வியாழன், 18 மே, 2017

725. எம்.வி.வெங்கட்ராம் - 1

"மணிக்கொடி' எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராம்
 பா.முத்துக்குமரன்



மே 18. ‘மணிக்கொடி’ எழுத்தாளர் எம்.வி. வெங்கட்ராமின் பிறந்த நாள்.
====

தோற்றத்தில் எளிமை; படைப்புகளில் முதிர்ச்சி; வாழ்ந்த காலம் வரையிலும் கள்ளமற்ற குழந்தைத் தனமான முக அமைப்புடன் எளிதில் காணக் கிடைக்காத அழகிய சிரிப்பு; கும்பகோணம் வெற்றிலையும், பன்னீர்ப் புகையிலையுமாய் வெற்றிலைச் சிவப்புடன் சேர்ந்து சிரிப்பு மணக்கும் வாயுடன் வலம் வந்தவர் - இத்தனை பீடிகைக்கும் சொந்தக்காரர் "மணிக்கொடி' எழுத்தாளரும் மூன்று எழுத்துகளால் (எம்.வி.வி.) இலக்கிய வட்டாரத்தில் அழைக்கப்படுபவருமான எம்.வி.வெங்கட்ராம்.

""பேசாமலே விழியால் நட்பைச் சுரக்கும் உள்ளம். என்னிடம் மட்டும் இல்லை; எல்லோரிடமும் இப்படித்தான். எந்த மனிதனிடமும் வெறுப்போ, கசப்போ தோன்றாத, தோன்ற முடியாத மனது இவனுக்கு''- மோகமுள் நாவலில் ஒரு பாத்திரமாகவே தனது தோழரான வெங்கட்ராமைப் படைத்து அவரது இயல்பைப் பதிவு செய்துள்ளார் தி.ஜானகிராமன். இருவரும் கும்பகோணம் அரசினர் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள்.

கும்பகோணத்தில், சௌராஷ்டிரக் குடும்பத்தைச் சேர்ந்த வீரய்யர்-சீதை அம்மாள் தம்பதிக்கு 1920-ஆம் ஆண்டு மே 18-ஆம் தேதி பிறந்த எம்.வி.வி., தனது ஐந்தாம் வயதில் தாய்மாமன் வெங்கடாசலம்-சரஸ்வதிக்கு சுவீகாரப் பிள்ளையானார். பி.ஏ., பொருளாதாரம் படித்த அவர், தொடக்கத்தில் பட்டுச் சரிகை வணிகம் செய்தார். பின்னர் முழுநேர எழுத்தாளரானார்.

தமிழ்ச் சிறுகதை இலக்கியத்துக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பு நல்கியுள்ள வெங்கட்ராமின் முதல் சிறுகதையான "சிட்டுக்குருவி' அவரது 16-வது வயதில், 1935 டிசம்பர் 15-ஆம் தேதியிட்ட மணிக்கொடி இதழில் வெளியானது. தமிழ் இலக்கியத்தை பண்டிதர்களிடமிருந்து மீட்டுக் கொடுத்தவர் மகாகவி பாரதி. அவருக்குப் பின் தமிழ்மொழி, இலக்கிய மறுமலர்ச்சி இயக்கத்தில் ஏற்பட்ட தேக்கத்தைப் போக்கியதில் மாதமிருமுறை வெளியான "மணிக்கொடி' இதழுக்குப் பெரும் பங்கு உண்டு. இத்தனை சிறப்பு மிக்க அந்த இதழில் 1938 பிப்ரவரிக்குள் 15 சிறுகதைகளை எழுதிவிட்டார் எம்.வி.வி. அந்தக் காலகட்டத்தில் "மணிக்கொடி' ஆசிரியராக பி.எஸ். ராமய்யா இருந்தார்.



1941-1946-ஆம் ஆண்டுகளில் கலா மோகினி, கிராம ஊழியன், சிவாஜி ஆகிய இதழ்களில் எம்.வி.வி. அடிக்கடி எழுதியுள்ளார். ""ஆரணி குப்புசாமி முதலியார், ரங்கராஜு, வடுவூர் துரைசாமி அய்யங்கார் முதலியவர்கள் தழுவலாகவோ சொந்தமாகவோ எழுதிய நாவல்களையும், கலைமகள், ஆனந்தவிகடன் உள்ளிட்ட மாத, வார இதழ்களையும் ஆர்வத்துடன் படித்ததால் நானும் ஏன் எழுதக் கூடாது? என்ற அபாயகரமான ஆசை எனக்குள் மூண்டது. இந்த ஆசை தவிர்க்க முடியாத துன்பமாகி எழுதுகிற முயற்சியில் ஈடுபட்டேன்'' என்று தான் ஒரு எழுத்தாளனாக உருவானதை மணிக்கொடி பொன்விழா மலரில் எம்.வி.வி.யே குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு தொடங்கிய எழுத்து ஆர்வம் 2000-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி அவர் மறையும் வரை தொடர்ந்தது என்றே சொல்லவேண்டும். எழுதாத போதும், எழுத முடியாத போதும், எழுதுவது பற்றிச் சிந்தனை செய்வதே அவரது இயல்பாக இருந்தது.




மனைவி ருக்மணி அம்மாள், 4 மகன்கள், 3 மகள்களுடன் பெரிய குடும்பஸ்தராய் இருந்தார் எம்.வி.வி. ""சென்னை பாண்டிபஜார் பழங்கட்டடம் ஒன்றின் மாடியறை. அதில் கூரை உயரத்துக்குப் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததால், அந்த சிறு அறை ஐந்தாறு இருண்ட குகைகளாக மாற்றப்பட்டிருந்தது. அது ஒரு பதிப்பாளர் அலுவலகம். சென்னைக்கு வெங்கட்ராம் அவ்வப்போது வந்து அந்தக் குகைகளில் தங்கி, படுத்து, குளித்துத் துணி உலர்த்தி, தனிமை கிடைத்த நேரங்களில் அந்த இருட்டில் அயராமல் எழுதிக் குவித்துக் கொண்டிருந்தார். பொருளாதாரப் பாதுகாப்பு படைத்திராத முழுநேர எழுத்தாளர் வேறென்ன செய்ய முடியும்?''-அசோகமித்திரன் கட்டுரைகள் நூலில் எம்.வி.வி. பற்றிய நினைவுகளை அசோகமித்திரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

""சென்னையில் எழுத்தாளனாகப் புகுந்து முதன்முதலில் பசியின் சுகத்தை உணர்ந்தேன்'' என்று சுய வாக்குமூலமே தந்துள்ளார் வெங்கட்ராம். வளமாக கலைஞன் வாழ்ந்தால், அவனுடைய படைப்பாற்றல் வற்றிப்போகும் என்கிற உண்மையைத் தமிழகம் நன்றாகத் தெரிந்து வைத்துள்ளது என்பது அவரது ஆதங்கம்.


நித்தியகன்னி, இருட்டு, உயிரின் யாத்திரை, அரும்பு, ஒரு பெண் போராடுகிறாள், வேள்வித் தீ, காதுகள் ஆகியன வெங்கட்ராமின் நாவல்கள். மாளிகை வாசம், உறங்காத கண்கள், மோகினி, குயிலி, இனி புதிதாய், நானும் உன்னோடு, அகலிகை முதலிய அழகிகள், எம்.வி. வெங்கட்ராம் கதைகள், முத்துக்கள் பத்து, பனிமுடி மீது கண்ணகி ஆகியன அவரது சிறுகதைத் தொகுப்புகள்.

தி.ஜானகிராமன், க.நா.சு., மௌனி ஆகியவர்களைப் பற்றி எம்.வி.வி.யின் "என் இலக்கிய நண்பர்கள்' கட்டுரை பொக்கிஷப் படைப்பு. "நாட்டுக்கு உழைத்த நல்லவர்' என்ற தலைப்பில் பெரும் தலைவர்களைப் பற்றி 40-க்கும் மேற்பட்ட நூல்களை அவர் எழுதியுள்ளார்.

மணிக்கொடி எழுத்தாளர்களில் எஞ்சி இருப்பவர்களுக்கு இடம் கொடுக்கவும், தரமான எழுத்தாளர்களைத் தேடி இடம் தரவும் "தேனீ' என்ற இலக்கிய இதழைத் தொடங்கி சில காலம் நடத்தினார் எம்.வி.வி. தி.ஜானகிராமனுக்கு இலக்கிய அந்தஸ்தைத் தேடித்தந்த "ரத்தப்பூ' சிறுகதை "தேனீ'யில் வெளியாயிற்று.

ஒரு நாவல் போல் மற்றொரு நாவல்; ஒரு சிறுகதைபோல் இன்னொரு சிறுகதை இருக்கக் கூடாது என்பது வெங்கட்ராமின் கருத்து. அதற்கேற்ப அவரது படைப்புகள் அமைந்தன.

தாயையும், தாய்மையையும் தெய்வநிலையில் வைப்பதே பழந்தமிழ் இலக்கியம் தொடங்கி இன்று வரை நடைமுறையில் இருந்து வருகிறது. அதிலிருந்து மாறுபட்டதாய் எம்.வி.வி.யின் "பைத்தியக்காரப் பிள்ளை' கதை அமைந்துள்ளது. மனமுரண்களை அடிப்படையாகக் கொண்ட "பூமத்திய ரேகை' சிறுகதை அவரது எழுத்து ஆளுமைக்கு ஓர் உதாரணம். ஆனந்த விகடனில் 1970-களில் மாதத் தொடர் நாவலாக வந்த "நஞ்சு' வித்தியாசமான படைப்பு.

"பாலம்' இதழின் கௌரவ ஆசிரியராக இருந்த எம்.வி.வி., அதில் "காதுகள்' நாவலை எழுதினார். 1993-ஆம் ஆண்டு "காதுகள்' புதினத்துக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது. ஒருவனுக்கு திடீரென்று காதுக்குள் வினோத சப்தங்கள் கேட்கும். அது இரைச்சலாகும். சமயத்தில் அதுவே இசையாகவும், பிசாசுக் குரலாகவும் ஒலிக்கும். வெங்கட்ராம் தம் காதுக்குள் கேட்ட குரலைத்தான் அந்நாவலில் எழுத்து வடிவில் பதிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். நாவல் வெளியானபோது அதன் கருப்பொருளை பலர் ஒப்புக்கொள்ளவில்லை.

எம்.வி.வி.யின் படைப்புகளில் அவருக்கே மிகவும் பிடித்தது "அரும்பு' நாவல். இந்த நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைப்பதாய் இருந்து, பின்னர் கடைசி நேரத்தில் மாறிவிட்டதாக "சாரதா' இதழுக்கு அளித்த நேர்காணலில் அவரே குறிப்பிட்டுள்ளார். சௌராஷ்டிர நெசவாளர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் "வேள்வித் தீ' நாவலும் கவனத்தில் கொள்ள வேண்டிய படைப்பு.

மகாபாரதத்தின் சிறு கதாபாத்திரமான மாதவிக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டு மனம் வெதும்பி, அப்பெண்ணை மையமாகக்கொண்டு படைக்கப்பட்டது "நித்யகன்னி'. ""ஒரு பெண்ணின் உடல், மனம் இரண்டும் அறம், தர்மம் என்ற பெயரால் கொடூரமான சாத்வீக வன் புணர்ச்சிக்கு ஆளாக்கப்படுவதை புராண கால வாழ்வின் ஊடாகப் பேசும் ஒரே தமிழ் நாவல் இதுதான்'' என்று ஜே.பி.சாணக்கியா இந்நாவலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

"எம்.வி. வெங்கட்ராம் கதைகள்' என்ற தொகுப்புக்குத் தமிழக அரசின் பரிசு கிடைத்தது. பரிசு வாங்க வேண்டிய நாளில் அவர் மறைவு நேர்ந்தது தாங்க முடியாத சோகம். சித்த சூரி ரத்ன விருது, லில்லி தேவசிகாமணி விருது, சாந்தோம் விருது, புதுமைப்பித்தன் சாதனை விருது உள்ளிட்ட விருதுகளும் அவருக்குக் கிடைத்துள்ளன.

"விக்ரஹவிநாசன்' என்ற புனைபெயரில் எம்.வி.வி. கவிதைகள் எழுதியுள்ளார். 1952-53-களில் கவுன்சில் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

""என் கதைகளில் என்னையே தேடினேன். நான் கேட்டதையும், பேசியதையும், பார்த்ததையும், சுவைத்ததையும், தொட்டதையும், விட்டதையும், அறிந்ததையும், சிந்தை செய்ததையும்தான் எழுதினேன்'' என்பார் எம்.வி.வி. அவரது எழுத்து பின்னிரவின் மழை போல் அதிகம் அறியப்படாததாய் இருக்கலாம். ஆனால், அவை அதிஅற்புதம் மிக்கவை என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. தான் மறைந்து விட்டாலும் என்றும் மறையாத இலக்கியச் செல்வத்தை அளித்துள்ள எம்.வி.வி.-யின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்படவேண்டும் என்பது அவரது எழுத்தை நேசிக்கும் இலக்கிய ஆர்வலர்கள், வாசகர்களின் வேண்டுகோளாக உள்ளது.

[ நன்றி : தினமணி ]

தொடர்புள்ள பதிவுகள்:

எம்.வி.வெங்கட்ராம் 

1 கருத்து:

Yaathoramani.blogspot.com சொன்னது…

எம்.வி.வி அவர்களை அறியாதவர்கள் முழுமையாக அறிந்துகொள்ளும்படியான அருமையான கட்டுரை பகிர்தமைக்கு மிக்க நன்றி