையும் அருமையையும் பாராட்டித் தங்களுடைய இடத்திற்கு வந்து சிறப்பிக்க வேண்டுமென்று இவரைக் கேட்டுக்கொண்டு சென்றனர். “  ) 

1885

தாருண வருஷம் மாசி மாதம் (1885 மார்ச்சு) மகாமகம் வந்தது.
அப்போது கும்பகோணத்தில் அளவற்ற ஜனங்கள் கூடினர். தியாகராச
செட்டியாரும் வந்திருந்தார். திருவாவடுதுறையிலிருந்து ஸ்ரீ சுப்பிரமணியதேசிகர் பரிவாரத்துடன் விஜயம் செய்து கும்பகோணம் பேட்டைத் தெருவிலுள்ள தங்கள் மடத்தில் தங்கியிருந்தனர். பல கனவான்களும் வித்துவான்களும் வந்து அவரைக் கண்டு பேசி இன்புற்றுச் சென்றனர். அக்காலத்திலெல்லாம் நான் தேசிகருடனே இருந்து வந்தேன். அதனால் பல புதிய மனிதர்களை அறிந்து கொள்ளும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது.

மடத்தின் ஆதரவில் வளர்ந்த எனக்கு என் உத்தியோக
வருவாயிலிருந்து தக்க சமயத்தில் ஏதேனும் ஒரு தர்மம் மடத்தில் நடத்த
வேண்டுமென்று ஓர் எண்ணம் இருந்தது. அதனை மகாமக காலத்தில்
நிறைவேற்றினேன். சுப்பிரமணிய தேசிகரிடம் நூறு ரூபாய் கொடுத்து,
“மடத்தில் மகேசுவர பூஜையில் ஒரு பாகத்துக்கு வைத்துக்கொள்ள வேண்டும்” என்று சொன்னேன். தேசிகர் மிகவும் மகிழ்ந்து. “மடத்துப் பிள்ளையாகிய நீங்கள் இப்படிச் செய்ய வேண்டியது அவசியமில்லையே” என்றார். நான் உசிதமாக விடை அளித்தேன். மகாமக விழா முடிந்தபின் திருவாவடுதுறைக்குத் திரும்புகையில் என் தந்தையாருக்கும் எனக்கும் பீதாம்பரங்களும், என் குமாரன் சிரஞ்சீவி கல்யாணசுந்தரத்திற்குச் சந்திரஹாரமென்னும் பொன்னாபரணமொன்றும் அளித்தார்.

1897

உத்தம சம்பாவனை

1897-ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் மகாமகம் நடந்தது. அப்போது
கும்பகோணத்திற் கூடிய கூட்டம் கணக்கில் அடங்காது. திருவாவடுதுறை
ஆதீனகர்த்தராக விளங்கிய அம்பலவாண தேசிகர் தம்முடைய
பரிவாரங்களுடன் கும்பகோணம் பேட்டைத் தெருவிலுள்ள மடத்தில் விஜயம்
செய்திருந்தார். பல தேசங்களிலிருந்தும் பிரபுக்களும் வித்துவான்களும் வந்து
கூடினர்.

அப்போது தினந்தோறும் அம்பலவாண தேசிகருடைய முன்னிலையில்
வித்துவான்களுடைய உபந்நியாசங்களும் சல்லாபங்களும் நடைபெற்றன. ஒரு நாள் மிகச்சிறந்த வித்துவான்களைப் பூசித்து உத்தம சம்பாவனை செய்வதாக ஏற்பாடாகியிருந்தது. அம்பலவாண தேசிகர் ஆறு ஆசனங்களைப் போடச் சொல்லிப் பிரசித்தமான ஸம்ஸ்கிருத வித்துவான்கள் ஐவரை ஐந்து ஆசனங்களில் அமரச் செய்தார். அவர்கள் அமர்ந்த பிறகு என்னை நோக்கி “அந்த ஆசனத்தில் இருக்க வேண்டும்” என்று ஆறாவது ஆசனத்தைக் காட்டினார்.

எனக்குத் துணுக்கென்றது. வாழ்நாள் முழுவதும் சாஸ்திரப் பயிற்சியிலே
ஈடுபட்டு எழுத்தெண்ணிப் படித்துத் தாம் கற்ற வித்தைக்கே ஒளியை
உண்டாக்கிய அந்தப் பெரியவர்கள் எங்கே! நான் எங்கே? நான்
யோசனைசெய்து நிற்பதை அறிந்த தேசிகர், “என்ன யோசிக்கிறீர்கள்?
அப்படியே இருக்க வேண்டும்” என்றார். “இவர்களுக்குச் சமானமாக இருக்க
எனக்குத் தகுதி இல்லையே” என்றேன். தேசிகர், “தகுதி உண்டென்பதை இந்த
உலகம் அறியும். இவர்களைப் போன்ற மகா வித்துவான்கள் இந்த நாட்டில்
தேடிப்பார்த்தால் ஒருவேளை கிடைத்தாலும் கிடைப்பார்கள். தங்களைப் போல ஒருவர் அகப்படுவது அரிது” என்று அன்பொழுகக் கூறி வற்புறுத்தவே அந்த மகா மேதாவிகளுடைய வரிசையிலே பணிவோடு அமர்ந்தேன். இரட்டைச் சால்வையும் சம்மானமும் பெற்றேன். மணிமேகலையில் மேற்கொண்ட உழைப்பே அந்தப் பெருமைக்குக் காரணமென்று நான் எண்ணி இறைவன் திருவருளை வாழ்த்தினேன்.

கும்பகோண புராணம் 

கும்பகோண புராணத்தைப் பிள்ளையவர்கள் 1865-இல் இயற்றத் தொடங்கினார்; 1866-இல் அந்நூல் அச்சிடப் பட்டது. அதைத் “திருக்குடந்தைப் புராணம்” என்றும் சொல்வர்.

அதில் சிவபெருமான் அமுதகும்பத்தில் தோன்றியதைப் பற்றிக் கூறும் அழகான செய்யுள்களில் ஒன்று;

மேடமூர் மதலை கடகமென் மலர்க்கை 
. . விளங்கருஞ் சிங்கமென் மருங்குல் 
ஆடக மகரக் குழைச்செவி மீனம் 
. . அடுவிழி படைத்துலாங் கன்னி 
மாடமர் தரவ விருச்சிக மிதுனம் 
. . மரூஉந்தனு வதுவென வடியார்க் 
கூடவோ  ரிடபந் தோன்றிடும் பொருளோர் 
. . கும்பத்துத் தோன்றிய தன்றே  

[ மாடு அமர்தர அவிர் உச்சி கம் மிதுனம் மரூஉம் தனுவதுவென; கம் மிதுனம் மரூஉம் தனுவதுவென - மேகத்தையும் மிதுன ராசியையும் பொருந்தும் உயர்ச்சியையுடைய வில்லாகிய மேருமலையைப் போல,
இச்செய்யுளில் பன்னிரண்டு இராசிகளின் பெயர்களும் தொனித்தல் காண்க. ]
                          [  “மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் “ ] 

===========

தொடர்புள்ள பதிவுகள்: 

உ.வே.சா


மகாமகம் - 1945,1956

சனி, 20 பிப்ரவரி, 2016

மகாமகம் - 1945,1956

மகாமகம் 

[ சில்பி, நன்றி: விகடன் ] 


2016-ஆம் ஆண்டில் மகாமகம் பிப்ரவரி 13, 14 நாட்களில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முந்தைய இரு மகாமகங்களைப் பற்றி விகடனில் வந்த சில தகவல்கள், கட்டுரைகள் இதோ! 

1) 

”பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கும்பகோணம் மகா மக உற்சவம் 1945-இல் நடந்தது.. நேரில் சென்று அந்த உற்சவத்தில் கலந்துகொண்டு, அது பற்றிய ஒரு தொடர் கட்டுரையை வழங்கியுள்ளார் 'கதிர்'.” என்கிறது விகடனின் காலப் பெட்டகம் நூல்.

அந்தக் கட்டுரையிலிருந்து ஒரு பகுதியைத் தருகிறது அதே நூல்.
( “கதிர்” என்பவரின் இயற்பெயர் வெங்கடராமன் )  
மகா விசேஷம் -'கதிர்'

” மகாமக தாத்பர்யத்தைப் பற்றிப் படித்தபோது, கட்டாயம் அங்கு போய்த்தான் தீர்வது என்று நான் தீர்மானம் செய்துகொண்டேன்.
கங்கை, யமுனை, கோதாவரி, காவேரி, நருமதை, ஸரஸ்வதி, குமரி, பயோஷ்ணீ, சரயூ ஆகிய ஒன்பது நதிகளும் கன்னி ரூபத்தில் ஒரு சமயம் சர்வேச்வரனை நாடிச் சென்றார்களாம். ஈசுவரன் இந்த நவ கன்னிகைகளையும் ஆசீர்வதித்து, ''என்ன குழந்தைகளே விசேஷம்? எங்கே இப்படி ஒன்பது பேருமாகக் கிளம்பினீர்கள்?'' என்று கேட்டார்.
''பிரபுவே! தங்களுக்குத் தெரியாததல்ல. உலகில் பாவ கிருத்யங்கள் அதிகரித்து வருகின்றன. பக்தர்களாயிருப்பவர்கள் தங்களுடைய பாவங்களைப் போக்கிக் கொள்வதற்காக எங்கள் நதிகளில் ஸ்நானம் செய்கிறார்கள். இதனால் அவர்களுடைய பாவங்களெல்லாம் எங்கள் மீது சுமந்து கொண்டே வருகிறது. இப்படி எங்கள் மீது சேரும் பாவச் சுமையை நாங்கள் எங்கே போய்ப் போக்கிக் கொள்வது?'' என்று கேட்டார்கள்.
அப்போது ஈசுவரன் அந்தக் கன்னிகைகளுக்குக் குடந்தை சேத்திரத்தைக் குறிப்பிட்டு, ''பன்னிரண்டு வருஷங்களுக்கு ஒருமுறை சிம்ம ராசியில் குரு சேரும்போது, அங்கு கும்ப லிங்கத்தினின்று தோன்றிய தடாகத்தில் ஸ்நானம் செய்யுங்கள். அதன் மூலம் உங்கள் பாவச்சுமையைப் போக்கிக் கொள்ளலாம்!'' என்று திருவுள்ளம் செய்தாராம். அதன்படி பன்னிரண்டு வருஷங்களுக்கொருமுறை கங்கை, யமுனை, காவேரி முதலிய கன்னிகைகள் அங்கு வந்து நீராடிச் செல்வதாக ஐதீகம். “

2)
பிறகு 56-இல் மீண்டும் ஒரு மகாமகம். ( 1956இல் மாசியிலேயே குருவும் சந்திரனும் சிம்ம ராசியில் சேர்ந்துவிட்டனர். எனவே, அந்த ஆண்டே - பதினொரு ஆண்டுகளே இடைவெளி ஆகியிருந்தபோதிலும் - மகாமகம் வந்துவிட்டது.)  


இள மாமாங்கம்!

பூமி சூரியனைச் சுற்றி வர 365 நாட்கள் ஆவதைப் போல, குரு சூரியனைச் சுற்றி வர 4332 நாட்கள் ஆகும். இது சரியாக 12 வருடங்கள் இல்லை. 11.868 வருடங்கள்தான்!
அதனால்தான் மகாமகம் சில சமயங்களில் 11 ஆண்டுகளிலேயே வந்துவிடும் என்கிறார்கள் வானியல் தெரிந்தவர்கள். 1929, 1600, 1683, 1778, 1861, 1956 வருடங்களில் பதினோரு வருட மகாமகம்தான் கொண்டாடப்பட்டதாம். இந்த மகாமகங்களை 'இளமாமாங்கம்' என்கிறார்கள்.
** 29.2.04 ஆனந்த விகடன் இணைப்பிதழிலிருந்து...

3)
1956-இல் விகடனில் வந்த ஒரு கட்டுரை இதோ! ய.மகாலிங்க சாஸ்திரி எழுதியது. [ நன்றி : விகடன் ] 

வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

உ.வே.சா. - 4

தில்லையில் ஐயரவர்கள்
ச.தண்டபாணி தேசிகர் 

” .... உடனே “பிள்ளை நகுலம் பெரும்பிறி தாக” என்று அச்சத்துடன் அரைவார்த்தையாகச் சொல்லி நிறுத்தினேன். . . .  “ நீ எப்போது சிலப்பதிகாரம் படித்தாய்? “ என்றார்கள். 

                                                 ----- ச.தண்டபாணி தேசிகர் ------------


பிப்ரவரி 19. தமிழ்த் தாத்தாவின் பிறந்த தினம்.

அவர் நினைவில், கலைமகளில் 50-களில் வந்த ஒரு கட்டுரை இதோ!

இது மகாவித்வான் தண்டபாணி தேசிகர் எழுதிய கட்டுரை.  இவர்  நன்னூல் விருத்தியுரை, திருவாசகப் பேரொளி,  மாணிக்கவாசகரின் திருக்கோவையார் மூலமும் உரையும். திருக்குறள் உரைக்களஞ்சியம். திருக்குறள் அழகும் அமைப்பும். கணபதி, முருகன், ஆடவல்லான், சக்தி, சைவத்தின் மறுமலர்ச்சி, முதல் திருமுறை, முதற்கடவுள் வினாயகர், முழுமுதற் கடவுள் நடராஜர்  என்று அறுபதுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
[ நன்றி : கலைமகள் ]

பி.கு. 1

கட்டுரையைத் தட்டச்சு செய்த வெண்பா விரும்பிக்கு நன்றி:

ஐயரவர்கள் சென்னை அரசாங்கக் கல்லூரியினின்று ஓய்வு பெற்ற பின், ராஜா ஸர் அண்ணாமலைச் செட்டியாரின் விருப்பத்திற்கிணங்கச்செட்டியாரவர்கள் சிதம்பரத்தில் புதிதாக ஸ்தாபித்த "மீனாட்சி தமிழ்க் கல்லூரி"யின் தலைவராகச் சில காலம் பணி புரிந்தனர் (இப்பணியைத் தொடங்கும் போது ஐயரவர்களுக்குப் பிராயம் சுமார் 70).  அந்தக் கல்லூரியில் முதன்முதலில் படித்தவருள் பின்வரும் கட்டுரையை எழுதிய ஸ்ரீ ச. தண்டபாணி தேசிகரும் ஒருவர்.  இவர் பிற்காலத்தில் திருவாவடுதுறை ஆதீனத்தில் "மகாவித்துவான்" பட்டம் பெற்றனர்.
*****************
*****************

தில்லையில் ஐயரவர்கள்

--- ச. தண்டபாணி தேசிகர்

சங்கீத வித்துவானுக்குச் சாரீரம் வாய்ப்பது அதிருஷ்டம்.  வாணிகனுக்குச் சரக்குக் கிடைப்பது அதிருஷ்டம்.  முதலாளிக்கு நம்பிக்கையான பணியாள் கிடைப்பது அதிருஷ்டம்.  ஆடவனுக்கு நல்ல மனைவி கிடைப்பது அதிருஷ்டம்.  மாணவர்க்கு நல்ல ஆசிரியர் கிடைப்பது அதிருஷ்டம்.  அதுபோல எங்கள் அறிவியல் வாழ்விலும் 1924 - ஆம் ஆண்டு அதிருஷ்டத் தெய்வம் குடியேறத் தொடங்கியது.

யார் மூலமாகஅப்போது கூடிய மாணவர்களாகிய நாங்கள் ஏதோ ஓரளவு சம வித்துவான் தேர்ந்தவர்களும், நல்ல அறிஞர்களிடம் முறையாகப் பாடங் கேட்டவர்களுமாகத்தான் இருந்தோம்.  ஆனாலும் அறிவில் விளக்கம், தெளிவு, எழுத்து வன்மை, கட்டுரைத் தெளிவு இல்லை.  எல்லாம் கலக்கம்.  அந்த நிலையில் தெளிவும் விளக்கமுமாக அதிருஷ்டத் தெய்வம் எங்களை அணுகிற்று.  அங்ஙனம் அணுகச் செய்தவர் பெருங்கொடை வள்ளலாகிய ராஜா ஸர் அண்ணாமலைச் செட்டியார் அவர்கள்.  செட்டியார் அவர்கள் முதல் முதல் நாதப் பிறப்பிடமாகிய சிதம்பரத்தில் ஞானக் கோயில் கட்டத் தொடங்கினார்கள்.  அதில் மூன்று சத்திகளை நிலைபெறுவித்தார்கள்.  ஒரு சத்தி தமிழ் ஞானத்தாய்; மற்றொரு சத்தி வடமொழி கலாரூபிணி; மற்றொரு சத்தி ஆங்கில லட்சுமி.  இம்மூவரை முறையே பூசித்து விளக்கம் செய்து பயில்வார்க்குப் பயன்பெறுவிக்க மூன்று குருமார்களை நிறுவித் தந்தார்கள்.  அவர்களுள் தமிழ் ஞானத் தாயின் அர்ச்சகராக, பயில்பவருக்கு ஆசிரியராக அமர்த்தப்பெற்றவர்கள் மகாமகோபாத்தியாய ஐயரவர்கள்.  எங்கள் அதிருஷ்டத் தெய்வந்தான் ஐயரவர்கள்.

ஐயரவர்கள் குருமூர்த்தியைவிடக் கொஞ்சம் மிஞ்சியவர்கள்.  ஆதிகுருநாதராகிய தட்சிணாமூர்த்திக்கு அப்போது இவ்வளவு பெரிய உலகத்தில் நாலு மாணவ்ர்கள்தாம் கிடைத்தார்கள்.  ஐயா அவர்களுக்கு நாங்கள் ஆறு மாணவர்கள் கிடைத்தோம்.  வித்துவான் வகுப்பு 1924, ஜூலை மாதம் தொடங்கி நடைபெற்று வந்தது.  இடையில் ஒருவர் எங்கள் அறிவுப் பயணத்தில் புத்தகச் சுமையைச் சுமந்து வரமாட்டாமையால், மூன்று மாதத் தேர்வுச் சாவடியிலேயே நின்று விட்டார்.  அப்படிக் கழிந்தும் கடைசிவரையில் ஐந்து பேரை மாணவராகக் கொண்டு ஐயா அவர்கள் குருமூர்த்தியாக விளங்கினார்கள்.  அப்போது புகுமுக வகுப்பும் தொடங்கியது.  வகுப்பு இரண்டு.  ஆசிரியர் ஐயா அவர்கள் மட்டுந்தான்.  இன்னொருவரைச் சேர்க்க வேண்டும் என்பது நிர்வாகிகள் எல்லாருடைய எண்ணமுமாயிற்று.  இச்செய்தி காற்று வாக்கிற் பரவியது.
ஐயரவர்களுக்கோ, தம்மோடு ஒத்துத் தமிழ்க் கோயிலில் பணிபுரியத் தக்கவர் திருவாவடுதுறை ஆதீனத்துப் புத்தகசாலையில் (சரஸ்வதி மஹாலில்) பணி செய்யும் பொன்னோதுவா மூர்த்திகளே என்ற எண்ணம் இருந்தது.  தாட்சிண்ணியத்திற்காகவாவது, பிற காரணங்களுக்காகவாவது தமிழ்ப் பணியில் கண்டவர்களை ஈடுபடுத்துவது, ஐயா அவர்களுக்குப் பிடிக்காது.  பொன்னோதுவா மூர்த்திகள் வரச் சில மாதங்கள் தாமதமாயின.  இந்த அவகாசத்தைப் பயன்படுத்திக்கொள்ளப் பலர் முயன்றனர்.  அவர்களில் ஒருவர் திருவையாற்று அரசர் கல்லூரியில் சம வித்துவான் மூன்றாம் வகுப்பில் தேர்ந்தவர்.  அவர் ஊரையோ பெயரையோ இப்போது நினைவு கூரவேண்டிய அவசியம் இல்லை.  கல்லூரியில் தேர்ந்தவுடனே இக்கல்லூரியை நாடி வந்தார்.

ஒரு நாள் காலை ஒன்பது மணி இருக்கும்.  ஐயா அவர்களை வீட்டிற் சென்று பார்த்துவிட்டுக் கல்லூரிக்கும் வந்தார்.  பத்து மணிக்குக் கல்லூரி தொடங்கியது.  முதல் மணி அருணைக் கலம்பக வகுப்பு.  அவரும் வந்து ஒரு பக்கம் உட்கார்ந்தார்.  ஐயா அவர்கள் எங்களுக்கு அவரை அறிமுகப் படுத்தி வைத்தார்கள்.  எங்களையும் அவருக்கு அறிமுகப் படுத்தி வைக்கத் தொடங்கி ஒவ்வொருவராக, "இவர் சென்ற ஆண்டே திருவையாற்றில் சம வித்துவான் தேர்ந்தவர்.  இவர் சுன்னாகம் குமாரசாமிப் புலவர் மாணாக்கர்.  இவர் சங்கரபண்டிதர் மாணவர்.  இவர் நெடுநாட்களாக என்னிடமே இருப்பவர்.  இவர் நாவலர் கலாசாலையில் படித்துப் புகுமுகம் தேர்ந்தவர்" என்று தெரிவித்து, "இவர்கள் எல்லாரும் இங்கே மாணவர்கள்" என்று சொல்லி நிறுத்தினார்கள்.  பின்பு பாடம் தொடங்கியது.  அன்றைப் பாடம், "இந்திர கோபமாம் இதழி பாகனார், செந்தமிழ் அருணைநந் தேரும் செல்லுமே" என்ற பகுதி.  இதற்கு ஐயா அவர்கள் வழக்கம் போல விளக்கந் தந்துவிட்டுப் பதவுரை கூறத்
 தொடங்கினார்கள். இதிற் பங்குபற்ற விரும்பி, வந்தவர், "இதழி கொன்றைதானே"என்றார்.

ஐயரவர்களின் முகத்தில் புன்சிரிப்புத் தவழ்ந்தது.  எங்களுக்குக் கடுங்கோபம்.  இந்த நிலையில் ஐயா அவர்கள் அவரைப் பார்த்து, "தாங்கள் சொல்வது சரிதான்.  அது அகராதிப் பொருள்.  அகராதியிலுள்ள இதழி இயற்கைப் பொருள்.  இது கவிஞன் படைத்துக்கொண்ட சொல்.  இதெல்லாம் அகராதியில் எங்கே இருக்கப்போகிறது?" என்று சொல்லிவிட்டுப் பாடத்தை நடத்தினார்கள்.  இதற்கிடையில் ஒரு சிறு குழப்பம் உண்டாயிற்று.  ஐயரவர்கள் இருந்து பாடஞ் சொன்ன இடத்திற்குப் பின்புறம் ஓர் அறை.  அதிலிருந்து ஒரு கீரிப் பிள்ளை எங்கள் மேல் விழுந்தடித்துக்கொண்டு ஓடிற்று.

நாங்கள் பயந்துகொண்டு எழுந்து அசைந்து கொடுத்தோம்.  வகுப்புத் தடைப்பட்டது.  ஐயா அவர்கள் ஓடுகின்ற கீரியைப் பார்த்து, "என்னஇங்குமா வந்துவிட்டாய்ஒன்றுபட்டவர்களைப் பிரித்து வைப்பதுதான் உன் வழக்கமாயிற்றே!" என்று சிரித்துக்கொண்டே சொன்னார்கள்.

ஐயரவர்களுடைய வேடிக்கைப் பேச்சுக்களிலுங்கூட ஒரு மகா கவியின் சிந்தனைச் சிற்பம் நிழற் படமாக நிலவிக்கொண்டிருக்கும்.  இலக்கியங்களில் கூர்ந்த மதியுடன்  நினைவு வன்மையுடன் பழகியவர்களுக்கே அந்த நிழற்படம் நன்கு விளங்கும்.  அதனை அந்த ஆறு மாதங்களுக்குள் பல முறை அனுபவித்தவர்கள் நாங்கள்.  ஆதலால் இந்த வேடிக்கைப் பேச்சும் ஒரு விஷயத்தை உள்ளடக்கியதாக இருக்க வேண்டுமே என்று எண்ணி நாங்கள் அறிந்த அளவு இலக்கியக் கருவூலத்தில் புகுந்து தேடிக் கொண்டிருந்தோம்.  கீரியால் கலவரப்பட்டிருந்த எங்கள் கருத்தை மீட்டும் அறிவுலகில் திருப்ப ஐயரவர்கள் கையாளும் முறை இப்படித்தான் இருக்கும்.  சிந்தித்தோம்.  வந்தவரைப் பார்த்து, "தங்களுக்கு ஞாபகம் இருக்கலாமே!" என்றார்கள்.

அவரும் எங்களைப் போலத்தான் வானை நோக்கிக்கொண்டிருந்தார்.  மீட்டும் எங்களைப் பார்த்து, "என்ன, புலப்படவில்லையாஉலகில் எதனைப் பார்த்தாலும் அதனை அறிவுலகில் ஒப்புத் தேடும் உணர்ச்சியும் பெருகவேண்டும்.  அப்போதுதான் இலக்கியம் எப்பொழுதும் நமக்குச் சொந்தமாக இருக்கும்" என்று உபதேசவுரை வழங்கினார்கள்.

இந்த உபதேசம் எங்களுக்குச் சுருக்கென்று தைத்தது.  உணர்ச்சி பிறந்தது.  நினைவு வந்தது.  உடனே அடியேன், "பிள்ளை நகுலம் பெரும்பிறி தாக" என்று அச்சத்தால் அரை வார்த்தையாகச் சொல்லி நிறுத்தினேன்.

ஐயா அவர்கள், "எங்கே, முழுவதும் சொல்.  இடத்தையும் சொல், பார்க்கலாம்" என்றார்கள்.  ஆணையின்படி நடந்தேன்.  "நீ எப்போது சிலப்பதிகாரம் படித்தாய்?" என்றார்கள்.  அவர்கள் குறிப்பைத் தெரிந்துகொண்ட அடியேன், "சென்ற ஆண்டு திருவையாற்றில் சம வித்துவான் முடிவு நிலை (Final) க்காகப் படித்தேன்" என்று தெரிவித்துக்கொண்டேன்.

"அப்படியாசந்தோஷம்.  மாணவர்களாக இருந்தால் ஞாபகம் வைத்திருக்க வேண்டியது அவசியந்தான்" என்றார்கள்.  இந்தத் தொடரின் ஆழத்தை அனுபவித்துக்கொண்டே இருந்தோம்.  வந்தவர் மாலை வீட்டில் வந்து ஐயாவைப் பார்ப்பதாகச் சொல்லிவிட்டுச் சென்றார்.  சென்றவர் வரவே இல்லை.
மற்றொரு நாள்.  இதனோடு ஒத்த கல்வி நிலையத்தின் ஆண்டு விழா நடந்தது.  அதற்கு மாணவர்களுடன் வரவேண்டும் என்று ஐயா அவர்களை அழைத்திருந்தார்கள்.  அப்படியே ஐயாவுடன் சென்றோம்.  அங்கே விழா மிருச்சகடிகம் என்ற நாடகத்துடன் முடிவதாக இருந்தது.  அந்த நிலையம் மிக நெருக்கடியான சிறிய இடம்.  நாடகப் பிரியர்களின் கூட்டத்தால் உள்ளே நுழையவே முடியவில்லை.  ஐயாவை மட்டும் கஷ்டப்பட்டு அழைத்துப் போய்விட்டார்கள்.  எங்களைக் கவனிப்பார் இல்லை.  அந்நிலையில் எதிர் வீட்டுத் திண்ணையிலேயே உட்கார்ந்திருந்தோம்.

எங்காவது கூட்டங்களுக்குப் போனால் ஐயா அவர்கள் மாணவர்களை விட்டுப் போவது வழக்கம் இல்லை.  மாணவர்களுக்குச் சிறு அவமரியாதை நிகழுமாயினும் அதனைக் குறிப்பாக எடுத்துக் காட்டி விட்டு வந்துவிடுவது வழக்கம்.  அதுபோலவே அன்று கால் மணி நேரமாயிற்று.  நாங்கள் வெளியில் காத்துக்கொண்டிருந்தோம்.  உள்ளே எங்களில் யாராவது காணப்படுகிறோமா என்று கவனித்தார்கள்.  இல்லை யாகவே புறப்பட்டு வெளியில் வந்து விட்டார்கள்.  எங்களையும் அழைத்துக் கொண்டு கல்லூரிக்கே வந்துவிட்டார்கள்.  பாடமும் நடந்துகொண்டிருந்தது.

அப்போதுதான் துணை நிலையத்தில் இருந்த தலைமையாசிரியர் அவர்கள், "எங்கே, ஐயரவர்கள் வெளியிற் சென்றவர்கள் வரவே இல்லையே" என்பதைக் கவனித்தார்.  போய்விட்டார்கள் என்பதை அறிந்ததும் உடனாசிரியரை அனுப்பி அழைத்துவரச் சொன்னார்.

ஐயா அவர்கள் அவரிடம், "மக்களாலேயே தலைவன் மன்னனாகிறான்.  மாணாக்கர்களாலேயே நாம் ஆசிரியர்களாகிறோம்.  அங்கே தமிழுக்கு நெருக்கடியாக இருக்கிறது.  பிறகு பார்த்துக் கொள்ளுவோம்" என்று பிடிவாதமாகச் சொல்லிப் போகச் சொல்லிவிட்டார்.

எங்கள் மனநிலையை அப்போது பார்க்க வேண்டுமே!  உடம்பெல்லாம் புல்லரித்தது ஒன்று தான் எங்கள் நிலையை உணர்த்தியது எனலாம்.  'நம் மாணாக்கர்களைக் கவனியாத இடத்திலே நமக்கும் ஈடுபாடு வேண்டாம்' என்ற உறுதி எல்லாருக்கும் உண்டாகுமா?
இப்படிப்பட்ட உலகியல் நடைமுறை எத்தனையோ அவர்களிடம் நாங்கள் கற்றுக் கொண்டதுண்டு.  மறுப்புக்கள் எழுதுவதில் எனக்கு ஓர் அலாதிப் பிரியம் இருந்தது.  அது இளமையின் நிலைமை.  அது வளர்ச்சியைக் கெடுக்கும் என்று எடுத்துக் காட்டிச் சத்தியமும் வாங்கிக்கொண்டு அவர்கள் என்னை வழிப்படுத்திய கதை மிகப் பெரியது.  அவ்வண்ணமே அவர்கள், "சொல்வளம் சுருக்கு, கைவளம் பெருக்கு" என்ற மந்திர உபதேசம் மறக்க முடியாத நிகழ்ச்சி.

தில்லையில் அவர்கள் மூன்று ஆண்டுகள் இருந்து விலகுகின்ற காலத்து எழுபது மாணவர்கள் சேர்ந்துவிட்டனர்.  கல்லூரி மிகச் சிறப்பாக நடைபெற்று வந்தது.  அந்தக் கல்லூரியே இன்று கீழ்த் திசைப் பகுதியாக அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் சிறந்த உறுப்பாகத் திகழ்கிறது.  எல்லாம் அவர்கள் கை விசேடம்.


 =============== 
தொடர்புள்ள பதிவுகள்:

உ.வே.சா

வியாழன், 18 பிப்ரவரி, 2016

ராஜாஜி -3

பரம்பொருள்

ராஜாஜி 

பிப்ரவரி 18. ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் பிறந்த தினம்.

நான் சென்னையில், தி.நகரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி (வடகிளை)யின்  ஒரு மாணவன் என்பதில் மிகவும் பெருமை உள்ளவன்.

  நான்  அப்போது சில காலம் நடத்திய ஒரு கையெழுத்துப் பத்திரிகையில் ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் சிறப்பிதழும் வெளியிட்டேன்! ;-)

இதோ அதன் முகப்பு:


1950-இல் ராஜாஜி ‘கல்கி’ யில் தொடர்ந்து ‘ராமகிருஷ்ண உபநிஷதம்’ என்ற கட்டுரைத் தொடரை எழுதினார்.  நினைவில் உள்ளது. அவற்றைத் தொகுத்து ராமகிருஷ்ண மடம் பின்னர் ஒரு நூலாய் வெளியிட்டது.
அந்த நூல் எனக்கு பிப்ரவரி 26,1953-இல்  ஒரு பரிசாய்க் கிட்டியது!  அப்போது நூலின் விலை ரூ.1-4-0 !

 1950-வரை ராஜாஜியின் வீட்டின் அடுத்தவீட்டில்  தான் ( பஸ்லுல்லா ரோடில்) நாங்கள் குடியிருந்தோம்! பக்கத்து வீட்டுக்காரரின் நூல் எனக்குப் பரிசாய்க் கிடைப்பது ஒரு சுவைதானே!
அந்த நூலிலிருந்து ராஜாஜி எழுதிய முன்னுரையையும், முதல் கட்டுரையையும் இங்கிடுகிறேன்!    [ நன்றி: கல்கி, ராமகிருஷ்ண மடம் ] 

தொடர்புள்ள பதிவுகள்:

செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

ரசிகமணி டி.கே.சி. -1

ரசிகமணி மறைந்தார் 


பிப்ரவரி 16, 1954.  ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார் மறைந்த தினம். ஆம், இன்று அவர் நினைவு தினம்.

என்னை அதிர வைத்த ஒரு நிகழ்வு அது. கம்பனை அவர் மூலமும், பி.ஸ்ரீ. மூலமாகவும் அறிய முயன்றவன் நான்.

அப்போது விகடனில், கல்கியில் வந்த சில கட்டுரைகள், கவிதைகள், படங்களின் கதம்பம் இதோ!


[ நன்றி: விகடன், கல்கி ]

தொடர்புள்ள பதிவுகள்:
ரசிகமணி டி.கே.சி.

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

கொத்தமங்கலம் சுப்பு -12

கொத்தமங்கலம் சுப்பு


பிப்ரவரி 15. கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் நினைவு தினம். அவர் 1974-இல் மறைந்தவுடன் , விகடனில் வந்த கட்டுரை::


மக்களின் உள்ளத்தில் நல்ல எண்ணங்கள் பரவ வேண்டும், நம் கலாசாரங்கள் ரத்தத்தில் ஊற வேண்டும், பண்பட்ட சிந்தையில் உயரிய கருத்துக்கள் பயிராகி, நாடு செழிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் காலமெல்லாம் எழுதி வந்த அன்பர் கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் உறக்கத்திலேயே உயிர்நீத்து, இறைவனடி சேர்ந்து விட்ட செய்தி, தமிழன்னையைக் கண்கலங்கச் செய்துவிட்டது.

திரையுலகில் பணியாற்றிய போதும், பத்திரிகைகளில் எழுதிய போதும், கவியரங்குகளில் பங்கு பெற்றபோதும் சுப்பு தம் முத்திரை யைப் பதிக்காமல் விட்டதில்லை. தமது பாடல்களில், எழுத்தில், பேச்சில் தேசிய உணர்வையும், தமிழ்ப்பற்றையும், கிராமிய மணத் தையும், நகைச்சுவையையும் கலந்து நம் இதயத்தைத் தொடும் ஓர் அபூர்வ பாணியை உருவாக்கியவர் அவர்.

அவர் ஒரு கவிச்சுரங்கம். அவரது பேனாவிலிருந்து சொற்கள் சொட்டும்போதும், கருத்துக்கள் கொட்டும்போதும் குற்றால அருவி யின் சுகத்தை அனுபவிக்கலாம். 'ஒளவையார்' திரைப்படம் அவர் உண்மையான உழைப்பிற்கு ஒரு சான்று. 'காந்தி மகான் கதை' அவரது தூய உள்ளத்தின் பிரதிபலிப்பு. 'தில்லானா மோகனாம்பாள்' அவரது உன்னத கற்பனை வளத்திற்கு ஒரு சிகரம்.வாழ்க்கைப் போராட்டங்களை யும் குடும்பப் பொறுப்புக்களையும் சிரித்துக்கொண்டே சந்தித்த ஓர் அசாதாரண மனிதர் சுப்பு. பரம ரசிகர். பிறரைத் தட்டிக் கொடுத்து, உற்சாகப்படுத்தி ஊக்குவிப்பதில் இணையற்றவர்.

ஒரு நல்ல கவிஞரை, நல்ல தமிழ் அன்பரை, நல்ல மனிதரை இழந்த துயரத்தில் தமிழகம் சோகக் கண்ணீர் வடிக்கிறது.

[ நன்றி: விகடனின் காலப் பெட்டகம் ]

சுப்பு அவர்களைப் பற்றிச் சென்னையில் நடந்த ஒரு சொற்பொழிவு பற்றிய குறிப்பு இதோ:தொடர்புள்ள பதிவுகள்:

செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

உ.வே.சா. -3

மஹாமஹோபாத்தியாயரை நான் முதன்முதல் சந்தித்தது 
பம்மல் சம்பந்த முதலியார்


பிப்ரவரி 9. ”தமிழ் நாடகத் தந்தை” பம்மல் சம்பந்த முதலியாரின் பிறந்த தினம்.

பிப்ரவரி 19. உ.வே.சா. அவர்களின் பிறந்த தினம்.

இருவரையும் சேர்ந்து நினைக்கச் செய்யும் ஒரு கட்டுரை இதோ!

உ.வே.சா வின் 80-ஆவது பிறந்த தினவிழாத் தொடர்பில் கலைமகளில் 1935-இல் வெளியான கட்டுரை இது.
[ நன்றி: கலைமகள் ]

தொடர்புள்ள பதிவுகள்:

உ.வே.சா 

வியாழன், 4 பிப்ரவரி, 2016

முகநூல் : கவிதை

முகநூல்


பிப்ரவரி 4. முகநூலின் 12-ஆம் பிறந்தநாள்.காலை முகநூல் பார்ப்பேன்
. . கண்வி ழித்த வுடனே !
வேலைப் பளுவின் இடையே
. . விரைந்து முகநூல் நுழைவேன்
மாலை இரவென் றாலோ
. . மணிக்க ணக்கில் மேய்வேன்!
கால அருமை இன்றிக்
. . கணினி உலகில் அலைவேன்.!  (1)

ஞானம் எனக்கு முகநூல்;
. . ஞாலம் எனக்கு முகநூல்;
பானம் பருகும் போதும்
. . பார்வை முகநூல் மேலே!
கானம் கேட்கும் சபையில்
. . கைகள் கணினி மீது!
மானம் விட்டுச் சொல்வேன்,
. . நானோர் முகநூல் அடிமை!     (2)

வையப் போர்கள் தொடங்கி
. . வையும் மடல்கள் படிப்பேன் !
செய்தி என்ற பேரில்
. . சேட்டை வம்பு ரசிப்பேன் !
பொய்யர் புகழ்ச்சிச் சொல்லில்
. . புளகாங் கிதமே அடைவேன்!
ஐய மின்றிச் சொல்வேன்
. . அடியேன் முகநூல் அடிமை!    (3)

துரத்து கின்ற வேலை
. . தொல்லை ஆகிப் போச்சே!
சுரக்கும் படைப்புத் திறனும்
. . தொலைவில் ஓடிப் போச்சே!
விரயம் ஆகும் வாழ்க்கை
. . விசனம் கொடுக்க லாச்சே!
எரியும் முகநூல் மோகம்
. . என்று மறைந்து போமோ?    (4) 

பசுபதிதொடர்புள்ள பதிவுகள்:

கவிதைகள்