சனி, 24 ஜூன், 2017

751. 'சிட்டி' சுந்தரராஜன் -3

பெயரும் பாத்திரமும் 
“சிட்டி”ஜூன் 24. ‘சிட்டி’ அவர்களின் நினைவு தினம்.

1938-இல் ‘பாரதமணி’யில் வந்த ஒரு கட்டுரை.

தொடர்புள்ள பதிவுகள்:

'சிட்டி' சுந்தரராஜன்

வெள்ளி, 23 ஜூன், 2017

750. தேவன்: துப்பறியும் சாம்பு - 8: மாங்குடி மகராஜன்

மாங்குடி மகராஜன் 
தேவன் - கோபுலு 

இந்தப் பதிவுக்குக் காரணங்கள் இரண்டு!

1) போன மாதம் நான் படித்த ஒரு செய்தித் தலைப்பு:
'துப்பறியும் சாம்பு' விஷால்

அட, “துப்பறிவாளன்” படத்தின் இயக்குநர் மிஷ்கினுக்குத் “துப்பறியும் சாம்பு” பற்றித் தெரிந்திருக்கிறதே என்று மகிழ்ந்தேன்!


2) இந்த மாதம், டொராண்டோவில் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் விருதைப் பெற வந்த மிஷ்கினை நேரில் சந்தித்தேன்!

3)  சரி,  மூன்றாவதாக என் பதிவாக ஒரு ‘சாம்பு’க் கதை வருவதுதானே பொருத்தம் ?

இதோ அது!

இது தேவனின்  ‘துப்பறியும் சாம்பு’ கதைகளில் (1942) இரண்டாவது கதை. கோபுலுவின் காமிக்ஸ் வடிவம் 58 -இல் விகடன் இதழிலும், பிறகு மீண்டும் ’விகடன் பேப்பரில்’ 97-இலும் வந்தது. இந்தச் சித்திரத் தொடர் இன்னும் நூலாக வெளிவரவில்லை.

முதல் ‘சாம்பு’க் கதையின் படவடிவை இங்கே  பார்க்கலாம்.
[ படம் : நன்றி , புகாரி ]

தொடர்புள்ள பதிவுகள்:

வியாழன், 22 ஜூன், 2017

749. கண்ணதாசன் - 3

பிரிவு 
கண்ணதாசன் 1945-இல் ‘திருமகள்’ இதழில் கண்ணதாசன் எழுதிய கவிதைகள்:

தொடர்புள்ள பதிவுகள்:
கண்ணதாசன்

புதன், 21 ஜூன், 2017

748. ராஜாஜி - 7

ராஜாஜி : சில நினைவுகள் -2 
சுப்புடு

ஜூன் 21, 1948.  ராஜாஜி இந்தியாவின்  கவர்னர்-ஜெனெரலாகப் பதவி ஏற்றுக் கொண்ட நாள்.
ராஜாஜி : சில நினைவுகள் -1
தொடர்புள்ள பதிவுகள்:

ராஜாஜி
சுப்புடு

செவ்வாய், 20 ஜூன், 2017

747. ம.பொ.சி - 6

எழுத்தாளர் தீர்ப்பு!
ம.பொ.சிவஞானம் 


1947  ‘சக்தி’ பொங்கல் மலரில் வந்த ஒரு கட்டுரை:
தொடர்புள்ள பதிவுகள்:

ம.பொ.சி


திங்கள், 19 ஜூன், 2017

746. சின்ன அண்ணாமலை - 4

தமிழ்ப்பண்ணை
சின்ன அண்ணாமலை ஜூன் 18, 1920. சின்ன அண்ணாமலையாரின் பிறந்த தினம்.
ஜூன் 18, 1980.  அவர் காலமான தினம்.

சிறுவயதில், அவருடைய “ தமிழ்ப்பண்ணை”யிலிருந்து நான் வாங்கிய நூல்கள் பல!  இன்றும் பனகல் பார்க் ( சென்னை, தியாகராயநகர் )  பக்கம் போனால் அதன் நினைவும், அவர் நினைவும் எனக்கு வராமல் போவதில்லை. இதோ ‘தமிழ்ப்பண்ணை’யைப் பற்றி அவர் எழுதின ஒரு கட்டுரை:
======

சென்னைக்கு வந்துவிட்டேன். என்ன செய்வது என்று திகைத்திருக்கையில் திரு.ஏ.கே.செட்டியார் அவர்கள் என்னைத் தன் வீட்டில் கூட்டிக் கொண்டு போய் வைத்துக் கொண்டார்.

திரு.ஏ.கே.செட்டியார் அவர்கள் ’உலகம் சுற்றும் தமிழன்' என்று புகழ் பெற்றவர், பிரயாணக்கட்டுரைகளை மிகவும் சுவாரஸ்யமாக எழுதக்கூடியவர். 'குமரி மலர் என்ற அற்புதமான மாத இதழ் நடத்திக் கொண்டிருந்தார்.

அவருடன் கூடவே அவர் செல்லுமிடமெல்லாம் கூட்டிச் சென்று என்னை அறிமுகம் செய்து வைப்பார். அடிக்கடி ’சக்தி’ காரியாலயத்திற்குச் செல்வோம். சக்தி வை.கோவிந்தன் அவர்கள் எனக்கு ஏற்கனவே பழக்கமானவர். தமிழ்ப் புத்தகங்களை அழகிய முறையில் போடுவதற்கு முன்னோடி அவர் தான். ஏராளமான தமிழ்ப் புத்தகங்களை வெளியிட்டவர். திரு.ஏ.கே.செட்டியார். சக்தி வை. கோவிந்தன் இவர்களுடன் எப்பொழுதும் கூட இருக்கும் நண்பர் சத்ருக்கனன் அச்சுத் தொழிலில் பெரிய திறமைசாலி. இந்த மூவரும் இணை பிரியாத நண்பர்கள், இவர்கள் மூவரும் ஏனோ என்னிடம் மிகுந்த பாசம் காட்டினார்கள். தங்களின் செல்லப்பிள்ளை'யாக என்னைக் கட்டிக் காத்தார்கள்.

இவர்கள் அடிக்கடி போகும் இடம் தியாகராய நகரில் உஸ்மான் ரோடில் இருந்த திரு.வெ.சாமிநாத சர்மா அவர்களின் இல்லத்திற்குத்தான் இவர்களுடன் நானும் செல்வேன். ஒரு நாள் நாங்கள் பஸ்ஸில் திரு.சாமிநாதசர்மா அவர்களின் இல்லத்திற்குப் போகும்போது தியாகராய நகர் பனகல்பார்க் நாகேஸ்வரராவ் தெருவில் ஒரு சிறு அழகிய கட்டிடம் பூட்டிக் கிடந்தது. அதைப் பார்த்த மூவரும் என்னைக் கூட்டிக் கொண்டு பஸ்ஸை விட்டு இறங்கினார்கள்.

அந்தக் கட்டிடம் காலியாக இருப்பதை விசாரித்து தெரிந்துகொண்டு, இதில் நம் அண்ணாமலைக்கு தமிழ்ப் பண்ணை புத்தக நிலையம் வைத்துக் கொடுக்கலாம் என்று அவர்களுக்குள் பேசி முடிவு செய்தார்கள். என்னிடம் விஷயத்தைச் சொன்னபோது, நான், "என்னிடம் போதியபணம் இல்லையே, என்ன செய்வது?" என்று கையைப் பிசைந்தேன்.

அவர்கள் மூவரும் சிரித்துவிட்டு 'நாங்கள் உனக்கு வேண்டிய உதவி செய்கிறோம் தைரியமாகத் தொழிலை ஆரம்பி" என்றார்கள்.

இடத்தைப் பிடித்துக் கொடுத்தார்கள். பல புத்தகக் கம்பெனிகளில் புத்தகங்களை ஏராளமாக வாங்கிக் கொடுத்தார்கள். புத்தகம் போட பேப்பர் தந்தார்கள். அடடா அவர்கள் செய்த உதவியை நினைத்தால் இப்பொழுதுகூட என் மெய்சிலிர்க்கிறது.

'தமிழ்ப்பண்ணை’யை ராஜாஜி துவக்கி வைத்தார். நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை விளக்கேற்றி வைத்தார். சக்தி வை. கோவிந்தன் புதுக்கணக்கு எழுதினார்.

எழுத்தாளர்கள் அனைவரும் விழாவிற்கு வந்தனர்.

தமிழ்ப்பண்ணையின் முதல் புத்தகமான ”தமிழன் இதயம்” என்ற நூலைப் பார்த்து அனைவரும் பிரமிப்படைந்தனர். அப்புத்தகத்தை மிகஅழகாகப் போட்டுக் கொடுத்தவர் சக்தி வை. கோவிந்தன் அவர்கள்.

அதன்மேல் அட்டையை கண் கவரும் வண்ணம் அச்சடித்துக் கொடுத்தவர் திரு.சத்ருக்கனன் அவர்கள். தமிழ்ப்பண்ணை எழுத்தாளர்களுக்கும், தேச பக்தர்களுக்கும் நிழல் கொடுத்து வந்தது. தமிழ்ப்பண்ணையின் மூலம் அரிய பெரிய காரியங்களைச் சாதிக்க முடிந்தது.

'நாமக்கல் கவிஞருக்குப் பண முடிப்பு அளிக்க முடிந்தது. அதைப் பார்த்த திரு.சி.என்.அண்ணாதுரை அவர்கள் என்னை நேரில் வந்து பாராட்டி விட்டு, தானும் பாரதிதாசனுக்கு அப்படி ஒரு நிதி அளிக்க வேண்டும். அதற்கும் கூடவே இருந்து உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

பின்னர் பலமுறை திரு.அண்ணாதுரை அவர்கள் சார்பில், திரு.என்.வி. நடராஜன் என்னைப் பலமுறை வந்து சந்தித்து பாரதிதாசன் நிதி அளிப்பு விழாவைச் சிறப்பாக நடத்தினார்கள்.

ராஜாஜியின் நூல்கள், கல்கி கிருஷ்ணமூர்த்தி, வ.ரா., டி.எஸ்.சொக்கலிங்கம், பொ.திருகூடசுந்தரம் பிள்ளை, நாடோடி, தி.ஜ.ர. இப்படி ஏராளமானவர்களின் நூல்களை வெளியிட்டு, பெரிய விழாக்கள் நடத்தி எழுத்தாளர்களுக்குக் கெளரவம் செய்யும் வழக்கத்தை ஏற்படுத்தியது தமிழ்ப் பண்ணையே!


 ஆண்டுதோறும் பாரதிவிழா, பாரதி பாட்டுப்போட்டி, பேச்சுப் போட்டி நடத்தப்பட்டன. திரு.வி.க. மணிவிழாவை மிகச் சிறப்பாக நடத்தியது தமிழ்ப் பண்ணையே! காந்தியடிகளின் 'ஹரிஜன் பத்திரிகையைத் தமிழில் நடத்தியதும் தமிழ்ப் பண்ணையே!

தமிழ்ப்பண்ணைக்கு அடிக்கடி புத்தகம் வாங்க வருவார் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்கள். அவருடன் நெருங்கிய பழக்கம் எனக்கு அப்பொழுதுதான் ஏற்பட்டது.

தமிழ்ப்பண்ணை புத்தகப் பதிப்பகத்திற்கு எல்லாத் தமிழ் எழுத்தாளர்களும் வருவார்கள். தவறாமல் வ.ரா., புதுமைப் பித்தன், தி.ஜ.ர.முதலியவர்கள் வருவார்கள். வ.ரா.சத்தம் போட்டுத்தான் பேசுவார். யாரும் அவருக்கு நிகரில்லை. புதுமைப் பித்தனோ ரொம்பக் கிண்டலாகப் பேசுவார். தி.ஜ.ஏ.எதுவும் பேசமாட்டார். அப்படிப் பேசினாலும் ரொம்ப மெதுவாகப் பேசுவார்.

ஒருநாள் நான் ஏதோ எழுதிக் கொண்டிருக்கும் போது வ.ரா.வந்தார். "என்னடா எழுதுகிறாய்" என்று கேட்டார். 'ஒரு பிரயாணக் கட்டுரை எழுதுகிறேன்' என்றேன். 'கொடு பார்க்கலாம்  " என்றார். கொடுத்தேன். 'டேய்! நீ பெரிய ஆளுடா, என்னமா எழுதியிருக்கிறாய்' என்று சத்தம் போட்டுக் கொண்டிருந்தபோது தி.ஜ.ர.வந்து விட்டார்."பார்த்தியா, இதைப் பார்த்தியா' என்று தி.ஜ.ர.விடம் நான் எழுதியதைக் காட்டி வ.ரா.புகழ ஆரம்பித்தார்.

தி.ஜ.ர. அதைப் படித்துப் பார்த்து, 'நன்றாகத்தான் இருக்கிறது" என்றார். "சும்மா சொல்லி விட்டுப் போகாதே. சக்தி' பத்திரிகையில் இவனிடம் கட்டுரை வாங்கிப் போடு" என்று வ.ரா. சொன்னார். எனக்கு மெய் சிலிர்த்தது. அவர் பெரிய எழுத்தாளர் மட்டுமல்ல, பெரிய மனது உடையவர், நான் எழுதிய அந்தக் கட்டுரையின் ஆரம்பம் இது தான்.

"கட்டுரையாகட்டும் கதையாகட்டும் ! வேகமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்க வேண்டுமென்று அறிஞர்கள் கூறுகிறார்கள். அதனால் இக்கட்டுரையைத் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸில் ஆரம்பிக்கிறேன்"

அவர் சொற்படி பின்னர் சக்தி பத்திரிகையில் எனது கட்டுரையை தி.ஜ.ர.நிறைய வெளியிட்டார். அதன் பின்னர்கல்கி பத்திரிகையில் எனது கதைகளும் கட்டுரைகளும் வெளி வந்தன. எனது முதல் புத்தகத்தின் பெயர் "சீனத்துச் சிங்காரி'

சொன்னால் நம்பமாட்டீர்கள்!  அந்தப் புத்தகத்திற்கு முன்னுரை எழுதியவர் பேராசிரியர் சீநிவாசராகவன் அவர்கள்.  அவர் என்னை ஒரு "சிறுகதை மன்னன்” என்று நிரூபிப்பதற்கு பெரிய ஆராய்ச்சி செய்து ஒரு அருமையான கட்டுரையை முன்னுரையாக அதில் எழுதியிருக்கிறார்


தொடர்புள்ள பதிவுகள்:

சின்ன அண்ணாமலை 

புதன், 14 ஜூன், 2017

745. வ.ரா. - 3

மாட்டுத்தரகு மாணிக்கம்
வ.ரா.


1943-இல் சுதேசமித்திரனில் வந்த ‘நடைச்சித்திரம்’ இது.
தொடர்புள்ள பதிவுகள்:

வ.ரா.

திங்கள், 12 ஜூன், 2017

744. சங்கீத சங்கதிகள் - 124

”பாலக்காடு மணி - ராஜமாணிக்கம் “ சந்தித்தால்? 


ஜூன் 12. பாலக்காடு  மணி ஐயரின் பிறந்த தினம்.

1956-இல் “ஆனந்தவிகடனில்” வந்த ஒரு கட்டுரை.


[ நன்றி : விகடன் ] 

 தொடர்புள்ள பதிவுகள்:
சங்கீத சங்கதிகள்
ஜி.என்.பி , மதுரை மணி சந்தித்தால் ?
"அரியக்குடி - மகராஜபுரம்" சந்தித்தால் ?

ஞாயிறு, 11 ஜூன், 2017

743. பாடலும், படமும் - 18

ஐம்பூதத் தலங்கள்  -2
திருவானைக்கா
எஸ்.ராஜம் , சில்பி”இங்கு இருக்கும் ஜம்பு லிங்கம் அன்னையால் செய்யப்பட்டது. ஒரு முறை பூமிக்கு வந்த அம்பிகை சிவனை வழிபட சித்தம் கொண்டார். அழகிய காவேரியில் சிறிது நீர் எடுத்து லிங்கம் வடித்தார். அம்பிகை கையில் நீர் லிங்கமாக மாறியது. அம்பிகை அந்த லிங்கத்தை வழிப்பட்டு ஆனந்தம் அடைந்தார். நீரால் செய்யப்பட்டதால் லிங்கம் ஜம்புகேஸ்வரர் என வழங்கப்படுகிறது. “    https://ta.wikipedia.org/s/32w3

கி.வா.ஜகந்நாதன் எழுதுகிறார்.

” திருவானைக்காவல் என்ற தலத்தைப் பற்றிக் கேட்டிருப்பீர்கள். அங்கே யானை பூசை பண்ணியதாம். சிலந்தி பூசை பண்ணியதாம். ஒரு நாவல் மரத்தின் அடியில் சிவ பெருமான் லிங்க உருவத்துடன் தோன்றினான். ஒரு சிலந்திக்கு அந்தப் பெருமானிடத்தில் பக்தி உண்டாயிற்று. 'பெருமான் வெயிலில் காய்கிறானே' என்று மனம் வருந்திய சிலந்தி லிங்கத்தின்மேல் பந்தல் போட்டது போல வலை பின்னியது. ஆண்டவனுக்கு இந்த வழியிலாவது தொண்டு செய்யலாம் என்ற அறிவு அதற்கு இருந்தது. தன்னுடைய இயல்புக்கு ஏற்றபடி விதானம் போலக் கூடு கட்டித் தொண்டு செய்தது.

அந்தப் பெருமானிடத்தில் ஒரு யானைக்கும் பற்று உண்டாயிற்று. அது தன்னுடைய இயல்புக்கு ஏற்பப் பூசை செய்யத் தொடங்கியது. காவிரி ஆற்றுக்குச் சென்று தன் துதிக்கையில் தண்ணீர் எடுத்து வந்து சிவலிங்கப் பெருமானுக்கு அபிஷேகம் செய்தது. லிங்கத்தின் மேலே சிலந்திக் கூடு இருப்பதைப் பார்த்து அதைக் குலைத்து விட்டது. யானை போன பிறகு சிலந்தி வந்தது. தான் கட்டிய கூடு குலைந்துவிட்டதே என்ற கோபம் அதற்கு வரவில்லை. எம்பெருமான் வெயிலில் காய்கிறானே என்று மனம் இரங்கி வருந்தியது. மறுபடியும் ஒரு நாழிகையில் வலை பின்னிக் கூடு கட்டிவிட்டது. மறுநாள் அந்த யானை கூட்டைப் பார்த்து மறுபடியும் கலைத்துவிட்டது. யானை கலைப் பதும், சிலந்தி மீட்டும் கூடு கட்டுவதுமாக நடந்து வந்தது. ஒருநாள் சிலந்தி, "இதை யார் செய்கிறார்கள் என்று பார்க்க வேண்டும்' என்று நினைத்தது. வலை கட்டின பிறகு அங்கே தங்கிக் கவனித்தது. அப்போது துதிக்கை நிறையத் தண்ணிரை முகந்து வந்து யானை அபிஷேகம் செய்தது. சிலந்திக் கூட்டை யும் துதிக்கையினாலே குலைத்தது. அந்தச் சமயம் பார்த்துச் சிலந்தி யானையின் துதிக்கையினுள் புகுந்து குடைய ஆரம்பித் தது. யானையோ வலி தாங்க முடியாமல் துதிக்கையை நீட்டித் தரையில் அறைந்தது. அதனால் சிலந்தியும் இறந்து போயிற்று; யானையும் இறந்துவிட்டது. அந்த யானை சிவ கணங்களில் ஒரு வராக ஆகிவிட்டது. சிலந்தி என்ன பதவி பெற்றது தெரியுமா? பெரிய அரசனாகப் பிறந்தது. கோச்செங்கட் சோழன் சோழச் சக்கரவர்த்திகளுக்குள் கோச்செங்கட்சோழன் என்று ஒர் அரசன் இருந்தான். அவனை, திருவானைக்காவில் ஆண்ட வனை வழிபட்ட சிலந்தியின் மறுபிறவி என்று சொல்வார்கள்

சிலந்தியும் ஆனைக் காவில் திருநிழற் பந்தர் செய்து
உலந்தவ ணிறந்த போதே கோச்செங்க ணானும் ஆகக்
கலந்தநீர்க் காவிரீ சூழ் சோணாட்டுச் சோழர் தங்கள்
குலந்தனிற் பிறப்பித் திட்டார் குறுக்கைவீ ரட்ட னாரே

                              - திருநாவுக்கரசர் தேவாரம்-4-49-4-
என்று அப்பர் சுவாமிகள் இந்த வரலாற்றைக் குறிக்கிறார்.”  

[ பாடலின் பொழிப்புரை: 

திருவானைக்காவிற் பெருமானுக்கு அழகிய நிழலைத்தரும் பந்தலை அமைத்த சிலந்தி இறந்தபின் மறுபிறப்பில், சுவாமியுடன் கலந்து பயின்ற நீரைஉடைய காவிரியாற் சூழப்பட்ட சோழ நாட்டு மன்னர் மரபிலே கோச்செங்கண்ணான் என்ற பெயருடைய அரசனாகுமாறு பிறப்பித்து விட்டார் குறுக்கை வீரட்டனார். ]

‘சில்பி’யின் இரு படங்கள்:தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

வெள்ளி, 9 ஜூன், 2017

742. அ.சீநிவாசராகவன் - 4

எதிரொலி 
‘நாணல்’
தொடர்புள்ள பதிவுகள்:

அ.சீநிவாசராகவன்

புதன், 7 ஜூன், 2017

741. காந்தி - 8

1. லண்டன் மார்க்கம்
’கல்கி’


 ‘கல்கி’ ‘மாந்தருக்குள் ஒரு தெய்வம்’ என்ற தொடரில் எழுதிய முதல் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் .  [ இந்தத் தொடர் முடிவு பெறவில்லை. 41 அத்தியாயங்களே வந்தன ]
===தாய் நாட்டுக்குப் போகிற வழியில் லண்டனில் ஸ்ரீகோகலேயைச் சந்தித்துப் பேசுவதற்காக மகாத்மா காந்தி இங்கிலாந்துக்குப் பயணமானார். அவருடன் ஸ்ரீமதி கஸ்தூரிபாயும் மிஸ்டர் காலன்பாக் என்னும் ஜெர்மன் நண்பரும் பிரயாணப் பட்டார்கள்.

1914-ஆம் வருஷம் ஜூலை மாதத்தில் மகாத்மா கப்பல் ஏறி ஆகஸ்டு மாதம் 5 - ஆம் தேதி லண்டனை அடைந்தார். அதற்கு முதல்நாள் ஆகஸ்டு மாதம் 4 - ஆம் தேதி முதலாவது உலக மகா யுத்தம் ஆரம்பமாகி விட்டது.

லண்டன் நகரை அடைந்ததும் மகாத்மா ஸ்ரீகோகலேயைப் பற்றி விசாரித்தார். கோகலே பாரிஸுக்குப் போயிருக்கிறார் என்றும் யுத்தம் தொடங்கி விட்டபடியால் திரும்பி வருவதற்குத் தாமதப்படலாம் என்றும் தெரிந்தது. இந்தியாவில் தாம் செய்யவேண்டிய தேசத் தொண்டைக் குறித்து ஸ்ரீ கோகலேயிடம் மகாத்மா பேச விரும்பினார். கோகலேவைப் பாராமல் இந்தியாவுக்குப் போக விரும்பவில்லை. ஆகையால் அவர் திரும்பி வரும் வரையில் லண்டனிலேயே தங்கி யிருக்கத் தீர்மானித்தார்.

லண்டனிலிருந்தபோது யுத்தம் சம்மந்தமாகத் தம்முடைய கடமை என்னவென்ற யோசனை ஏற்பட்டது. தென்னாப்ரிக்காவில் போயர் யுத்தத்தின் போது செய்தது போல இந்த யுத்தத்திலும் பிரிட்டனுக்கு உதவி செய்வது இந்தியர்களுடைய கடமை என்று மகாத்மா தீர்மானித்தார். எனவே அச்சமயம் இங்கிலாந்தில் படிப்பதற்காக வந்திருந்த இந்திய மாணவர்களையும் மற்ற இந்தியர்களையும் திரட்டி அவர்களிடம் தமது அபிப்பிராயத்தைத் தெரிவித்தார். "ஆங்கில மாணாக்கர்கள் யுத்த சேவையில் எவ்வளவு ஆர்வத்துடன் ஈடுபடுகிறார்கள், பார்த்தீர்களா? அதுபோல இந்திய மாணாக்கர்களும் யுத்த சேவை செய்வதற்கு முன் வர வேண்டும்" என்று சொன்னார்.

இந்தியர்களில் சிலர் அதை ஆட்சேபித்தார்கள் "ஆங்கிலேயர் சுதந்திர புருஷர்கள்; ஆளும் சாதியினர்; ஆகையால் சாம்ராஜ்யத்தைக் காப்பாற்றுவதற்காக அவர்கள் யுத்தம் செய்தாக வேண்டும். சுதந்திரம் இல்லாத அடிமை இந்தியர்கள் எதற்காக யுத்த சேவையில் ஈடுபட வேண்டும்? ஆங்கிலேயரக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை நமக்குச் சாதகமாக உபயோகித்துக் கொள்வதல்லவா நம்முடைய கடமை" என்றார்கள். இந்த வாதத்தை மகாத்மா ஒப்புக்கொள்ளவில்லை.

"இங்கிலாந்துக்கு ஏற்பட்டுள்ள கஷ்டத்தை நம்முடைய சந்தர்ப்பமாக உபயோகித்துக் கொள்வது நியாயம் அல்ல. யுத்தம் நடக்கும் வரையில் நம்முடைய கோரிக்கைகளை வற்புறுத்தக் கூடாது. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பாதுகாப்பை நாம் பெற்று வருகிறோம். ஆகையால் யுத்தத்தில் பிரிட்டனுக்கு உதவி செய்ய வேண்டும்" என்று வற்புறுத்தினார்.

மகாத்மாவின் யோசனையை இந்தியர்கள் பலர் ஒப்புக் கொண்டார்கள். யுத்த சேவைக்காக வாலண்டியர் படையில் சேர்வதாகத் தங்கள் பெயர்களையும் கொடுத்தார்கள். இவர்களில் இந்தியாவின் எல்லா மாகாணத்தினரும் எல்லா மதத்தினரும் இருந்தார்கள்.

இதனால் திருப்தி யடைந்த மகாத்மா அச்சமயம் இந்தியா மந்திரி பதவி வகித்த லார்ட் குரூவுக்குக் கடிதம் எழுதினார்.தாமும் தம்மைச் சேரந்த இந்தியர்களும் சைன்ய சேவையில் ஈடுபட விரும்புவதாகவும் அதற்கு வேண்டிய பயிற்சி பெறத் தயாரா யிருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் தெரிவித்தார். லார்ட் குரூ முதலில் சிறிது தயங்கி விட்டுப் பிறகு மகாத்மா எழுதிய வண்ணம் இந்தியர்களின் சைன்ய சேவையை ஒப்புக் கொள்வதாகப் பதில் எழுதினார்.

முதலில் டாக்டர் காண்ட்லி என்பவரின் கீழ் பிரதம சிகிச்சை முறையில் பயிற்சி அளிக்கப்பட்டது. எண்பது இந்தியர்கள் பயிற்சி பெற்றார்கள். ஆறுவாரத்துக்கெல்லாம் நடந்த பரீட்சையில் ஒருவரைத் தவிர மற்றவர்கள் எல்லாரும் தேறினார்கள்.

இந்த நாட்களில் காந்திஜிக்குப் பழக்கமான பல இந்தியர்களில் ஒருவர் டாக்டர் ஜீவராஜ் மேத்தா. அப்போது இவர்இங்கிலாந்தில் வைத்தியப் பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருந்தார். மகாத்மாவின் தலைமையில் சைன்ய சேவைப் படையில் சேர்ந்தார். பிற்காலத்தில் டாக்டர் ஜீவராஜ் மேத்தா காந்தி மகாத்மாவுக்கு உடல்நோய் ஏற்பட்ட காலங்களிலும் காந்திஜி உண்ணாவிரதம் இருந்த காலங்களிலும் அவருடைய நம்பிக்கைக்கு உரிய வைத்தியராய் விளங்கினார். தற்சமயம் டாக்டர் ஜீவராஜ் மேத்தா பரோடா சமஸ்தான பிரதம மந்திரி பதவி வகித்துப் பரோடாவைப் பம்பாய் மாகாணத்தில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.

அக்காலத்திலேதான் மகாத்மா காந்தி முதன் முதலாக ஸ்ரீமதி சரோஜனி தேவியையும் சந்தித்தார். போர் வீரர்களுக்கு உடுப்புக்களும் காயம் பட்டவர்களுக்குக் கட்டுகள் போடும் துணிகளும் தயாரிக்கும் வேலையில் ஈடுபட்ட பெண்மணிகளின் சங்கம் ஒன்று லண்டனில் இருந்தது. அந்தச் சங்கத்தில் ஸ்ரீமதி சரோஜினி தேவி அங்கத்தினர். ஒருசமயம் போர் வீரர்களின் உடுப்புக்காக வெட்டப் பட்டிருந்த ஒரு குவியல் துணிகளை மகாத்மா காந்தியிடம் ஸ்ரீமதி சரோஜினி தேவி கொடுத்து அவற்றை உடைகளாகத் தைத்துக்கொண்டு வரும்படி சொன்னாராம். மகாத்மா அவ்விதமே தைத்துக்கொடுத்தாராம்.

பிற்காலத்தில் இந்தியாவில் மகாத்மா ஆரம்பித்து நடத்திய இயக்கங்களில் ஸ்ரீமதி சரோஜினி தேவி எவ்வளவு ஆர்வத்துடன் ஈடுபட்டிருந்தார் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.மகாத்மாவிடம் ஸ்ரீமதி சரோஜினி தேவி கொண்டிருந்த பக்தி அளவற்றது. பாதகன் கோட்ஸேயினால் மகாத்மா சுடப்பட்டு இறந்த சம்பவம் ஸ்ரீமதி சரோஜினியின் இருதயத்தைப் பெரிதும் பாதித்துப் பலவீனப் படுத்திவிட்டது. காந்திமகான் காலமாகி ஒரு வருஷத்துக்கெல்லாம் ஸ்ரீமதி சரோஜினி தேவியும் அவரைத்தொடரந்து விண்ணுலகம் சென்றார் அன்றோ?

பிரதம சிகிச்சையில் பயிற்சி பெற்றுப் பரீட்சையிலும் தேறியவர்களுக்கு இராணுவ டிரில் பயிற்சி அளிக்குமாறு கர்னல் பேக்கர் என்பவர் நியமிக்கப் பட்டார். இவர் தேவைக்கு அதிகமாகவே இந்தியர்கள் மீது அதிகாரம் செலுத்தத் தொடங்கினார்.தென்னாப்பிரிக்காவிலிருந்து இங்கிலாந்துக்கு வந்து பாரிஸ்டர் பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருந்த ஸ்ரீ ஸோராப்ஜி அதாஜானியா என்பவர் இது விஷயமாக மகாத்தமாவுக்கு ஆரம்பத்திலேயே எச்சரிக்கை செய்தார். "இந்த அதிகாரி நம்மீது தர்பார் நடத்தப் பார்க்கிறார். அர்த்தமற்ற உத்தரவுகளைப் போடுகிறார். இவர் செலுத்தும் தர்பார் ஒருபுறமிருக்க, இவர் தமக்கு உதவியாக நியமித்துக்கொண்டிருக்கும் ஆங்கில இளைஞர்களும் தங்களை எஜமானர்கள் என்று எண்ணிக்கொண்டு நம்மைக் கேவலமாக நடத்துகிறார்கள். இந்த அதிகார தட புடலை எங்களால் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது!" என்று சொன்னார். ஆயினும் அவரைப் பொறுமையாக இருக்கும்படியும் கர்னல் பேக்கரிடம் நம்பிக்கை வைக்கும்படியும் காந்தி மகாத்மா கேட்டுக் கொண்டார்.

"இப்படித்தான் நீங்கள் நம்பிக்கை வைத்து வைத்து ஏமாந்துபோகிறீர்கள். இதனால் உங்களுக்கும் எங்களுக்கும் கஷ்டத்தைத் தேடித்தருகிறீர்கள்!" என்றார் அதாஜானியா. அவர் சொன்னது உண்மை என்று சீக்கிரத்தில் ஏற்பட்டு விட்டது. கர்னல் பேக்கரின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகமாகி வந்தது. அவர் 'கார்ப்போரல்'களாக நியமித்திருந்த ஆக்ஸ்போர்டு மாணாக்கர்களும் போட்டி போட்டுக்கொண்டு அதிகாரம் செலுத்தினார்கள். இந்தியர்களுடைய சுய மரியாதைக்குப் பங்கம் நேரும் நிலைமை ஏற்பட்டு விட்டது.

இதன் பேரில் மகாத்மா மேற்படி தலைமை அதிகாரியிடம் போய் இந்தியர்களுடைய கருத்தைத் தெரிநவித்தார்.
"என்னிடம் நேரே நீங்கள் வந்து புகார் சோல்லக்கூடாது. நான் நியமித்திருக்கும் 'கார்ப்போரல்'களிடம் முதலில் புகார் சொல்லவேண்டும். அதுவும் அவரவர்களே புகார் சொல்ல வேண்டுமே தவிர, நீங்கள் மற்றவர்களுக்காகப் பேசக்கூடாது" என்றார் கர்னல் பேக்கர்.

மகாத்மா திடுக்கிட்டார். எனினும் நிதானமாகத் தமது கட்சியை எடுத்துரைத்தார். "இந்தியர்களைச் சைன்ய சேவைக் காகத் திரட்டியவன் நான்தான். ஆகையால் அவர்களுக்காக நான் பேசுவதற்கு அநுமதி கொடுக்கவேண்டும். எங்களுடைய சம்மதம் கேட்காமல் 'கார்ப்போரல்'களை நீங்கள் நியமித்திருக்கிறீர்கள். இது சரியல்ல. அவர்களை அனுப்பிவிட்டு எங்களுக்குள்ளேயே சில படைத் தலைவர்களை நியமிப்பது தான் முறை" என்று கூறினார்.

கர்னல் பேக்கருக்கு மகாத்மாவின் யோசனை பிடிக்கவில்லை. அவருக்குக் கோபம் வந்து விட்டது. "நான் நியமித்த 'கார்ப்போரல்'களை விலக்க வேண்டும் என்றா சொல்கிறீர்?" அது இராணுவக் கட்டுப்பாட்டுக்கு விரோதம்!" என்று கடுமையாகப் பேசினார்.

காந்திஜி தமது தென்னாப்பிரிக்கா அநுபவத்தைச் சுட்டிக் காட்டினார். அங்கே இந்தியப்படைக்குத் தாமே தலைவராயிருந்ததை எடுத்துச் சொன்னார். அது ஒன்றும் கர்னல் பேக்கரின் காதில் ஏறவில்லை.

இதன்பேரில் இந்தியர்கள் கூட்டம் போட்டுச் சைன்ய சேவையிலிருந்து விலகிக்கொன்வது என்று தீர்மானித்தார்கள். இது இராணுவக் கட்டுப்பாட்டுக்கு விரோதமான காரியமாதலால்அதன் பலாபலன்களை மகாத்மா நன்கு எடுத்துச் சொன்னார். இந்த விஷயமாகச் சத்தியாக்கிரஹம் செய்யவேண்டியிருக்கும் என்றும் இராணுவத் தண்டனைக்கு உள்ளாக வேண்டியிருக்கும் என்றும் கூறினார். அதற்கெல்லாம் தாங்கள் தயார் என்று இந்தியர்கள் சொன்னார்கள்.

பின்னர் காந்திஜி தமது வழக்கமான முறையை அநுசரித்து இந்தியா மந்திரி லார்ட் குரூவுக்குக் கடிதம் எழுதினார். அதற்கு லார்ட் குரூ எழுதிய பதில் வழவழ முறையில் அமைந்திருந்தது.

"தென்னாப்பிரிக்கா நிலைமைக்கும் இவ்விடத்து நிலைமைக்கும் வித்தியாசம் உண்டு. படைப் பிரிவுத் தலைவர்களை மேலதிகாரிதான் நியமிக்க வேண்டும். ஆயினும் இனிமேல் படைத் தலைவர்களை நியமிக்கும்போது உங்களைக் கலந்து கொண்டு நியமிக்கும்படி செய்கிறேன் " என்று இந்தியா மந்திரி தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில் மகாத்மா காந்தி பாரிச வாயுவினால் பீடிக்கப்பட்டுப் படுத்த படுக்கையானார். அவர் படுத்திருந்த சமயத்தில் இந்திய சைன்ய சேவைப் படையில் பிளவு ஏற்பட்டு விட்டது. ஒரு பகுதியினர் அதிகாரிகளுடன் சண்டை போடுவதில் பயனில்லை என்று தீர்மானித்துச் சைன்ய சேவை செய்ய இணங்கினார்கள். அச்சமயத்திலா நெட்லி என்னும் இடத்திற்குக் காயமடைந்த போர்வீரர்கள் ஏராளமாக வந்திருந்தார்கள். அவர்களுக்குச் சேவை புரிய ஆள் தேவையாயிருந்தது. சேவை செய்ய இணங்கிய இந்தியர்கள் அந்த இடத்துக்கு அனுப்பப் பட்டார்கள்.

நோயாளியாகப் படுத்திருந்த காந்திஜியைப் பார்ப்பதற்கு உதவி இந்தியா மந்திரி ராபர்ட்ஸ் பலமுறை வந்தார். சேவைக்குப் போகாமல் பின்தங்கிய இந்தியர்களையும் சேவை செய்யப் போகச் சொல்லும்படி காந்திஜியைக் கேட்டுக் கொண்டார். அவர்களுடைய சுயமரியாதைக்குப் பங்கம் எதுவும் நேராது என்று உறுதி கூறினார். அதன் பேரில் காந்திஜி பின் தங்கியவர்களையும் சேவைக்குப் போகும்படி சொன்னார். அவர்களையும் நெட்டிலிக்குப் போனார்கள். ஆனால் மகாத்மா மட்டும் உடல் நோய் காரணமாகப் போக முடியவில்லை.தொடர்புள்ள பதிவுகள்:

மகாத்மா காந்தி
'கல்கி’ கட்டுரைகள்
[  நன்றி: : http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0385_01.html  ]

செவ்வாய், 6 ஜூன், 2017

740. சா.கணேசன் - 1

கன்னித்தமிழ் வளர்த்த கம்பன் அடிப்பொடி - சா.கணேசன்
சி.சேதுபதி


ஜூன் 6.  சா.கணேசன் அவர்களின் பிறந்த நாள்.
===
இராமாயணத்தில் சீதைக்கு அக்னிப்பிரவேசம் நிகழ்ந்ததுபோல், அக்காலத்தில் கம்பனுக்கும் தமிழகத்தில் சிதை மூட்டப்பட்டது.

இன்னொரு கோணத்தில் கம்பனைக் காட்டி எல்லாரது கவனத்தையும் அவன்பால் இழுத்து, "தீ பரவட்டும்" என்று எழுந்த குரலுக்கு மாற்றாகவோ, மறுப்பாகவோ அன்றிக் கம்பனின் மெய்த் தன்மையை (சுயத்தை)யும், அவனது பேருரு (விஸ்வரூபத்தை)வையும் உலகிற்கு எடுத்துரைக்கத் தமிழுலகம் கண்டு தந்த அரிய மாணிக்கம்தான் கம்பன் அடிப்பொடி என்னும் சா.கணேசன்.

அவர் கம்பநேயர் மட்டுமல்லர்; காந்திய நெறி நின்று தேசத்துக்கு உழைத்த உத்தமரும் ஆவார்.

"கம்பன் கழகம்" என்னும் பேரியக்கம் தோற்றுவித்த பிதாமகன்.

எதிர்நிலையில் நின்று கம்பனை விமர்சித்தவர்களும், கம்பனை உள்ளபடி உணர்ந்து உலகறிய உரைக்கத் தம் மேடையினைத் தந்து தாங்கி நின்றவர் அவர். அந்தவகையில் தமிழ்கூறுநல்லுலகில் முழங்கிய, முழங்குகின்ற பேச்சாளர்கள் மிகப்பலரும், கம்பனடிப்பொடியால் உலகிற்குக் கண்டுதரப் பெற்றவர்கள்.

தோழர் ஜீவா, தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான், நீதியரசர்கள் மகராசன், மு.மு. இஸ்மாயீல் மற்றும் பேராசிரியர்கள் ஏ.சி. பால்நாடார், எஸ். இராமகிருஷ்ணன், அ.ச. ஞானசம்பந்தன், எழுத்தாளர்களான கி.வா.ஜ., அ. சீநிவாசராகவன், கம்பராசன், கண்ணதாசன் ஆகியோர் அவர்களுள் சிலர்.

கம்பன் பிறந்தநாள் இன்னதென அறியாத நிலையில், அவன் தமது காவியத்தை அரங்கேற்றம் செய்த, கி.பி. 886 பிப்ரவரி 23 அன்றைய தினத்தையே கம்பன் பிறந்த தினமாகக்கொண்டு, தாம் பிறந்த காரைக்குடி நகரில், கம்பன் கழகத்தை இனிது தொடங்கினார், கம்பன் அடிப்பொடி.

1939 ஏப்ரல் 2, 3 (வெகுதானிய வருடம் பங்குனி 20, 21) ஆகிய நாள்களில் டி.கே.சி.யின் தலைமையில் கம்பன் திருநாள் மிக எழுச்சியோடு கொண்டாடப்பட்டது. கம்பன் பள்ளிப்படைக்கோயில் (சமாதி) உள்ள நாட்டரசன்கோட்டையில் நிறைவுறும் அவ்விழா. இவ்வாறு அன்று தொடங்கிய அப்பெருவிழா, இன்று தமிழகம் மற்றும் உலக நாடுகளில் கம்பன் கழகங்கள் தோன்றக் காரணமானது.

மணிமேகலை காலத்தில் நிகழ்ந்த பட்டிமண்டபத்தைப் பாங்கறிந்து புதுப்பித்து, உலகெங்கும் கடைப்பிடிக்கக் காரணமானதும், இக்கம்பன் கழகமே. 71ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இத்தாய்க்கழகம், இன்றைக்கும் புதிதாய்ப் பிறக்கும் எந்தவொரு கழகத்திற்கும் தம் சீராட்டைத் தந்து புரக்கும் தாயன்புமிக்கதாகத் திகழ்கின்றது.

கம்பன் அருட்கோவில் உள்ள நாட்டரசன்கோட்டையை உலகறியச் செய்து ஆண்டுதோறும் ஆங்கு அறிஞர்களை ஒருங்குதிரட்டிக் கம்பனைப் போற்றி மகிழ்கின்றது.

6-6-1908 அன்று காரைக்குடி சாமிநாதன், நாச்சம்மை தம்பதியர்க்கு மகவாகத் தோன்றிய கணேசன், காரைக்குடி ரெங்க வாத்தியார் பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றவர். தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்களைப் பண்டித வித்துவான் சிதம்பர ஐயரிடமும், பர்மா தோங்குவா பண்டித சேதுப்பிள்ளையிடமும் பயின்றவர். காந்தியடிகளின் காரைக்குடி வருகையின்போது, அவருக்குப் பணிவிடை செய்யும் தொண்டர் படைத்தலைமையேற்று 1927இல் காங்கிரஸ் தொண்டரானவர்.

1936 முதல் தீவிர தேசியப் போராட்டத்தில் பங்கேற்று வந்த கணேசன், 1941இல் காந்தியடிகள் தொடங்கிய தனிநபர் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுப் பாதயாத்திரையாக தில்லிக்குப் பயணமாகி 66 நாள்களில் 586 மைல்களைக் கடந்ததும் உத்தரப்பிரதேச அலிபுரத்தில் சிறைவாசம் அனுபவித்தவர்.

காந்தியடிகளைப் போன்று, நான்குமுழக் கதர் வேட்டியையும், மேலுடையாய் ஒரு துண்டையுமே அணிந்துவந்தவர் கணேசன். 1942இல் "வெள்ளையனே வெளியேறு" போராட்டத்தின்போது, இவரை எங்கு கண்டாலும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இவர்தம் சொத்துகள் அனைத்தையும் ஜப்தி செய்ய ஆங்கில அரசு உத்தரவிட்டது.

அப்புறமும், வேகந்தணியாத ஆங்கில அரசு, 1942 ஆகஸ்ட் போராட்டத்தின்போது, அவரது வீட்டைச் சூறையாடியது. கணேசன், ஊர் ஊராக மாறுவேடங்களில் சென்று மக்களை விடுதலை வேள்வியில் ஊக்கப்படுத்தியதுகண்டு பொறாத ஆங்கில அரசு, அவர்தம் நண்பர்களுக்கு எண்ணிலா இன்னல்கள் கொடுத்தது. அதனால் வேதனையுற்ற கணேசன், தமது வழிகாட்டியான இராஜாஜியின் ஆலோசனைப்படி, சென்னை போலீஸ் ஆணையரிடம் சரணடைந்தார். 18 மாத காலம் மீண்டும் அலிபூர் சிறைவாசம் ஏற்றார்.

அலிபூர் சிறைவாசத்தின்போது, உடனிருந்த மற்றவர்களுக்குக் கம்பராமாயணம் உள்ளிட்ட இலக்கியப் பாடங்களை நடத்தி, சிறைக்கோட்டத்தை இலக்கியக் கோட்டமாக மாற்றினார். அதுசமயம் அவர்தம் உரையினை செவி மடுத்த பெருமைக்குரியவர், கல்கி இதழின் அதிபரும், எம்.எஸ். சுப்புலட்சுமியின் கணவருமான சதாசிவம் ஆவார். அவர் பின்னாளில் இந்நிகழ்வை நினைவுகூர்ந்தார்.

நாடு விடுதலை பெற்ற பிறகு, தியாகிகளுக்காக வழங்கப் பெறும் நிலம், ஓய்வூதியம் எதனையும் பெற மறுத்தார் கணேசன். அவ்வாறு பெற்றால் அது தொண்டிற்குப் பெறும் கூலியாகிவிடும் என்பது அவரது கருத்து.

1968இல் தமது மணிவிழாவைக் கொண்டாட விரும்பாத அவர், அவ்விழாவிற்கெனத் தம் அன்பர்கள் அளித்த ஒரு இலட்ச ரூபாய் நிதியைக் கொண்டு, காரைக்குடியில் கம்பன் மணிமண்டபத்தைக் கட்டத்தொடங்கி, 1972 முதல் அங்கேயே கம்பன் விழா நடத்தப்பட்டு வருகிறது.

உலகிலேயே, வேறு எம்மொழிக்கும் இல்லாத வகையில், தமிழ்மொழிக்காக, தமிழ்த்தாய் உருச்சமைத்து, அழகிய கோயில் ஒன்றை எழுப்பியவர் கம்பனடிப்பொடியாவார். 1975இல் அதற்குக் கால்கோள் செய்தவர் தமிழக முதல்வர் கருணாநிதி.

கம்பனைக் கற்றதன் காரணமாகத் தம்மையும் அவ்வழியில் கல்வியில், கலைகளில் பெரியவராக வளர்த்துக் கொண்டவர் கணேசன். தமிழோடு, வடமொழி, ஆங்கில மொழிகளில் புலமைகொண்ட இவர், சிறந்த சிற்பக் கலை வல்லுநர்; கல்வெட்டாய்வாளர்; மரபார்ந்த தமிழகத் தொன்மங்கள் அறிந்த நிறைகுடம்; சிறந்த எழுத்தாளர். அக்காலத்தில் கலைமகள் இதழில், "கல்சொல்லும் கதை" எனும் தலைப்பில் இவர் எழுதிய கல்வெட்டு, வரலாற்று ஆய்வியல் கதைகள் சித்திரநேர்த்தி கொண்டவை.

கம்பன் குறித்த கட்டுரைகள் இவர்தம் நுண்மாண் நுழைபுலம் உணர்த்தும் பெருமைக்குரியவை.

பிள்ளையார்பட்டித் தலவரலாறு, இராஜராஜன், தமிழ்த்திருமணம்
ஆகிய நூல்களோடு,"Some Iconographic concepts" என்ற ஆங்கில நூல் ஆகியன இவர்தம் நூல்களாகும்.

1968இல் சென்னையில் நடந்த இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டின் கலைக்காட்சிக் குழுவிற்கு அண்ணாவின் வேண்டுதலால் தலைமையேற்ற கணேசன், கண்டோர் வியக்கும் வண்ணம் அழகுறு கலைக்காட்சியை நிகழ்த்தி, அதற்கெனக் கையேடு என்ற கருவூலத்தையும் பதிப்பித்து வெளியிட்டிருக்கின்றார்.

இன்றைக்கு அனைவரும் கண்டு கற்கும் வண்ணம் செம்மையான கம்பராமாயண நூல் உருவாக்கத்திற்கு அவர் ஆற்றிய பணி மகத்தானது.

தமிழறிஞர்களை துணைகொண்டு, கம்பனின் மூலபாடத்தைத் தெரிவு செய்ய எண்ணற்ற ஏட்டுச் சுவடிகள், பழைய பதிப்புகள் அனைத்தையும் ஆய்ந்து தெளிந்து தேர்ந்து, அனைவர்க்கும் புரியும் வண்ணம் சந்தி பிரித்து ஆறு காண்டங்களையும் 9 சிறுதொகுதிகளாய், ஓவியர் கோபுலுவின் கைவண்ணங்களைச் சேர்த்து மர்ரே நிறுவனத்தாரைக் கொண்டு பதிப்பித்தவர்.

மூதறிஞர் இராஜாஜியின் மீது பெரும் மதிப்புக் கொண்ட சா.கணேசன், சுதந்திராக் கட்சி ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவர். அந்தக் கட்சியின் சார்பில் சா.கணேசன், 1962 முதல் 1967 வரை சட்டமன்ற உறுப்பினராகவும், 1968 முதல் 1974 வரை தமிழக மேலவை உறுப்பினராகவும் பணியாற்றியவர்.

எல்லா நிலைகளிலும் - "உண்ணும் சோறும், பருகும் நீரும், தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணனே" என்று கண்டு போற்றிய ஆழ்வார் மரபில் அனைத்து நிலைகளிலும் கம்பனையே போற்றி, கம்பனடிக்கே தம்மைத் தந்து கம்பனடிப்பொடியாக நிலைபெற்றிலங்கினார்.

கணேசனின் நூற்றாண்டினை, அவர் உருவாக்கி உயர்த்திய கம்பன் கழகம் காரைக்குடியில் 2009ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி (இன்று) ஞாயிறன்று நிகழ்த்துகின்றது.

அவர்தம் அருமை மாணாக்கர் பத்மபூஷண் கணபதி ஸ்தபதி நிறுவிய,
கம்பனடிப்பொடி சிலைத்திறப்பு, அஞ்சல் தலை வெளியிடல், நிரந்தர நிழற்படக் கண்காட்சி கலைக்களஞ்சியம் வெளியிடல் உள்ளிட்ட நிகழ்வுகளைத் தக்க சான்றோர்களைக் கொண்டு நிகழ்த்துகின்றது.

இராமனைப் பாடிய தியாகய்யர் மரபில், கம்பன் பாடல்கள் ஐந்தினைத் தெரிவு செய்து, பஞ்சரத்ன கீர்த்தனைபோல், "அருட்கவி ஐந்து" எனப் பாடச்செய்த கம்பனடிப்பொடி, 28-7-1982 அன்று கம்பனடி எய்தியபோதிலும், கம்பன் புகழ்பாடும் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்து இலங்குவார் என்பதில் ஐயமில்லை.

[ நன்றி: தினமணி ]

தொடர்புள்ள பதிவு:
சா. கணேசன் - தமிழ் விக்கிப்பீடியா

திங்கள், 5 ஜூன், 2017

739. நாடோடி -3

கற்றுக்குட்டிகள்
நாடோடி

தொடர்புள்ள பதிவுகள்:

நாடோடி படைப்புகள்