திங்கள், 22 மே, 2017

728. தமிழ்வாணன் - 4

தமிழ்வாணனைப் பற்றி ... 
புனிதன் 



மே 22. தமிழ்வாணனின் பிறந்தநாள். 

குமுதத்தில் உதவி ஆசிரியராய் இருந்த ‘புனிதன்’ எழுதிய கட்டுரை இதோ.
=================
நான் பத்திரிகைத் துறைக்கு வந்ததே ஒரு விபத்து மாதிரிதான். 

பள்ளிப் பருவத்திலிருந்தே எனக்கு எழுத்தில் ஆர்வம். குறிப்பாகக் கவிதைத் துறை. கி.ஆ.பெ., அவர்கள் 'தமிழ்நாடு' என்று ஓர் அரையணாப் பத்திரிகை நடத்தி வந்தார். அதில் 'ஒட்டக் கூத்தன்' என்ற புனைப்பெயரில் எனது கவிதைகள் (மரபு) இடம் பெற்றன. 

முருகு சுப்பிரமணியம் அவர்களை ஆசிரியராகக் கொண்ட 'பொன்னி'யில் பாரதிதாசன் பரம்பரை என்ற சங்கப் பலகை என் கவிதைக்கு இடமளித்திருக்கிறது. 

நானாக இரண்டு மேடை நாடகங்கள் எழுதி, மேடையேற்றி நடித்தும் இருக்கிறேன். 

இத்தனையும் தெரிந்திருந்தும், என் தந்தையார் எனது எழுத்தார்வத்தின் மென்னியைத் திருகியே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு என்னைப் பொறியியல் துறையில் புகுந்தே ஆகவேண்டும் என்று. முதலில் கோவை பி.எஸ்.ஜி., பொறியியல் கல்லூரியில் பொறியியல் துறையில், எல்.டி.எம்.,மில் சேர்த்தார். அதை முடிக்கு முன், இரண்டாண்டு போதுமென்று இழுத்து வந்து அவரது விசைத் தறிக் கூடத்தை மேற்பார்க்க விட்டார். 

புனிதன்
அப்போதும் என் கவனம் அந்த நாள் 'பிரசண்ட விகடன்,' 'ஆனந்த போதினி பத்திரிக்கைகளில் என் எழுத்தை அச்சேற்றி ஆனந்த படுவதிலேயே குறியாய் இருந்தது. விட்டாரா அப்பா? 

முன்னாள் ராணுவத்தினர் தொழில் பயிற்சி முகாமாய் இருந்த ஐ.டி.ஐ., சிவிலியன்களுக்கு திறந்து விடப்படுவதாய் '51ல் செய்தி வர, அந்தக் கல்லூரியில் தொழில் பயிற்சி பெறும்படி சொன்னார். என்ன தொழில்?
'விண்ணப்பித்து வை. கிடைக்கிற தொழிலில் சேர்ந்து கொள்.'
விண்ணப்பித்தேன். துரதிர்ஷ்ட வசமாய் நான் பிசிக்ஸ், கணக்குப் பாடங்களில் நல்ல மார்க் எடுத்திருந்ததால், 'ரேடியோ மெக்கானிஸம்' துறையில் அரசு உதவிச் சம்பளத்தோடு (ரூ.25) இடம் கிடைத்தது.
தி.நகரில் வடக்கு உஸ்மான் ரோடை ராஜாஜி அவர்கள் குடியிருந்த பஸ்லுல்லா ரோடு வெட்டிக் கொண்டு செல்லும் அந்த மூலைத் தென்னந்தோப்புக்கு மத்தியில் இருந்தது அன்றைய ஐ.டி.ஐ., நான் சென்னைக்கு வந்து சேர்ந்ததே அப்போதுதான். அதற்குப் பிறகு நான் என் சொந்த ஊரான தர்மபுரி வாசத்தை இழந்துவிட நேரும் என்று நான் அப்போது எதிர்பார்க்கவில்லை. 

தமிழ்வாணன் சீண்டல் 
 
என் தோழர், குரு, வழிகாட்டி தமிழ்வாணன் 
உஸ்மான் ரோடு குறுக்குத் தெருக்களில் ஒன்றான வியாசராவ் தெருவில் பிரம்மசாரி தமிழ்வாணன், தன் சகோதரர் ஆனாருனாவுடன் குடியிருந்தார். ஆனாருனா நடத்தி வந்த மெஸ்ஸில் ராயவரம் நடராசன் சாப்பிட்டு வந்தார். 

நடராசன் எனது ரேடியோமெக்கானிஸம் வகுப்பு தோழர். எங்கள் விடுதி (பேரக்ஸ்)சில் எனக்கு அடுத்த கட்டில் அவருடையது. நாங்கள் இருவரும் நல்ல தோழர்கள். அவர்தான் ஒருநாள் என்னை அழைத்துச் சென்று தமிழ்வாணனுக்கு அறிமுகம் செய்து வைத்தார். ' இவர் கூடப் பத்திரிக்கைக்கு எழுதுவார் அண்ணே,' என்றார். 

தமிழ்வாணன் என்னை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, 'என்ன எழுதுவீங்க' என்று கேட்டார். 

'கவிதைதான் எழுதுவேன்,' என்றேன் மகா கர்வத்தோடு. 

உடனே கைதட்டி ஒரு கேலிச் சிரிப்பு சிரித்தாரே பார்க்க வேண்டும், எனக்கு மரண அடி. தொடர்ந்து, 'இப்பல்லாம் கவிதையை யார்சார் படிக்கிறாங்க? நீங்க ஏழெட்டு கதை எழுதிட்டு வந்து கொடுத்துட்டுப் போங்க. அதிலே ஏதாவது ஒண்ணை செலகட் பண்ணிக் கல்கண்டிலே வெளியிடலாம்,' என்றார். 

தமிழ்வாணன் மட்டும் என்னை இப்படிச் சீண்டி விடாமல் இருந்திருந்தால், நான் பத்திரிகைத் துறைக்கு வந்திருப்பேனா? என்பது சந்தேகம்தான்.
அவர் அப்படிச் சொன்னதும், எனக்குள்ளிருந்து ஓர் உத்வேகம். பேரறிஞர்களின் அங்கீகாரம் பெற்றுப் பெரியவர்களுக்குக் கவிதை எழுதிக் கொண்டிருக்கும் என்னைப் பார்த்து, சிறுவர்களுக்கான கதைகள் ஏழெட்டு எழுதித் தந்தால், அதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் போடுவதாய் ஒருத்தர் சொல்லப் போச்சா? அதையும் பார்த்விடுவோம்! 

தமிழ்வாணன் வீட்டிலிருந்து என் விடுதிக்கு இரண்டு கி.மீ., தூரத்துக்குள்தான் இருக்கும். வந்து சேர்வதற்குள் இரண்டு சிறுவர் கதைகளுக்கான பிளாட் உதயமாயிற்று. அப்போதே முனைப்பாக உட்கார்ந்து எழுதி முடித்து விட்டேன் இரண்டு கதைகளையும்.
மறுநாள் ராயவரம் நடராசனிடம் இரண்டு கதைகளையும் கொடுத்து, 'கொண்டு போய் உங்கள் தமிழ்வாணனிடம் கொடுத்து விடு,' என்று சொல்லி அனுப்பிவிட்டேன். 

அதற்குப் பிறகு இரண்டு வாரத்துக்கு மேல் நான் தமிழ்வாணன் இருந்த திசையிலேயே திரும்பவில்லை. பிறகு, ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலை, நான் என் விடுதியில் இருந்து பனகல் பார்க் சென்று கொண்டிருந்தேன். பின்னாலிருந்து யாரோ என் பெயர் சொல்லிக் கூப்பிடுவது கேட்டது.
திரும்பிப் பார்த்தால், தமிழ்வாணன்! அவரது அட்டகாச சிரிப்போடு என்னை நெருங்கி வந்து தோளில் தட்டிக்கொடுத்தார். 'என்ன நீ, கல்கண்டு பார்க்கலையா?' என்றார். 

'நான் அதெல்லாம் பார்க்கிற வழக்கமில்லை,' என்றேன் விறைப்பாக.
மறுபடியும் அதே சிரிப்பு. 'சரி, இப்ப பார்,' என்று அந்த வாரத்துக் கல்கண்டை என் முகத்தெதிரே நீட்டினார். 

ஓவியர் ரவியின் அட்டைப் படம். உள்ளே புரட்டினேன். அட்டையும், அடுத்த பக்கமும் புரட்டியவுடனே என் கதை. சிறுவர்களுக்காக நான் எழுதிய முதல் கதை! 'சண்முகம்' என்ற பெயரில் வெளிவந்திருந்தது.
நான் அவரை வியப்புடன் நிமிர்ந்து பார்த்தேன். 'உம்... மேலே புரட்டு...' புரட்டினேன். நடுப் பக்கத்துக்கு அப்பால் என்னுடைய அடுத்த கதை. 'சுந்தரம் என்ற பெயரில். நான் கொடுத்தனுப்பிய இரண்டு கதைகளையும் வெளியிட்டு இருந்தார். சண்முகம் +சுந்தரம் =சண்முக சுந்தரம் - என் இயற்பெயர். 

அன்றிலிருந்து தமிழ்வாணனுக்கும் எனக்கும் நட்பு இறுகியது. 
 
கல்கண்டு உதவியாசிரியர் ஒருநாள், 'படித்து முடித்த பிறகு என்ன செய்யப் போறே?' என்றார் என்னிடம் கொஞ்சம் சீரியஸாக.

 'ஏதாவது வேலை தேடணும்...' என்று இழுத்தேன். 

என் குடும்ப சூழ்நிலை காரணமாக நான் திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு -படிப்பு முடியுமுன்னரே- ஆளாகியிருந்த நேரம் அது. 

'நீ என் கூடவே இருந்துடு,' என்றார். 

'சரி. இப்ப நான் என் கல்யாணத்துக்கு ஊருக்குப் போக வேண்டியிருக்கு. அதான் சொல்லிக்கிட்டுப் போக வந்தேன்,' என்று விடைபெற்றேன். 

நான் திருமணம் முடித்துக் கொண்டு உறவிலே பெண்- திரும்பி வந்து தமிழ்வாணனைப் பார்க்கக் குமுதம் அலுவலகம் சென்றேன். 
சிந்தாதிரிப் பேட்டை அருணாசல நாயக்கன் தெருவிலிருந்து குமுதம் அலுவலகம், இப்போதுள்ள கெல்லீஸ் கட்டிடத்துக்குப் பெயர்ந்த வேளை அது. 

தமிழ்வாணனின் உதவியாளராக, கல்கண்டு துணையாசிரியராக, அப்போது ரா.கி.ரங்கராஜன் இருந்தார். 

ஆசிரியரும், துணையாசிரியரும் 'வா, போ' என்று ஒருமையில் பேசிக்கொள்வது வேடிக்கையாக இருக்கும். விசாரித்தபோது தெரிந்தது. இங்கு வருமுன்னர் இருவரும் 'சக்தி' பத்திரிகையில் ஒன்றாகப் பணியாற்றியவர்கள் என்று! ரா.கி.ர., அப்போதெல்லாம் கொஞ்சம் 'ரிசர்வ் டைப்,' அவரிடம் பேசுவதற்கு எனக்கு கூச்சமாய் இருக்கும். 

தமிழ்வாணனுக்கு அடுத்த சீட் ரா.கி.ர.,வுடையது. நான் போயிருந்த சமையம் அந்த சீட் காலியாக இருந்தது. 'ரங்கராஜன் சார் வரலியா? என்று தமிழ்வாணனிடம் கேட்டேன். 

மணியடித்து ஆபிஸ் பையனை வரவழைத்து, 'அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்தரைக் கொண்டா,' என்றார். 

பையன் ரிஜிஸ்தரைத் கொண்டு வந்து என் முன் பிரித்து வைத்தான். என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை. 1952, ஜூன் மாத ஆரம்பத்திலேயே என் பெயர் பதிவாகியிருந்தது. நான் இரண்டாவது வாரம்தான் சேர்ந்தேன். 

சற்றுப் பொறுத்து, 'சரி, வா. முதலாளியைப் பார்த்து விட்டு வரலாம்,' என்று கூட்டிப் போனார். 

அப்போதுதான் நான் முதன் முதலாக ஆசிரியர் எஸ்.ஏ.பி., அவர்களை நேருக்கு நேர் நெருக்கத்தில் பார்த்தது. ஏதோ காலங் காலமாய் உடனிருந்து பழகியவரைப் போன்ற அன்னியோன்னியத்துடன் அவர் புன்னைகைத்து கை குலுக்கியபோது, சிலிர்த்துப் போனேன். 'தமிழ்வாணன் உங்களைப் பற்றிச் சொன்னார். நல்லா செய்யுங்க. செய்வீங்கன்னு நம்பிக்கை இருக்கு, என்றார். 

அதற்கு மேல் அங்கு இருக்கத் தேவையில்லை என்ற பாவைனையில் தமிழ்வாணன் என்னை ஜாடையாக நோக்கித் தலையசைத்தார். நானும் எழுந்து கொண்டேன். அவருடன் வெளி நடந்தேன். 

அப்போது எனக்குப் பத்திரிகைத் துறையில் முன் அனுபவம் என்று சொல்லப் போனால், பள்ளியில் படிப்பு முடித்த கையோடு வந்த தேர்தலுக்கான, ஓட்டர் லிஸ்ட் புரூப் பார்த்த அனுபவம்தான். தாலுகா ஆபிஸில் ஓய்வு பெற்ற தாசில்தார் முனுசாமி முதலியார் புரூப் திருத்த நல்ல பயிற்சி அளித்திருந்தார். அதுவே பெரிய தகுதி போல் த.வா., பாராட்டினார். 

மற்றபடி பத்திரிக்கை தயாரிக்கத் தேவையான அத்தனை அறிவுக்கும் அஸ்திவாரம் போட்டவர் தமிழ்வாணன்தான்.

[ நன்றி:  www.appusami.com

தொடர்புள்ள பதிவுகள்:

கருத்துகள் இல்லை: