செவ்வாய், 26 செப்டம்பர், 2017

851. டி.எஸ்.எலியட் -1

கவிஞர் எலியட்
மு.பொன்னம்பலம் 


செப்டம்பர் 26. கவிஞர் எலியட்டின் பிறந்த தினம்.

‘சக்தி’ இதழில் அவர் நோபல் பரிசு பெறுமுன் (1948-இல்) வந்த ஒரு கட்டுரை.
===

தொடர்புள்ள பதிவு:

தாமஸ் ஸ்டியன்ஸ் எலியட்: விக்கிப்பீடியா

திங்கள், 25 செப்டம்பர், 2017

850. தேவன்: துப்பறியும் சாம்பு - 9

'அகல்யா’வில் தேநீர் விருந்து
‘தேவன்’


ஆகஸ்ட் 30, 1942-இல்  ’ஆனந்த விகட’னில் தொடங்கிய ’தேவ’னின் துப்பறியும் சாம்பு  சிறுகதைத் தொடரில் இது 34-ஆவது கதை. 

ராஜுவின் மூல ஓவியத்துடன் இதோ!


[ நன்றி : விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:

துப்பறியும் சாம்பு: மற்ற பதிவுகள்

தேவன் படைப்புகள்

849. உடுமலை நாராயணகவி - 1

உடுமலை நாராயணகவி 10
 ராஜலட்சுமி சிவலிங்கம்


செப்டம்பர் 25. உடுமலை நாராயண கவியின் பிறந்த தினம்.
===

பழம்பெரும் திரைப்படப் பாடல் ஆசிரியரும், தனது எழுச்சிமிக்க பாடல்களால் மக்களிடம் தேசிய உணர்வை ஊட்டியவருமான உடுமலை நாராயணகவி (Udumalai Narayanakavi) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 25). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த பூவிளைவாடி கிராமத்தில் (1899) பிறந்தார். இயற்பெயர் நாராயணசாமி. இளம் வயதில் பெற்றோரை இழந்தவர், அண்ணன் ஆதரவில் வளர்ந்தார். 4-ம் வகுப்போடு படிப்பு முடிந்தது.

# புரவியாட்டம், சிக்குமேளம், தம்பட்டம், உடுக்கடிப்பாட்டு, ஒயில் கும்மி போன்ற கிராமியக் கலைகளை ஆர்வத்துடன் கற்றார். ஆரிய கான சபா என்ற நாடக சபாவின் ஆசிரியரான முத்துசாமிக் கவிராயர் இவரது திறனைக் கண்டு வியந்து தன்னுடன் சேர்த்துக்கொண்டார். அவரோடு பல இடங்களுக்கும் சென்று ஏராளமான நாடகங்களில் நடித்தும், எழுதியும், பாடியும் நேரடி அனுபவங்களைப் பெற்றார்.

# சுமார் 12 ஆண்டுகாலத்துக்குப் பிறகு ஊர் திரும்பியவர், கதர்க்கடை தொடங்கினார். அதில் நஷ்டம் ஏற்பட்டு கடன் தொல்லை அதிகமானது. கடன்களை அடைக்கும்வரை ஊர் திரும்ப மாட்டேன் என்று உறுதியேற்றார்.

# கையில் இருந்த நூறு ரூபாயோடு மதுரை சங்கரதாஸ் சுவாமிகளிடம் சென்றார். அவரிடம் யாப்பிலக்கணம் பயின்றார். நாடக சபாக்கள் நிறைந்த மதுரை மாநகரம், பணம் சம்பாதிக்க இவருக்கு உதவியது. பல நாடகங்களுக்கு வசனங்கள், பாடல்கள் எழுதினார்.


# விடுதலைப் போராட்டம் தீவிரமாக இருந்த காலக்கட்டம் அது. தேசிய உணர்வுமிக்க பாடல்களை எழுதி, மேடைதோறும் முழங்கச் செய்தார். கடன்களை அடைத்த பிறகு, ஊர் திரும்பினார்.

# டிகேஎஸ் நாடகக் குழுவினரோடு ஏற்பட்ட தொடர்பால் என்.எஸ்.கிருஷ்ணனின் நட்பும், பிறகு பெரியார், அண்ணா, பாவேந்தர் உள்ளிட்டவர்களின் நட்பும் கிடைத்தது. இயக்குநர் ஏ.நாராயணன் அழைத்ததால், கிராமபோன் கம்பெனிக்கு பாட்டு எழுதுவதற்காக சென்னைக்கு சென்றார். அது இவருக்கு திரையுலகக் கதவுகளைத் திறந்துவிட்டது.

# திரைப்படங்களுக்கு 1933 முதல் பாடல் எழுதத் தொடங்கினார். பெயரை நாராயணகவி என மாற்றிக்கொண்டார். சமுதாய சீர்திருத்தக் கருத்துகள் நிறைந்த பாடல்களை எழுதினார். முன்னணி பாடல் ஆசிரியராகத் திகழ்ந்தவர், ‘கவிராயர்’ என்று அன்போடும் மரியாதையோடும் அழைக்கப்பட்டார்.

# வேலைக்காரி, ஓர் இரவு, நல்லதம்பி, மனோகரா, பராசக்தி, தூக்குத் தூக்கி, தேவதாஸ் உள்ளிட்ட ஏராளமான படங்களில் அமரகீதங்களைப் படைத்துள்ளார். ‘கா கா கா’, ‘நல்ல நல்ல நிலம் பார்த்து’, ‘குற்றம் புரிந்தவன்’, ‘ஒண்ணுலேருந்து இருபது’, ‘சும்மா இருந்தா சோத்துக்கு நட்டம்’ ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

# சங்கீத நாடக சங்கம் 1967-ல் இவரை சிறந்த பாடல் ஆசிரியராகத் தேர்ந்தெடுத்தது. திரையுலகில் தனக்கென்று தனி இடத்தைப் பெற்றவர். பல்லாயிரக்கணக்கான பாடல்களை எழுதியுள்ளார்.


# கவிஞர், நாடக ஆசிரியர், நடிகர், சீர்திருத்தவாதி எனப் பன்முகப் பரிமாணம் கொண்ட உடுமலை நாராயணகவி 82-வது வயதில் (1981) மறைந்தார். இவரது நினைவாக 2008-ல் அஞ்சல்தலை வெளியிடப்பட்டது. இவர் பிறந்த ஊரில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

[ நன்றி: தி இந்து   ] 

தொடர்புள்ள பதிவுகள்:

ஞாயிறு, 24 செப்டம்பர், 2017

848. பாடலும் படமும் - 23

செல்வத் திருமகள்
பாரதி 

[ தனலக்ஷ்மி: ஓவியம்: எஸ்.ராஜம் ]

செல்வத் திருமகளைத் - திடங்கொண்டு 
      சிந்தனை செய்திடுவோம்; 
செல்வ மெல்லாந் தருவாள் - நம தொளி 
      திக்க னைத்தும் பரவும் 

தொடர்புள்ள பதிவுகள்:
பாடலும், படமும்

847. பம்மல் சம்பந்த முதலியார் -2

சென்னை விநோதங்கள் 
 ராவ் பகதூர் ப.சம்பந்த முதலியார் பி.ஏ.பி.எல்செப்டம்பர் 24. சம்பந்த முதலியாரின் நினைவு தினம்
====

சென்னைப் பட்டணம் இந்தியாவில் மிகவும் குறைந்த நாகரிகமுடைய நகரமென்று கல்கத்தா, பம்பாயிலுள்ள ஜனங்கள் ஏளனம் செய்கிறதாகக் கேள்விப்பட்டேன். இவ் விழிசொல் ஏற்றதா, இல்லையா என்று பார்க்கும் பொருட்டுச் சென்னையிலுள்ள அநேக இடங்களைச் சுற்றிப் பார்த்து வந்தேன். முடிவில், ''அவ் விழிசொல் சென்னைக்கு ஏற்றதல்ல, சென்னையிலுள்ள சில விஷயங்கள் கல்கத்தா, பம்பாய் முதலிய இடங்களில் இல்லை'' என்கிற தீர்மானதிற்கு வந்தேன். அவைகளில் சிலவற்றைப் பற்றி அடியில் எழுதுகிறேன்.                                     சென்னை அண்ணாசாலை 1905

சென்னையில் பீபிள்ஸ் பார்க்கில் ஒரு பக்கம் 'ரயில் பாத்' என்ற பெயரையுடைய ஒரு கட்டிடமுண்டு. அது 1922ம் ஆண்டு ஒரு சீமானுடைய நன்கொடையால் கட்டப்பட்டதாம். அது சென்னைவாசிகள் நீந்திக் குளிக்கும்படியாகக் கட்டப்பட்டது. இதில் விசேஷமென்ன வென்றால் ஜனங்கள் நீந்திக் குளிப்பதற்காக எல்லா செளகரியங்களும் அமைக்கப்பட்டிருக் கின்றன. நீந்தக் கற்போர்களுக்கு அபாயமில்லாதபடி ஒரு பக்கம் கொஞ்சம் ஆழமில்லாமலும், போகப் போக ஆழம் அதிகமாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஒன்றுதான் குறைவாயிருக்கிறது. இந்தக் குளிக்கும் இடத்தில் தண்ணீர்தான் கிடையாது! பம்பாய், கல்கத்தா முதலிய பட்டணங்களைப் பற்றிப் புகழ்ந்து பேசும் ஜனங்களில் யாராவது அவ்விடஙகளில் தண்ணீரில்லாத குளிக்குமிடங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றனவா என்னும் கேள்விக்குப் பதில் கூறட்டும், ஏறக்குறைய இந்தியா முழுவதுமேயே - ஏன், இவ்வுலக முழுவதிலுமேயே, ஜலமல்லாத ஸ்நான கட்டம் கிடைப்பது அரிது என்றே சொல்லவேண்டும். இந்த அருமையான பெருமை நம்முடைய சென்னைக்குத்தான், எனக்குத் தெரிந்தவரையில் உரித்தானது! சிலர் நீந்தக் கற்றுக் கொண்ட பிறகுதான் ஜலத்தில் இறங்குவோம் என்று கூறக் கேட்டிருக்கிறேன். அப்படிப்பட்டவர்களுக்காக இந்த ஸ்நான கட்டம் கட்டப்பட்டதோ, என்னமோ? அப்படியானால் முனிஸிபல் சாமான்களையெல்லாம் இங்கு நிரப்பி வைப்பானேன்? இந்தக் கேள்விக்குப் பதில் இதை வாசிக்கும் நண்பர்கள் தான் கூறவேண்டும்.

(சமீபத்தில்தான் இந்தக் கட்டிடம் நீந்தக் குளிக்கத் திறந்து விடப்பட்டிருக்கின்றது)
                                        பாரீஸ் கார்னர் 1890

பாரிஷ் வெங்கடாசல ஐயர் வீதியில் சுமார் 50,000 ரூபாய் வரையில் செலவழித்துக் கட்டப்பட்ட ஒரு கட்டிடம் இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பாகச் சென்னை கவர்னர் ஒருவருடைய மனைவி அக்கட்டிடத்தைத் திறந்து வைத்தார்கள். அச்சமயம் இப்பெருங் கட்டிடமானது சென்னையில் ஜவுளி வியாபாரம் செய்ய உபயோகப்படும்படியாகக் கட்டப்பட்டது. கிடங்குத் தெருவில் இதற்குப் போதுமான வசதியில்லை. இந்தியாவில் மற்றுமுள்ள தலைநகரங்களில் இருப்பது போல சென்னையிலும், ஒரே கட்டிடத்தில் பலவித ஜவுளிகள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்தல் நலமெனக் கருதி, இதற்கென்று ஒரு கம்பெனி ஏற்படுத்தி, இதைக் கட்டி முடித்தார்கள். இதற்கு 'பீஸ்-கூட்ஸ் மார்க்கெட் (piece - goods market) என்று பெயர் வைத்தார்கள். இது திறக்கப்பட்டுப் பல வருஷங்களாகியும் இவ்விடத்தில் ஜவுளி வியாபாரம் நடக்கவேயில்லை. இப்பெரிய கட்டிடத்தில் பல அறைகள் இருந்தபோதிலும் ஒன்றிலாவது ஜவுளிகள் இன்றளவும் வைக்கப்படவில்லை! ஆனால் அதற்குப் பதிலாக சில சவுக்குக்கட்டை டெப்போக்கள் இருக்கின்றன. நான் எவ்வளவோ யோசித்துப் பார்த்தேன். ஜவுளிகளுக்கும் சவுக்குக்கட்டைகளுக்கும் ஏதாவது சம்பந்தமுண்டா என்று பூர்வ காலத்தில் நமது தேசாத்திய ரிஷிகள் சில மரப்பட்டைகளினின்றும் நார்களை எடுத்து மரவுரிகள் செய்து உடுத்திக் கொண்டதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆயினும் சவுக்குக் கட்டைகளிலிருந்து எப்பொழுதாவது மரவுரிகள் செய்ததாகத் தெரியவில்லை. ஆகவே சவுக்குக் கட்டைகள் விற்கும் ஜவுளி மார்க்கெட் என்பது உலகத்திலில்லாத விஷயமல்லவா? இந்த மார்க்கெட்டை முன்னின்று கட்டினவர் ஒரு வடக்கத்திய ஆசாமி என்று கேள்விப்படுகிறேன். அவர் இப்பொழுது சென்னையிலில்லை. வேறு எந்த ஊரிலிருக்கிறாரோ தெரியாது. எந்த ஊரில் இருந்த போதிலும் அந்த ஊரில் இம்மாதிரியான ''ஜவுளி'' மார்க்கெட் கட்டாமலிருக்கும் படியாக நான் அவரை வேண்டிக் கொள்கிறேன்.

சென்னையில் பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரில் ஒரு கட்டிடமிருக்கிறது. அதற்குக் 'கார்ப்பொரேஷன் பழக்கடை' என்று பெயர். இது சில வருஷங்களுக்கு முன்பாக 'பழங்களையெல்லாம் வீதிகளில் விற்பது தகுதியல்ல, ஆகவே பம்பாய், கல்கத்தா முதலிய பட்டணங்களிலிருப்பது போல் ஒரு தனிக் கட்டடமிருக்க வேண்டும்' என்று நமது சென்னை கார்ப்பொரேஷன் கவுன்சிலர்கள் கட்டின இடமாகும். இதன் வாயில் வழியாக நீங்கள் நுழைத்தால் முதல்முதல் உங்கள் கண்களுக்குப் புலப்படும் 'பழ' தினுசுகள் அடியிற் குறித்தனவாம். துணிகள், செண்டுகள், பாய்கள், பொம்மைகள், பந்தாடும் கருவிகள், கட்டில்கள், புஸ்தகங்கள், கொசுவலைகள், கம்பளிகள் முதலியவை. இவை எந்த மரங்களில் காய்த்துப் பழுக்கின்றனவோ, என்னால் கூறமுடியாது. கார்ப்பொரேஷன் கவுன்சிலர்களில் யாராவது தாவர சாஸ்திரப் பரிட்சையில் தேறினவர் இருந்தால் அவர்கள் ஒரு வேளை இதற்குத் தகுந்த பதில் அளிக்கலாம். இப்படிப்பட்ட பழக்கடைகள் இந்தியா முழுதும் வேறு எந்த இடத்திலும் கிடைப்பது அரிதென்றே நாம் கூறவேண்டும்.
                             பைகிராப்ட்ஸ் சாலை 1890 - திருவல்லிக்கேணி

சென்னைவாசிகள் திருவல்லிக்கேணி பீச்சிலிருந்து வடக்கே கடற்கரையோரமாய்ப் போனால், அங்கே இரும்பு வாராவதிக்கருகில் சிமிட்டியினால் கட்டப்பட்ட பலமான கட்டடம் ஒன்றைக் காண்பார்கள். அதன் பெயர் என்னவென்று விசாரித்ததால் 'கிளைவ் பாட்டரி' என்று அறிவார்கள். 'பாட்டரி' என்னும் ஆங்கிலப் பதத்திற்கு 'பீரங்கிகள் வைக்குமிடம்' என்று இந்தச் சந்தர்ப்பத்தில் அர்த்தமாகும். இது நமது ராஜாங்கத்தால் சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பாக, சென்னையை எதிரிகள் சமுத்திரத்தின் வழியாக எதிர்த்தால் அவர்களைத் தடுக்க வேண்டி ஏராளமான திரவியம் செலவழித்துக் கட்டப்பட்டதாகும். கட்டிடம் மிகவும் பலமானது. எல்லாம் சரியாகத்தானிருக்கிறது. பீரங்கி மாத்திரம்தான் இல்லை.

இதற்குக் காரணமென்னவென்று விசாரித்ததில், ராஜாங்க ராணுவ உத்தியோகஸ்தர்கள் இந்தப் பீரங்கிகளை மாத்திரம் வெளியே எந்த ஊருக்கோ எடுத்துக் கொண்டு போய் விட்டார்களாம்! கட்டிடம் மாத்திரம் காலியாகவே இருக்கிறது. ஆயினும் கட்டிடம் ஒன்றிற்கும் உபயோகப்படாமற் போகவில்லை. சில வேலையாட்களும், அவர்கள் குடும்பங்களும் இங்கே வசித்து வருகிறார்கள். 1915ம் வருஷத்தில் ஐரோப்பிய மகா யுத்தத்தில் 'எம்டன்' என்னும் கப்பல் சென்னையைத் தாக்கியபோது இந்த கிளைவ் பாட்டிரியிலிருந்த ஆடவரும் பெண்களும் குழந்தைகளும் அக்கப்பலிலிருந்து வந்த குண்டுகள் தங்கள் மேல் படாதபடி, உள்ளே ஒளிந்திருக்க மிகவும் உபயோகப்பட்டதாகக் கேள்விப்பட்டேன். ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்குமுன் சென்னையில் கவர்னராயிருந்த லார்ட் க்ளைவ் என்பவர், தம் பெயரால் சென்னையில் கட்டப்பட்ட ஒரு 'பாட்டரி'யானது தற்காலம் மேற்கண்டபடி உபயோகப்படுகிறதென்று தம் சூட்சும சரீரத்தோடு கேள்விப்பட்டால், உடல் சிலிர்ப்பார் என்று நினைக்கிறேன்.
                                         மெரீனா பீச் - 1890

அப்படியே கடற்கரையோரமாகவே இன்னும் வடக்கே நோக்கி வருவீர்களானால், சென்னை கஸ்டம் ஹவுஸுக்கு எதிராக, ஒரு எட்டு வாயில்களுடைய கட்டிடத்தைக் காண்பீர்கள். அதன் ஒவ்வொரு வாயில்களிலும் 'கார்ன்வாலிஸ்' என்று பெரிய எழுத்துக்களால் எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். லார்ட் கார்ன்வாலிஸ் என்பவர் இந்தியாவில் பல வருஷங்களுக்கு முன் கவர்னராக இருந்த ஒரு சீமான். ஆகவே இக்கட்டிடத்திற்குள்ளாக அவரது சிலை உருவம், அவருடைய ஞாபகார்த்தமாகக் கட்டப்பட்டிருக்கிறது என்று நீங்கள் எண்ணலாம். ஆயினும் இந்த எட்டு வாயில்களுக்குள் ஏதாவது ஒன்றின் வழியாக நீங்கள் உள்ளே சென்று பார்ப்பீர்களானால் கார்ன்வாலிஸ் சிலை உருவம் ஒன்றையும் காணமாட்டீர்கள்! அதற்குப் பதிலாகத் தண்ணீர்த் தொட்டி மாதிரி ஒன்று இக்கட்டிடத்தில் நடுவில் கட்டியிருப்பதையே காணலாம். அதிலும் தண்ணீர் கிடையாது! பிறகு நான் விசாரித்ததில், லார்ட்கார்ன்வாலிஸின் சிலை சென்னை மியூஸியத்தில் வைக்கப்பட்டிருப்பதாக அறிந்தேன். ஒருவருடைய சிலையை ஓரிடத்திலும், அது வைக்க வேண்டிய கட்டிடத்தை வேறொரு இடத்திலும் வைக்கும் விந்தையானது நமது சென்னை மாநகருக்குத்தான் உரித்தானது.

சென்னையில் ஒரு 'பார்க்'. 'பார்க்' என்றால் பெரியதோட்டம் என்று அர்த்தமாகும். அதிலும் சாதாரணமாகக் கல்கத்தா, பம்பாய் முதலிய இடங்களிலுள்ள பார்க்குகள் மைல் கணக்கான விஸ்தீரணமுடையவை. அவற்றில் அழகிய புஷ்பச் செடிகளும், ஆகாயத்தை அளாவிய மரங்களும் நிறைந்திருக்கும். அன்றியும் சாதாரண ஜனங்கள் கண்டுகளிப்பதாகக் காட்டு மிருகக் கூண்டுகளும், பட்சிக் கூடுகளும், நம் நாட்டிலில்லாத பாம்பு முதலியவைகளும் கூடுகளில் அடைக்கப்பட்டிருக்கும். அன்றியும் படகுகளில் ஜனங்கள் போகும்படியான நீர் நிலைகளும் அமைக்கப்பட்டிருக்கும். சென்னையில் பீபிள்ஸ் பார்க்கை இதற்கு ஒரு உதாரணமாகக் கூறலாம். நிற்க,

முதலில் கூறிய பார்க் எங்கே இருக்கிறதெனப் பெரும்பாலருக்குத் தெரியவே தெரியாது. இதைப் பார்க்க வேண்டுமென்றால் நீங்கள் ஒரு பூதக்கண்ணாடியை எடுத்துக் கொண்டு செல்லவேண்டும். திருவல்லிக்கேணியில் இது இருக்கிறது. இதன் பெயர் 'கான்பகதூர் ஹாஜி ஹகீம் முகம்மது அப்துல் அஜீஸ் சாகிப் பார்க்!' மற்றப் பார்க்குகளெல்லாம் நான்கு அல்லது ஐந்து மைல் விஸ்தீரணமிருந்தால் இது நான்கு அல்லது ஐந்து அடி விஸ்தீரணமுடையதாயிருக்கிறது! மற்ற விநோதப் பார்க்குகளிலெல்லாம் நூற்றுக் கணக்காகப் பெரிய மரங்கள் வளர்ந்திருந்தால் இதில் ஆயிரக்கணக்கான புல் முளைத்திருக்கிறது. மற்றப் பூந்தோட்டங்களிலெல்லாம் புலி, சிங்கங்கள் அடைக்கப்பட்டிருந்தால் இந்தத் தோட்டத்தில் ஆயிரக்கணக்கான எறும்புகள் எதேச்சையாகத் திரிகின்றன. நான் ஒருமுறை பார்த்தபோது இவ்வளவு பெரிய பார்க்கில், மற்றப் பார்க்குகளில் உள்ளது போல் சங்கீதத்திற்கும் ஏன் ஒரு ஏற்பாடும் செய்யவில்லையென்று துக்கப்பட்டேன். மற்றொரு முறை அந்தப் பக்கம் போனபோது அக்குறையும் நீங்கியது. ஒரு ஹரிஜனப் பையன் இங்கே உட்கார்ந்து கொண்டு தப்பட்டை அடித்துக் கொண்டிருந்தான். இந்தப் பார்க்கில் நீங்கள் முக்கியமாய்க் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்தப் பார்க்கைவிட, இந்தப் பார்க்கின் பெயர் எழுதப்பட்டிருக்கும் போர்ட்டு பெரியதாகக் தோன்றுவதேயாம்! அந்த போர்டைவிட அதில் எழுதப்பட்டிருக்கும் பெயர் பெரியதானது என்று யாராவது சொன்னால் அவர்களுடன் நான் சச்சரவிட மாட்டேன்!''

இப்படிப்பட்ட விநோதங்களெல்லாம் இருக்கும்பொழுது சென்னையைப்பற்றி யார்தான் குறை கூறக் கூடும்?

[ நன்றி : விகடன் 25-11-1934 ]


தொடர்புள்ள பதிவுகள்:

சனி, 23 செப்டம்பர், 2017

846. கு.அழகிரிசாமி - 3

தேவையும் தெய்வமும் 
கு.அழகிரிசாமி 

செப்டம்பர் 23. கு.அழகிரிசாமியின் பிறந்த தினம்.

‘சக்தி’ இதழில் 1947-இல் வந்த ஒரு கதை இதோ.
=== 

தொடர்புள்ள பதிவுகள்:

வெள்ளி, 22 செப்டம்பர், 2017

845. அசோகமித்திரன் - 3

கல்கியும் தேவனும்
அசோகமித்திரன்

[ தேவன் நினைவு தினம், 2005; நன்றி: சாருகேசி ] 

செப்டம்பர் 22. அசோகமித்திரனின் பிறந்த தினம்.

அவர் 1997-இல் எழுதிய ஒரு கட்டுரை இதோ.

[ நன்றி: படைப்பாளிகள் உலகம், கலைஞன் பதிப்பகம் ]

தொடர்புள்ள பதிவுகள்:
அசோகமித்திரன்
'கல்கி’ கட்டுரைகள்
தேவன் படைப்புகள்

வியாழன், 21 செப்டம்பர், 2017

844. பாடலும் படமும் - 22

மலரின் மேவு திருவே! 
பாரதி


[ ஆதிலக்ஷ்மி; ஓவியம்: எஸ்.ராஜம் ] 

மலரின் மேவு திருவே!-உன் மேல்
 மையல் பொங்கி நின்றேன்;
நிலவு செய்யும் முகமும்-காண்பார்
 நினைவ ழிக்கும் விழியும்,
கலக லென்ற மொழியும்-தெய்வக்
 களிது லங்கு நகையும்,
இலகு செல்வ வடிவும்-கண்டுன்
 இன்பம் வேண்டு கின்றேன்


தொடர்புள்ள பதிவுகள்:
பாடலும், படமும்

843. காந்தி - 10

3 . சுங்கவரி நீக்கம்
கல்கி


‘கல்கி’ ‘மாந்தருக்குள் ஒரு தெய்வம்’ என்ற தொடரில் எழுதிய மூன்றாம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் .  [ இந்தத் தொடர் முடிவு பெறவில்லை. 41 அத்தியாயங்களே வந்தன ]
====
பம்பாயில் கவர்னர் லார்ட் வில்லிங்டனைச் சந்தித்துப் பேசிய பிறகு மகாத்மா பூனாவுக்குச் சென்றார். அங்கே ஸ்ரீ கோகலே மகாத்மாவை மிக்க அன்புடம் வரவேற்றார். இந்திய ஊழியர் சங்கம் என்ற பெயருடன் ஸ்ரீ கோகலே நடத்தி வந்த ஸ்தாபனம் மிகவும் பிரசித்தி பெற்றது. மெத்தப் படித்த அறிவாளிகள் பலர் அந்த ஸ்தாபனத்தில் அங்கத்தினராகியிருந்தார்கள். சொற்ப ஊதியம் பெற்றுக்கொண்டு அவர்கள் தேச சேவையும் சமூக சேவையும் செய்து வந்தார்கள். ஸ்ரீ கோகலேயைப் போலவே இந்திய ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த அனைவரும் இந்திய அரசியலில் 'மிதவாத கொள்கை'யைக் கடைபிடித்தார்கள். ஸ்ரீ கோகலேயுக்குப் பிறகு மேற்படி சங்கத்தின் தலைவாரகிப் பிரிசித்தியடைந்தவர் மகா கனம் வி. எஸ். சீனிவாச சாஸ்திரியார். இன்னொரு பிரபல அங்கத்தினர் பண்டித ஹ்ரிதயநாத குன்ஸ்ரு. தற்சமயம் ஹரிஜன சேவா சங்கத்தின் காரியதரிசியாக இருந்து அரும்பெரும் தொண்டு செய்துவரும் ஸ்ரீ தக்கர் பாபாவும் மேற்படி சங்கத்தைச் சேர்ந்தவரே.

காந்திஜி இந்திய ஊழியர் சங்கத்தில் சேர்ந்துவிட வேண்டும் என்ற விருப்பம் ஸ்ரீ கோகலேயுக்கு இருந்தது. ஆனால் இந்திய ஊழியர் சங்கத்தின் மற்ற அங்கத்தினர் காந்திஜியுடன் பல விஷயங்களையும் பற்றிப் பேசியபோது சங்கத்தின் கொள்கைகளுக்கும் மகாத்மாவின் கொள்கைகளுக்கும் மிக்க வித்தியாசம் இருப்பதைக் கண்டார்கள். ஆகவே காந்திஜியை இந்திய ஊழியர் சங்கத்தில் சேர்ந்துக்கொள்வது உசிதமாயிராது என்று கருதினார்கள். மகாத்மாவுக்கு இது ஏமாற்றமாயிருந்தது. தம்முடைய கொள்கைகளுக்கு எவ்விதமான பங்கமும் இல்லாமல் இந்திய ஊழியர் சங்கத்திலே சேர்ந்து தொண்டு செய்யலாம் என்று மகாத்மா நினைத்தார்.

மகாத்மா இந்திய ஊழியர் சங்கத்தில் சேரவேண்டும் என்பதில் மகாத்மாவைக் காட்டிலும் ஆர்வம் கொண்டிருந்தவர் ஸ்ரீ கோகலே. ஆனால் அவர் சங்கத்தின் மற்ற அங்கத்தினர் சொல்வதற்கு மாறாக நடக்க விரும்பவில்லை. அவர் மகாத்மாவுக்குச் சமாதானமாக கூறியதாவது: "உங்களுடைய கொள்கை எப்படியிருந்தாலும் நீங்கள் ராஜி செய்து கொள்வதில் ஆர்வங் கொண்டவர் என்பதை இந்தச் சங்கத்தின் அங்கத்தினர் இன்னும் உணரவில்லை. அதைச் சீக்கிரத்தில் அவர்கள் உணர்ந்து தங்களைச் சேர்த்துக்கொள்வார்கள் என்று நம்புகிறேன். அப்படி அவர்கள் சேர்த்துக் கொள்ளாவிட்டாலும் தங்களிடம் அவர்களுக்கு மரியாதையும் அன்பும் இல்லையென்று எண்ணவேண்டாம். உண்மையில் தங்களிடம் உள்ள மரியாதையினாலேயே தங்களுடைய தன் மதிப்புக்கும் கொள்கைகளுக்கும் பங்கம் வரக்கூடாது என்று கருதுகிறார்கள். தாங்கள் விதிமுறைகளின்படி அங்கத்தினர் ஆகாவிட்டாலும் என்வரையில் தங்களைச் சங்கத்தில் சேர்ந்தவராகவே கருதப் போகிறேன்".

இதற்குப் பதிலாக மகாத்மா ஸ்ரீ கோகலேயுக்கு நன்றி தெரிவித்துவிட்டு கூறியதாவது: - "இந்திய ஊழியர் சங்கத்தில் நான் சேர்ந்தாலும் சேராவிட்டாலும் போனிக்ஸிலிருந்து நான் கூட்டி வந்திருந்தவர்களோடு தனியாக ஒரு ஆசிரமம் ஸ்தாபித்துத் தொண்டு செய்ய விரும்புகிறேன். நான் குஜராத்தைச் சேர்ந்தவனாதலால் அங்கே ஆசிரமம் ஸ்தாபிப்பது பொருத்தமாய் இருக்கும். தங்களுடைய ஆசீர்வாதம் வேண்டும்".

இதைக்கேட்ட கோகலே, "ரொம்ப சந்தோஷம். அப்படியே செய்யுங்கள். ஆனால் ஆசிரமம் ஸ்தாபிப்பதற்கு வேண்டிய செலவுகளுக்குப் பணம் வேறு யாரிடமும் கேட்கக் கூடாது. செலவு முழுதும் நானே கொடுப்பதற்கு விரும்புகிறேன்!" என்றார். உதவி செய்வதற்கு ஒரு ஆப்தர் இருக்கிறார் என்ற எண்ணம் காந்திஜிக்கு உற்சாகம் ஊட்டியது.

ஸ்ரீ கோகலே வாய்ப்பேச்சோடு நில்லாமல் இந்திய ஊழியர் சங்கத்தின் பொக்கிஷத்தாரரைக் கூப்பிட்டுக் காந்திஜியின் பெயரால் ஒரு பெயரேடு வைத்துக்கொண்டு அவர் கேக்கும் பணத்தையெல்லாம் கொடுத்து வரும்படி உத்தரவிட்டார்.

காந்திஜி பூனாவை விட்டுப் புறப்படும் முன் இந்திய ஊழியர் சங்கம் அவருக்கு ஒரு விருந்து நடத்தியது. மகாத்மா விரும்பிய பழங்களும் கொட்டைகளும்தான் உணவில் முக்கிய உணவுப் பொருட்கள். கோகலேவின் உடல்நலம் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. கோகலே தங்கியிருந்த அறையிலிருந்து விருந்து நடந்த இடம் சில அடி தூரத்திலேயே இருந்தது. கோகலே அந்த இடத்துக்கு நடந்து வந்தார். விருந்துக்கு அவர் வரவேண்டிய அவசியமில்லை என்று காந்திஜியும் பிறரும் கூறியதை கோகலே கேட்கவில்லை. மகாத்மாவினிடம் அவர் கொண்டிருந்த அன்பு காரணமாக வரத்தான் வருவேன் என்று பிடிவாதம் பிடித்து கொண்டு வந்தார். விருந்து நடந்த இடத்துக்கு வந்ததும் மூர்ச்சை அடைந்து விழுந்து விட்டார். அங்கிருந்து அவரை தூக்கிக்கொண்டு போய் அவருடைய அறையில் சேர்த்தார்கள். இதற்குமுன் சில தடவை இம்மாதிரி கோகலே மூர்ச்சித்து விழுந்திருந்தபடியால் அதைக்குறித்து யாரும் பயப்படவில்லை. கோகலேயும் மூர்ச்சை தெளிந்து சுய உணர்வு பெற்றவுடனே விருந்து நடக்கட்டும் என்று சொல்லி அனுப்பினார். அவ்வாறே விருந்து நடந்தது.

ஆனால் கோகலே இந்த முறை மூர்ச்சையடைந்தது சாதாரண விஷயமாகப் போய்விட வில்லை. அதற்குப் பிறகு கோகலே உடல் வலிவு பெறவில்லை. அந்திய காலம் அவரை நெருங்கி வந்து கொண்டிருந்தது.

பூனாவிலிருந்து காந்திஜி இராஜகோட்டைக்கும் போர்பந்தருக்கும் சென்றார். அவருடைய தமையனார் முன்னமே காலஞ் சென்று விட்டார். காலஞ்சென்றவரின் மனைவியையும் மற்ற உறவினர்களையும் பார்க்க விரும்பி போனார்.

காந்தி மகாத்மாவின் உடை நாளுக்கு நாள் எளிமையாகி வந்தது. பாரிஸ்டர் வேலை தொடங்கியபோது மேனாட்டு நாகரிக உடுப்புத் தரித்திருந்தார்.தென்னாப்ரிக்காவில் போராட்டத்தில் இறங்கிய பிறகு அங்கே இந்தியத் தொழிலாளர்களைப் போல எளிய உடையை தரிக்கத் தொடங்கினார். ஆனால் இதுவும் பாதி மேனாட்டு முறையில் இருந்தது. தென்னாப்பிரிக்காவை விட்டு இந்தியா வந்தபோது கத்தியவாரில் அந்தஸ்து வாய்த்தவர்கள் உடுக்கும் உடை தரித்திருந்தார்.

இந்த உடையில் வேஷ்டி, உட்சட்டை, நீண்ட மேலங்கி, அங்கவஸ்திரம், தலைப்பாகை ஆகியவை இருந்தன. பம்பாயிலிருந்து ராஜகோட்டைக்குக் கிளம்பும்போது மூன்றாம் வகுப்பில் பிரயாணம் செய்ய மகாத்மா தீர்மானித்தார். அத்துடன் கத்தியவார் உடையில் நீண்ட மேலங்கியையும் உத்தரியத்தையும் புறக்கணித்து விட்டார். அலங்காரமான தலைப்பாகைக்கு பதிலாக எட்டணா விலையுள்ள காஷ்மீர் குல்லா ஒன்று வாங்கி வைத்துக் கொண்டார். மூன்றாம் வகுப்பில் ஏழைகளோடு பிரயாணம் செய்தபோது இம்மாதிரி எளிய உடுப்பு தரிப்பது தான் உசிதம் என்று கருதினார்.

அப்பொழுது பம்பாய் மாகாணத்தில் சில இடங்களில் பிளேக் நோய் பரவியிருந்தது. ஆகையால் வழியில் வாத்வான் என்னும் ஸ்டே ஷனில் பிரயாணிகள் வைத்தியப் பரிசோதனை செய்யப் பட்டார்கள். காந்திஜிக்குக் கொஞ்சம் ஜுரம் இருந்தது. அவரைப் பரிசோதனை செய்த உத்தியோகிஸ்தர் "நீர் இராஜ கோட்டை சென்றதும் அங்குள்ள பெரிய வைத்திய அதிகாரியிடம் சென்று ஆஜர் கொடுக்க வேண்டும்" என்று கட்டளையிட்டார்.

அந்த வாத்வான் ஸ்டே ஷனிலேயே மோதிலால் என்னும் தையற்காரர் ஒருவர் வந்து காந்திஜியை சந்தித்தார். அப்போது பிரிட்டிஷ் ஆட்சிக்கு நேராக உட்பட்ட பிரதேசத்திலிருந்து கத்தியவார் சமஸ்தானப் பிரதேசத்துக்குள் நுழையும் இடத்தில ஒரு சுங்கம் ஏற்படுத்தியிருந்தர்கள். இது வீரம் காம் ஸ்டே ஷனில் இருந்தது. பிரயாணிகளையும் அவர்களுடைய சாமான்களையும் பரிசோதனை செய்து சுங்கவரி விதித்து வசூலித்தார்கள். இதனால் பிரயாணிகள் மிக்க தொந்தரவுக்கு ஆளானார்கள். மேற்படி மோதிலால் என்னும் தையற்காரர் மகாத்மாவிடம் வீரம்காம் சுங்கவரி அநீதியைப்பற்றிப் பேசுவதற்காகவே வந்திருந்தார். அதைக் குறித்த எல்லா விவரங்களையும் எடுத்துச் சொன்னார். காந்திஜிக்கு அப்பொது சுரமாயிருந்தபடியால் அதிகம் பேச முடியவில்லை. ஆகையால் எல்லா விவரங்களையும் தெரிந்துகொண்டு ஒரே ஒரு கேள்வி கேட்டார்.

"நீங்கள் சிறைபுகுவதற்கு சித்தமா" என்பதுதான் அந்தக் கேள்வி. சிறை என்ற வார்த்தையைக் கேட்டு மோதிலால் பயப்பட்டு விடவும் இல்லை; ஆவேசமான பதில் சொல்லவும் இல்லை; " தாங்கள் தலைமை வகித்து நடத்தினால் நானும் இன்னும் பலரும் சிறை புகுவதற்குத் தயார். தாங்கள் கத்தியவாரைச் சேர்ந்தவர்கள். ஆகையால் தங்கள் பேரில் எங்களுக்கு முதல் உரிமை உண்டு. தாங்கள் தலைமை வகித்து நடத்தி இந்த அநீதியை ஒழிக்க வேண்டும்" என்று நிதானமாகப் பதில் சொன்னார். மகாத்மாவுக்கு இந்தப் பதில் மிகவும் பிடித்திருந்தது. தையற்கார மோதிலால் மீது மதிப்பும் அபிமானமும் ஏற்ப‌ட்டன‌. "ச‌ரி பார்க்க‌லாம்" என்று பதில் சொல்லிவிட்டுப் பிரயாணத்தைத் தொடர்ந்தார்.

மகாத்மா இராஜகோட்டையை அடைந்ததும் பெரிய சுகாதார அதிகாரியைப் பார்க்கப் போனார். இதற்குள் இராஜகோட்டையில் மகாத்மாவின் பெயர் பிரசித்தி அடைந்திருந்தது. எனவே அந்த உத்தியோகஸ்தர் மகாத்மா தம்மிடம் வர நேர்ந்தது பற்றி வருத்தப்பட்டார். ரயிலில் வைத்திய பரிசோதனை செய்தவர் மீது கோபம் அடைந்தார். மகாத்மா இனி தம்மிடம் வர வேண்டியதில்லை யென்றும் மகாத்மா இருக்கும் இடத்துக்கு இன்ஸ்பெக்டரை அனுப்பிவைப்பதாகவும் கூறினார்.

மூன்றாம் வகுப்பில் பிரயாணம் செய்தபடியினால் மகாத்மாவுக்கு மேற்கூறிய அநுபவம் கிடைத்தது. மூன்றாம் வகுப்பில் பிரயாணம்செய்து பிரயாணிகள் அடையும் கஷ்டங்களை நேரில் தெரிந்து கொள்வதில் மகாத்மாவுக்கு எப்போதும் ஆர்வம் இருந்தது. மகாத்மா இது சம்பந்தமாகக் கூறியிருப்பதாவது-- "பெரிய மனிதர்கள் மூன்றாம் வகுப்பில் பிரயாணம் செய்யப் பிரியப்பட்டால் ஏழைகள் உள்ளாக வேண்டியிருக்கும் எல்லா விதிகளுக்கும் அவர்களும் உள்ளாக வேண்டியது அவசியம். ரயில் உத்தியோகஸ்தர்களும் பாரபட்சமின்றி நடந்து கொள்ள வேண்டும். அவர்கள் மூன்றாம் வகுப்புப் பிரயாணிகளைச் சகோதர மனிதர்களாகவே பாவிப்பதில்லை என்பதும், கேவலம். ஆடு மாடுகளாகப் பாவிக்கிறார்கள் என்பதும், என்னுடைய அநுபவம். படித்த பணக்கார வகுப்பாரில் சிலர் தாங்களாகவே ஏழைகளின் அந்தஸ்தை ஏற்க முன்வர வேண்டும். அவர்கள் மூன்றாம் வகுப்பில் பிரயாணம் செய்யவேண்டும். ஏழைகளுக்குக் கிடைக்காத எந்த வசதியையும் தாங்கள் பெறக்கூடாது. பிரயாணத்தில் ஏற்படும் அவமதிப்புக்களுக்கும் அநீதிகளுக்கும் தலைகுனிந்து போகாமல் அவற்றைத் தொலைப்பதற்காகப் போராட வேண்டும்." இவ்வாறு எழுதிய மகாத்மா காரியத்திலும் அவ்விதமே நடந்து காட்டியிருக்கிறார்.

கத்தியவாரில் காந்திஜி எந்தப் பகுதிக்குப் போனாலும் வீரம்காம் சுங்க வரித்தொல்லையைப் பற்றி ஜனங்கள் புகார் செய்தார்கள். இது சம்பந்தமாக லார்ட் வில்லிங்டன் கொடுத்திருந்த வாக்குறுதியை மகாத்மா பயன்படுத்திக் கொள்ள விரும்பினார். வீரம்காம் சுங்கவரி சம்பந்தமாகச் சகல விவரங்களையும் சேகரித்து ஜனங்களுக்கு அது பெரிய அநீதிதான் என்பதை உறுதி செய்துகொண்டார். பிறகு பம்பாய் அரசாங்கத்துக்கு அந்த விவரங்களைத் தெரிவித்துக் கடிதம் எழுதினார். முதலில் லார்ட் வில்லிங்டனுடைய காரியதரிசியையும் பிறகு லார்ட் வில்லிங்ட‌னையும் பேட்டி கண்டார். அவர்கள் வாயினால் அநுதாபம் தெரிவித்துவிட்டு, "இது இந்திய சர்க்காரைச் சேர்ந்த விஷயம். ஆகையால் இந்திய‌ சர்க்காருக்கு எழுதிக் கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டார்கள்.

மகாத்மா இந்திய சர்க்காருக்கும் எழுதினார். பயன் ஒன்றும் கிட்டவில்லை. அப்போது கவர்னர் ஜெனரலா யிருந்த லார்ட் செம்ஸ்போர்டைச் சந்தித்து வீரம்காம் சுங்கத்தைப்பற்றிய விவ‌ர‌ங்க‌ளை எடுத்துக் கூறினார். "இப்ப‌டியும் உண்டா?" என்று லார்ட் செம்ஸ்போர்ட் அதிச‌ய‌ப்ப‌ட்டு விசார‌ணை ந‌ட‌த்தித் த‌க்க‌து செய்வ‌தாக‌ வாக்க‌ளித்தார். சில நாளைக்கெல்லாம் வீர‌ம்காம் சுங்க‌ம் எடுத்து விட‌ப்ப‌ட்ட‌து!

சர்க்காருடன் கடிதப் போக்குவரவு நடந்து கொண்டிருந்த காலத்தில் மகாத்மா காந்தி பகஸ்ரா என்னுமிடத்தில் பேசிய போது "வேறு வ‌ழிக‌ள் ப‌ய‌ன் த‌ராவிட்டால் சத்தியாகிரஹத்தைக் கைக்கொள்ள நேரலாம்" என்று குறிப்பிட்டிருந்தார். பின்னர் தான் மகாத்மா பம்பாய் சர்க்காரின் காரியதரிசியைப் பார்க்க நேர்ந்தது. காந்திஜியின் பேச்சைக் காரியதரிசி குறிப்பிட்டு, "இந்தப் பயமுறுத்தலுக்கு சர்க்கார் இணங்கி விடுவார்கள் என்பது உம்முடைய எண்ணமா?" என்று கேட்டார்.

"நான் கூறியதில் பயமுறுத்தல் ஒன்றுமில்லை. குறைகளை நிவர்த்தி செய்துகொள்ள நியாயமான வழி ஒன்றை மக்களுக்கு எடுத்துக் காட்டினேன். சத்தியாகிரஹ‌ம் பலாத்காரம் சிறிதும் அற்ற ஆயுதம். அதைப்பற்றி ஜனங்களுக்கு எடுத்துச் சொல்வது என் கடமை. பிரிட்டிஷ் அரசாங்கம் மிக்க வலிமை பொருந்தியது என்று எனக்குத் தெரியும். ஆனால் சத்தியாகிரஹம் தோல்வியே அறியாத ஆயுதம் என்பதில் எனக்குச் சிறிதும் சந்‌தேக‌ம் இல்லை" என்று ம‌காத்மா காந்தி ப‌தில் அளித்தார்.

வீரம்காம் சுங்கவரியைப் ப‌ற்றிய‌ கிள‌ர்ச்சியை ம‌கா‌த்‌மா காந்தி இந்தியாவில் ச‌த்தியாக்கிர‌ஹ இய‌க்க‌த்தின் ஆர‌ம்ப‌ ந‌ட‌வ‌டிக்கை என்று க‌ருதினார். அது வெற்றிக‌ர‌மாக‌ முடிந்த‌து ஒரு சுப‌ச‌குன‌ம் அல்ல‌வா?


-----------------------------------------------------------

842. சாவி -18

அக்கப்போர் சொக்கப்பன்
 சாவி 


[ ஓவியம்: கோபுலு ]


====

''சார், சார்!'' என்று கையைத் தட்டி, குடியே முழுகி விட்டதைப் போல் அவசரமாக யாரையோ கூப்பிடுகிறானே, அவன்தான் அக்கப்போர் சொக்கப்பன்.

காலம், இடம், மனிதர்களின் தராதரம் எதுவும் அவனுக்கு அக்கறை கிடையாது. யாராய் இருந்தாலும், எந்த இடமாய் இருந்தாலும் அவர்களைக் கூப்பிட்டு பயங்கரமாக நாலு சங்கதிகளையாவது சொல்லாவிட்டால் அவனுக்கு மண்டையே வெடித்துவிடும்.

''சார், உங்களுக்கு விஷயமே தெரியாதா? ராயப்பேட்டைல அரசியல் கட்சிங்க ரெண்டு, ஊர்வலமா போனதுல ரெண்டுக்கும் மோதல் ஏற்பட்டு, பெரிய ரகளை! ஒரே கல் வீச்சு! இதுவரைக்கும் முன்னூறு பேருக்கு மேலே பலத்த அடி. நாலு பேர் மண்டை உடைஞ்சு செத்துட்டாங்க. அடி பட்டவங்களுக்கு ராயப்பேட்டை ஆஸ்பத்திரியிலே இடம் போதாம, ஜெனரல் ஆஸ்பத்திரிக்கு வேற தூக்கிட்டுப் போறாங்க சார்!'' என்பான்.

ராயப்பேட்டைப் பக்கம் போய்ப் பார்த்தால், அங்கே இரண்டு பிச்சைக்காரர்களுக்குள் பஸ் ஸ்டாண்டில் ஏதாவது தகராறு நடந்திருக்கும். போலீசார் வந்து அவர்களைப் பிடித்துக்கொண்டு போயிருப்பார்கள். அவ்வளவு தான்!

திடீரென்று ஓடிவந்து, ''புழலேரி உடைத்துக்கொண்டுவிட்டது. மவுன்ட்ரோடு பக்கம் வெள்ளம் வந்து கொண்டிருக்கிறது'' என்று ஒரு புரளியைக் கிளப்பி விடுவான். அந்தச் செய்தி கேட்டு மவுன்ட் ரோடே அல்லோலகல்லோலப் படும். அடுத்தாற்போல் மயிலாப்பூருக்குப் போய், ''வெள்ளத்தில் மவுன்ட்ரோடு பூராவும் முழுகி விட்டது. எல்.ஐ.சி. கட்டடத்தைத் தவிர எல்லாம் போய்விட்டது'' என்பான்.

அங்கிருந்து இன்னொரு இடத்துக்குப் போவான். அங்கே யாராவது குப்பைமேட்டுக்குத் தீ வைத்துக் கொளுத்திக்கொண்டு இருப்பார்கள். அதைப் பார்த்து விட்டு தெரிந்தவர்களிடமெல்லாம் ஓடிப்போய், ''சார்! பழைய மாம் பலத்தில் ஒரு தெருவே தீப்பிடிச்சு எரியுது சார். ஒரு டஜன் ஃபயர் என்ஜின் வந்து தீயை அணைச்சுக் கிட்டிருக்கு. ஆனா, இன்னும் தீ அடங்கினபாடில்லே'' என்பான்.

யாராவது ரோடிலே ஒரு நாலணாவைத் தொலைத்து விட்டிருப்பார். அந்தச் செய்தி சொக்கப்பனின் காதுக்கு எட்டும். அவ்வளவுதான்; சொக்கப்பன் தனக்குத் தெரிந்தவர்கள் வீட்டுக் கெல்லாம் போய், ''ஸார்! துரைசாமி இன்னிக்கு நடுரோடிலே
  நாலாயிரம் ரூபாயைத் தொலைச்சுட்டான் ஸார்!'' என்பான். அதே செய்தியை அடுத்தவரிடம் போய் சொல்லும்போது, 'நாற்பதாயிரம்' என்பான். அதற்கடுத்தவரிடம் போகும்போது, அது நாலு லட்சம் ஆகிவிடும்!
[ ஓவியம்: நடனம் ]

காலைப் பத்திரிகைகளில் வரும் அக்கப்போர்களையெல்லாம் ஒன்றுவிடாமல் படித்து விட்டு, அவற்றுக்குக் காது மூக்கு வைத்து பயங்கரமாகச் சிருஷ்டித்து நாலு பேரிடத்தில் சொல்லாவிட்டால், அவனுக்கு நிம்மதி ஏற்படாது.

''பங்களூர்லே பாங்க் ஒண்ணு குளோஸ் ஆகப் போறதுன்னு ஒரு ஸீக்ரெட் இன்ஃபர்மேஷன் கிடைச்சுது. உடனே போய் அந்த பாங்கிலிருந்த என் பணம் பூரா வையும் வித்ட்ரா பண்ணிண்டு ராத்திரியோடு ராத்திரியா காரிலேயே திரும்பி வந்துட்டேன்'' என்று கரடி விடுவான்.

உலகமே பிரளயத்தில் மூழ்கி விடப்போவதாக போன வருஷம் ஒரு பெரிய வதந்தி அடிபட்டுக் கொண்டிருந்ததல்லவா? அந்த வதந்தியை அத்தனை பயங்கரமாகப் பரப்பியவனே அக்கப்போர் சொக்கப்பனாய்த்தான் இருக்க வேண்டும்!

[ நன்றி: விகடன் ]


தொடர்புள்ள பதிவுகள்:
சாவி படைப்புகள்

புதன், 20 செப்டம்பர், 2017

841. கு.அழகிரிசாமி - 2

அன்னி பெஸண்ட்
கு.அழகிரிசாமி செப்டம்பர் 20. அன்னி பெஸண்டின் நினைவு தினம்.

‘சக்தி’ இதழில் 1947-இல் வந்த ஒரு கட்டுரை இதோ!
==தொடர்புள்ள பதிவுகள்:

அன்னி பெசண்ட்: விக்கிப்பீடியா

கு.அழகிரிசாமி