ஞாயிறு, 11 டிசம்பர், 2016

சக்ரவர்த்தினியில் பாரதி - 1

வந்தேமாதரம்

டிசம்பர் 11. பாரதியாரின் பிறந்த தினம்.


‘சுதேசமித்திரனில்’ பாரதி  உதவி ஆசிரியராய்ச் சேர்ந்தது ஆகஸ்ட்  1904 -இல். அதில் இருக்கும்போதே ,  ‘சக்ரவர்த்தினி’யின் ஆசிரியப் பதவியையும் ஏற்றுக்கொள்ள அனுமதித்தார்  ‘மித்திரன்’ ஆசிரியர் ஜி.சுப்பிரமணிய ஐயர். அவருக்குப் பாரதி மேல் அவ்வளவு அபிமானம்! ஆனால் பாரதிக்குத் தேவையான சம்பளம் கொடுக்கும் வசதியும் அவரிடம் இல்லை என்பதும் ஒரு முக்கிய காரணம்.

 “ பாரதி, நீ ஒரு காளிதாசன்தான்.  ஆனால் உனக்கு அட்சர லட்சம் கொடுக்க நான் போஜனாக இல்லையே! “ என்பாராம் சுப்பிரமணிய ஐயர்.

 ‘சக்ரவர்த்தினி’ மாதாந்தர இதழின் ஆசிரியராய் ஆகஸ்ட் 1905 -இல் சேர்ந்தார் பாரதி. 13 மாதங்கள் அங்கே இருந்தார்.

பாரதியார் ‘வந்தேமாதரம்’ என்ற தலைப்பில் புனைந்த முதல் பாடல் கீழே!
இது 1906 பிப்ரவரியில் சக்ரவர்த்தினியில்  வந்தது. ( பிறகு சுதேசமித்திரனிலும் வெளிவந்தது )

( பங்கிம் சந்திரரின் பாடலின் மொழிபெயர்ப்பை நவம்பர் 1905-இல் சக்ரவர்த்தினியிலும், பிறகு டிசம்பர் 1905 சுதேசமித்திரனிலும் பாரதி ஏற்கனவே வெளியிட்டிருந்தார்).

இன்றும் பலரும் அறியாத பாடல் இது.     ( யாராவது இதைப் பாடியிருக்கிறார்களா? )

பின்னர் 1907-இல் அவர்  ‘வந்தே மாதரம்’ என்ற பொருளில் புனைந்த  இரு பாடல்கள் பிரபலமடைந்தன.

யாப்பிலக்கண ஆர்வலருக்கு ஒரு குறிப்பு: பாரதி புனைந்த  ‘வந்தே மாதர’ப் பாடல்களில் ( இங்குள்ள) முதலாவது  ஒரு 12 -சீர் விருத்தம்; இரண்டாவது  ( வந்தே மாதரம் - ஜய ), வஞ்சித்துறை என்ற வடிவத்தில் ( பல்லவி தவிர்த்து) ; மூன்றாவதோ, ( வந்தே மாதரம் என்போம் ) ஆனந்தக் களிப்பு வகைச் சிந்துப்பா !  1905 -இல் வந்த  ‘வந்தே மாதர’ மொழிபெயர்ப்போ ஆசிரியப்பா!  பாரதியைப் படித்தாலே மரபுக் கவிதையின் முக்கிய வடிவங்களின் இலக்கணம் புரிந்து விடும் !

மூலப் பத்திரிகையின் பக்கம் இதோ!



மேலே உள்ள ’ஒபினியன்ஸ்’ பகுதியில் “துளஸீபாய்” என்று ஒரு படைப்பின்  பெயர் வருகிறதல்லவா?  அதை எழுதியவர் யார் தெரியுமா? ஒரு “ஷெல்லிதாஸ்”!

அதில் ஒரு பகுதியை அடுத்த பதிவில் இடுகிறேன் ! அந்தக் கால உரைநடையையும் அறியவேண்டாமா?


[  If you have trouble reading some of the images, right click on each such image ,  choose 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort ]


தொடர்புள்ள பதிவுகள்:

கருத்துகள் இல்லை: