செவ்வாய், 19 செப்டம்பர், 2017

840. சங்கீத சங்கதிகள் - 132

மகா வைத்தியநாதய்யர்  
சூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் 1940-களில் ‘கல்கி’யில் வந்த ஒரு கட்டுரை.[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:
சங்கீத சங்கதிகள்

திங்கள், 18 செப்டம்பர், 2017

839. லா.ச.ராமாமிருதம் -14: சிந்தா நதி - 14

11. நிர்மாலியம்
லா.ச.ராமாமிருதம்

” ஏன் எதையுமே கதையாகப் பார்க்க விரும்பும் சுபாவம் நமக்கு? வாய்ச் சொல்லிலோ, ஏட்டிலோ, நினைவு கூட்டலிலோ, அனுபவம் மறு உரு எடுக்கையில் கதையாகத்தான் வருகிறது. பாஷையின் ரஸவாதம். “
சிந்தா நதிக் கரையோரம் குப்புறப் படுத்து, ஜலத்துள் எட்டிப் பார்க்கிறேன். முகங்கள், நிழல்கள், உருவங்கள். எல்லாமே தெரிந்த முகங்கள் இல்லை. அன்று என்று மறுப்பதற்கும் இல்லை. மெதுவான பவனியில் யுகம் நகர்கிறது.

திரேதா, க்ரேதா, துவாபர, கலி-காலம் ஒரு முப்பட்டகம் எனில், யுகங்கள் அதன் முகங்கள்.

"இப்படி எல்லாம் தெரிந்தமாதிரி உன் அதிகாரப் பூர்வம் என்ன?" எனக் கேட்டால்,

"தெரியாது."

முப்பட்டகத்தில் ஒரு இம்மி அசைவுக்கும் காட்சி மாறல் க்ஷண யுகம். ராமாயணம், பாரதம், பகவத்கீதை, ஷா நாமா, அம்ருத மந்தன், அராபிய இரவுகள் Iliad odessey- இன்னும் எனக்குச் சொல்லத் தெரியாதது, எனக்கு முற்பட்டது, எனக்கு அப்பாற்பட்டது- விந்தை. அங்கும், எதிலும் நான் இருக்கிறேன்.

கதை கதையாம் காரணமாம், காரணத்தில் ஒரு தோரணமாம். ஒரே ஒரு ஊரில் ஒரு ராஜாவாம், ராஜாவுக்கு ஒரு ராணியாம், இதுவும் நதியில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

காலமெனும் முப்பட்டகத்தில் இம்மி அசைவுக்கும் க்ஷண யுகத்தில் க்ஷணமே யுகம். யுகமே முகம் எனக்காட்சி மாறியபடி இருந்துகொண்டிருக்கும் இந்த Keleidoscopeஐத் திருப்புவது யார்?

-பழைய ஆகமம், புது ஆகமம், Genesis மத்தேயு, Psalms...

-ஸரி கம பத நி வித வித கானமு வேதஸாரம்-

-யார், யார், யார் ?

எனக்கு இது ஒரு வியப்பு. ஏன் எதையுமே கதையாகப் பார்க்க விரும்பும் சுபாவம் நமக்கு? வாய்ச் சொல்லிலோ, ஏட்டிலோ, நினைவு கூட்டலிலோ, அனுபவம் மறு உரு எடுக்கையில் கதையாகத்தான் வருகிறது. பாஷையின் ரஸவாதம்.

அனுபவம், நினைவு கூட்டல், மறு உரு, கதை- வாழ்க்கையின் இன்றியமையாத அம்சங்களாகத் திகழ்கின்றன.

அனுபவத்தில் என்னைக் கண்டு பயப்படுகிறேன்.

கதையெனும் மறு உருவில் என்மேல் ஆசை கொள்கிறேன்.

பாஷையின் ரஸவாதம்.

அனுபவத்தில் நான் என் பேதைமைகளுடன் அம்மணம். கதையில் நான் நாயகன்.

-ராமன், அர்ச்சுனன், அபிமன்யு, அலெக்சாண்டர், ரஸ்டம், ஸோரப், பீஷ்மன், பிருத்விராஜ் இவர்களைப் போல் நான் இருக்க விரும்பும் ஆசையில், திரும்பத் திரும்ப இவர்களை நினைவு கூட்டலினாலேயே இவர்களாக மாறி விட்டதாக ஆசையின் நிச்சயத்தில், இவர்கள் அனைவரிலும் இனிமேலவரிலும் எனக்கு என் பங்கு உண்டு.

திரும்பத் திரும்ப இந்த நினைவு கூட்டலில், கால அளவில் கூட்டலின் திரட்சியில் ஏதேனும் ஒரு சமயம் திரட்சியின் சிதறலில் நான் ஒரு சிதறாக இவர்களுடன் அமரத்துவம் எய்திடுவேன். நாயக பாவத்தின் பதவி அப்படிப்பட்டது. நாயக பாவமில்லாவிடின், அதன் தனித்தனி விதத் தடங்களில் தெய்வங்கள் ஏது? தெய்வங்கள் வேண்டும். தெய்வீகம் அறியோம்.

தெய்வீகம்: முக்தியின் வெட்ட வெளி. தெய்வங்கள் எனும் உச்சத்தடக் கதாநாயகர்கள் உருவாகும், உருவாக்கும் பட்டறை. அனுபவம், பாஷை, நினைவு கூட்டலின் முக்கூடல், முக்கூடலின் ரஸாயனத்தில் நேர்ந்த பூகம்பத்தின் சித்தி.

கதை கதையாம் காரணமாம்..........

நினைவு கூட்டல், திரும்ப நினைவு கூட்டல், நினைவு கூட்டலே, உன் மறு பெயர் தியானம். கதை, கற்பனை. inspiration. நடப்பு வெளி உலகம், உள் உலகம், இனி உலகம், கலை, காலம், முகம்- இன்னும் சொல்ல விட்டவை அனைத்தையும் அகப்பை அகப்பையாகச் சொரிந்து, தியானத்தின் தீராப் பசிக்குத் தீனி தியானமெனும் தீ, ஸர்வ கபளீகரி,
* * *

நினைவில் தீ நடுவில் அமர்ந்தேன்.

வெல்லத்தைக் காய்ச்சக் காய்ச்சப் பாகாய்க் கெட்டிப் படுகிறது.

சாந்தைக் கூட்டக் கூட்டச் சாந்து கெட்டிப்படுகிறது.

நினைவைக் கூட்டக் கூட்ட நினைவு இறுகுகிறது.

மறு உருவங்கள், மறு மறு உருக்கள் உருகி உருகி, இறுக இறுக ஒரு உருவாகி ஒரே உருவாகிக் கொண்டிருக்கும் பாகின் த்ரில்- பிந்து ஸாரம், பிந்து மகிழ்ச்சி, ராகம் பிந்துமாலினி.

இருளில் கன்னத்தில் ஒரு முத்தம் யார் தந்தது? அனுபவம் சொல்ல முடியாது. சொல்வதற்கில்லை, யாரிடம் சொல்வேன்? யார் முத்தம் என்று தெரிவேன்? நினைவு பித்தடிக்கிறது.
* * *

தியானமே உன் கதையென்ன? ஓ, மெளனம் உன் இயல்பல்லவா? என் பேச்சை உதவுகிறேன். எனக்காகப் பேசி உன் கதையைச் சொல்லமாட்டாயா?

"சொல்ல என்ன இருக்கிறது, நான் வேறேதுமில்லை. உன் இசையில் உன் ஈடுபாடு. ஈடுபாடில் பாகுபாடு. பாகுபாடில் இழைபாடு. இழைபாடின் வழிபாடு, இழைபாடே வழிபாடு. வழிபாடே இழைபாடு.

தியானேச்வரத்தில் நான் வஜ்ரேச்வரன் ஆனால், ஒரு நாள் ஆகையில், பிந்துமாலினி என் தியானேஸ்வரி வருவாள். இருளில் அவள் முகத்தைத் தருவாள். முத்தம் அடிக்கும் பித்தே முத்தியின் வெட்ட வெளிக்குச் சாவி. முத்தி வேண்டாம்.

தியானம் ஒரு புஷ்பம். நேற்று அவள் கூந்தலில் செருகிய மலராகி மணத்தேன். இன்று நிர்மாலியாகி, நேற்றைய நினைவின் மணத்துடன் உதிர்ந்து கொண்டிருக்கிறேன்- சிந்தா நதியில்.

"என்ன அத்தனையும் பேத்தல், வார்த்தைகளின் பம்மாத்து!"

ரொம்ப சரி. அத்தனையும் தூக்கி எறி,

சிந்தா நதியில்.
* * *
[ நன்றி: தினமணி கதிர், மதுரைத் திட்டம், ஓவியம்: உமாபதி ] 

தொடர்புள்ள பதிவுகள்:

ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

838 .வெ. சாமிநாத சர்மா - 1

பாரதி தரிசனம்
வெ.சாமிநாத சர்மா 

செப்டம்பர் 17. சாமிநாத சர்மாவின் பிறந்த தினம்.

 அவர் பாரதியை 1918/19 -இல் நேரில் பார்த்த அனுபவத்தை எழுதுகிறார் இந்த 1943 ‘சக்தி’ கட்டுரையில் . இது பாரதியியலில் ஒரு முக்கியமான கட்டுரை.
===தொடர்புள்ள பதிவுகள்:

வெ. சாமிநாத சர்மா : விக்கிப்பீடியா

சனி, 16 செப்டம்பர், 2017

837. கி.வா.ஜகந்நாதன் - 5

சமரஸப் பாட்டு
கி.வா.ஜகந்நாதன்


1943-இல் ‘சுதேசமித்திர’னில் வந்த ஒரு கட்டுரை.[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்: 

வெள்ளி, 15 செப்டம்பர், 2017

836. சரத்சந்திரர் - 1

வங்கம் தந்த இலக்கிய மேதை சரத்சந்திரர்
த. சிவசுப்பிரமணியம்செப்டம்பர் 15. சரத்சந்திரரின் பிறந்த தினம்.


கு.ப.ரா -வின் ஒரு மொழிபெயர்ப்பு உதாரணம்: (1941- சுதேசமித்திரன் )
[ நன்றி: ’ஞானம்’ ]

தொடர்புள்ள பதிவுகள்:

சரத்சந்திர சட்டோபாத்யாயா ; விக்கிப்பீடியா

வியாழன், 14 செப்டம்பர், 2017

835. கௌதம நீலாம்பரன் -1

எழுத்தாளர்: கௌதம நீலாம்பரன்
அரவிந்த்

செப்டம்பர் 14. கௌதம நீலாம்பரனின் நினைவு தினம்.
===
கல்கி, சாண்டில்யன், விக்கிரமன், கோவி.மணிசேகரன் வரிசையில் குறிப்பிடத்தக்க சரித்திர நாவல்களை எழுதியவர் கௌதம நீலாம்பரன். இவர் ஜூன் 14, 1948 அன்று, விருத்தாசலம் அருகேயுள்ள சாத்துக்கூடல் கிராமத்தில் பிறந்தார். இயற்பெயர் கைலாசநாதன். ஆரம்பக்கல்வியை அவ்வூரிலேயே பெற்றார். விக்கிரமாதித்தன் கதைகள், பெரிய புராணம் ஆகியவை கைலாசநாதனின் வாசிப்பார்வத்தை வளர்த்தன.

விருத்தாசலத்தில் நவாப் ராஜமாணிக்கம் நாடகம் பார்த்து, ஈர்க்கப்பட்டு, அந்த நாடகக்குழுவில் இணைந்து சில மாதங்கள் நடித்தார். தொடர்ந்து நாடகம் மற்றும் திரைப்படத்தின் மீது ஆர்வம் அதிகரித்தது. சினிமாவில் நடிக்கும் எண்ணத்துடன் 1965ல் சென்னைக்கு வந்தார். சென்னையில் இவர் சந்தித்தது வறுமையும், கொடுமையுமே. ஹோட்டல் சப்ளையர், பழ விற்பனையாளர், கைக்குட்டை, பிளாஸ்டிக் சீப்புகள் விற்பனை என்று வேலைகள் செய்தார். தெருவிலும், நண்பர்களின் அறைகளிலும் இரவில் தங்கினார். நாடகங்களில் சிறுசிறு வேடங்கள் வந்தன. ஓய்வு நேரத்தில் வாடகை நூலகங்களில் நூல்களை எடுத்து வாசித்தார். கல்கி, நா.பா., மு.வ., அகிலன், சாண்டில்யன், விக்கிரமன், ஜெகசிற்பியன், ஜாவர் சீதாராமன், மீ.ப. சோமு போன்றோரின் நூல்களைத் தொடர்ந்து வாசிக்க எழுத்தின் சூட்சுமம் பிடிபட்டது. கவிதைகள் எழுதத் தொடங்கினார். பத்திரிகை அலுவலகங்களுக்கு நேரில் சென்று கொடுத்தார். ஆனால் எதுவும் வெளியாகவில்லை.நா.பா.வின் கதைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்ட கௌதம நீலாம்பரன் அவரை நேரில் சந்தித்தார். 'தீபம்' இதழுக்கு உதவியாளராகச் சேர்த்துக்கொண்டார் நா.பா. அது வாழ்வின் திருப்புமுனை ஆனது. அங்கு பணியாற்றிக்கொண்டே சிறுகதைகள் எழுதினார். முதல் சிறுகதை 'புத்தரின் புன்னகை' இவரது 22ம் வயதில், சுதேசமித்திரன் நாளிதழின் வாரப்பதிப்பில் வெளியானது. இரண்டாவது கதை 'கீதவெள்ளம்' அக்பர் - தான்சேன் பற்றிய சரித்திரக் கதையாகும். வித்தியாசமான கதைக்களனில் கற்பனை கலந்து சிறுகதை ஆக்கியிருந்தார். இது கி.வா.ஜ. ஆசிரியராக இருந்த கலைமகளில் வெளியானது. கிட்டத்தட்ட பத்தாண்டுக் காலம் தீபத்தில் பணிபுரிந்தார். அது இவருக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் எனப் பலரது அறிமுகத்தைப் பெற்றுத்தந்தது. தொடர்ந்து வார, மாத இதழ்களில் சிறுகதை, தொடர்கள் எழுதினார். சமூகக் கதைகளோடு சரித்திரக் கதைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எழுத ஆரம்பித்தார்.

கி.வா.ஜ.வின் பரிந்துரையில் 'இதயம் பேசுகிறது' இதழில் உதவியாசிரியராகப் பணிசேர்ந்தார். அதில் இவர் எழுதிய 'ஈழவேந்தன் சங்கிலி' என்ற வரலாற்றுத் தொடர் இவருக்குப் பரவலான வரவேற்பைப் பெற்றுத்தந்தது. ஈழத் தமிழ்மன்னனின் பெருமைபேசும் இந்நாவலுக்கு ஜெமினி ஸ்டுடியோ வாசலில் பிரம்மாண்டமான கட்-அவுட் வைக்கப்பட்டது. தொடர்ந்து குங்குமம், முத்தாரம், குங்குமச்சிமிழ் எனப் பல பிரபல இதழ்களில் பணியாற்றினார். பத்திரிகை அனுபவமும், எழுத்துத்திறனும் இவரிடமிருந்து சிறந்த படைப்பாக்கங்களை வெளிக்கொணர்ந்தன. சுதந்திர வேங்கை, சோழவேங்கை, மோகினிக் கோட்டை, கோச்சடையான், ரணதீரன், ரஜபுதன இளவரசி, பல்லவன் தந்த அரியணை, வெற்றித்திலகம், விஜயநந்தினி, பல்லவ மோகினி, மாசிடோனிய மாவீரன், கலிங்கமோகினி, பாண்டியன் உலா, புலிப்பாண்டியன், பூமரப்பாவை, மந்திரயுத்தம், வேங்கைவிஜயம், வீரத்தளபதி மருதநாயகம், சேதுபந்தனம், சாணக்கியரின் காதல், சித்திரப் புன்னகை, சிம்மக்கோட்டை மன்னன், மாடத்து நிலவு போன்றவை இவரது குறிப்பிடத்தகுந்த வரலாற்றுப் புதினங்களாகும். 'முத்தாரம்' வார இதழில் இவர் எழுதிய புத்தரின் வாழ்க்கை வரலாறு மூன்றரை ஆண்டுகள் தொடர்ந்து வெளிவந்தது. இத்தொடர் பின்னர் 'புத்தர்பிரான்' என்ற பெயரில் நூலாக வெளிவந்து, தினத்தந்தி ஆதித்தனார் அறக்கட்டளை நினைவுப் பரிசு ஒரு இலட்சம் ரூபாய் வென்றது.

கௌதம நீலாம்பரனின் படைப்புகள் தமிழின் அனைத்து முன்னணி வார இதழ்களிலும், நாளிதழ்களிலும் வெளியாகியிருக்கின்றன. மலேசியாவின் வானம்பாடியிலும் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன. காவியமாய் ஒரு காதல், ஜென்ம சக்கரம், கலா என்றொரு நிலா போன்ற சமூக நாவல்களையும் இவர் எழுதியிருக்கிறார். சிறந்த கவிஞரும்கூட. இதயமின்னல், அம்பரம் போன்றவை இவரது கவிதைத் தொகுப்புகள். சேரன் தந்த பரிசு, மானுட தரிசனம், ஞான யுத்தம் போன்றவை குறிப்பிடத்தக்க நாடக நூல்கள். நலம்தரும் நற்சிந்தனைகள் என்பது சிந்தனைகள் அடங்கிய கட்டுரைத் தொகுப்பு. இதயநதியை இவரது சுயசரிதை என்றே சொல்லலாம். அருள்மலர்கள், ஞானத்தேனீ, சில ஜன்னல்கள் போன்ற கட்டுரை நூல்களில் தனது வாழ்க்கை அனுபவங்களை, சிந்தனைகளை, சமூக உயர்வுக்கான வழிகளைச் சொல்லியுள்ளார். மாயப்பூக்கள், மாயத்தீவு, நெருப்பு மண்டபம், மாயக்கோட்டை எனச் சிறுவர்களுக்காக நிறைய எழுதியுள்ளார்.

இருநூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், கவிதை, கட்டுரை, நாடகங்கள் என 65க்கும் மேற்பட்ட நூல்களை இவர் எழுதியிருக்கிறார். இவர் எழுதிய சரித்திரச் சிறுகதைகளும், சமூகச் சிறுகதைகளும் தொகுக்கப்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட நூலாக "சரித்திரமும் சமூகமும்" என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.

சேலம் தமிழ்ச்சங்கம் இவருக்கு 'தமிழ்வாகைச் செம்மல்' விருதளித்துச் சிறப்பித்தது. தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 'பேராசிரியர் கல்கி இலக்கிய விருது', மன்னார்குடி செங்கமலத் தாயார் அறக்கட்டளையின் 'சிறந்த எழுத்தாளர் விருது', லில்லி தெய்வசிகாமணி விருது, பாரதி விருது, சக்தி கிருஷ்ணசாமி விருது, இலக்கியப் பேரொளி விருது, கதைக்கலைச் செம்மல் விருது, கவிதை உறவு வழங்கிய 'தமிழ்மாமணி' விருது எனப் பல கௌரவங்களை இவர் பெற்றுள்ளார்.

பல இலக்கியக் கூட்டங்களில் கலந்துகொண்ட போதும், தன்னை அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியாக ஒதுங்கியிருந்து தன் படைப்புப் பணிகளை மேற்கொண்டவர். தான்மட்டுமே எழுத்தாளராக இருக்கவேண்டும் என்று நினையாமல் ஆர்வமுள்ள இளந்தலைமுறைப் படைப்பாளிகள் பலரை எழுதத் தூண்டி ஊக்குவித்தவர். கதை, கவிதை, கட்டுரை, நாடகம் எனப் பல தளங்களிலும் தீவிரமாக இயங்கிவந்த, கௌதம நீலாம்பரன் செப்டம்பர் 14, 2015 அன்று மாரடைப்பால் காலமானார். இந்தக் கட்டுரையே அவருக்கு அஞ்சலியும் ஆகிறது.

[ நன்றி: தென்றல் ]

தொடர்புள்ள பதிவுகள்:
கௌதம நீலாம்பரன்: விக்கிப்பீடியா

http://gauthamaneelambaran.blogspot.ca/

புதன், 13 செப்டம்பர், 2017

834. சிறுவர் மலர் - 7

சப்தரிஷி மண்டலம்
‘பரதன்’  [ மூலம்: டால்ஸ்டாய் ]

செப்டம்பர் 9. டால்ஸ்டாயின் பிறந்த தினம்.


’சக்தி’ இதழில் 1944-இல் வந்த ஒரு கதை.தொடர்புள்ள பதிவுகள்:
சிறுவர் மலர்
லியோ டால்ஸ்டாய்


செவ்வாய், 12 செப்டம்பர், 2017

833. ரஞ்சன் -1

கேப்டன் ரஞ்சன்
அறந்தை நாராயணன்


செப்டம்பர் 12. நடிகர் ரஞ்சனின் நினைவு தினம்.
===


[ நன்றி : தினமணி கதிர் ]

தொடர்புள்ள பதிவுகள்:

ரஞ்சன்: விக்கிப்பீடியா

832. சி.வை.தாமோதரம் பிள்ளை -1

பதிப்புச் செம்மல் சி.வை.தாமோதரம் பிள்ளை
வளவ.துரையன்
செப்டம்பர் 12. தாமோதரம் பிள்ளையின் பிறந்த தினம். யாப்பிலக்கணம் தெரிந்தவருக்கு இவருடைய ‘கட்டளைக் கலித்துறை’ பற்றிய நூல்/கட்டுரை ஒரு முக்கியமான ஆவணம். இன்றும் நாங்கள் இதைக் குறித்து உரையாடுகிறோம்!
===

  ஆய்வாளர்கள் தமிழ் நூல்கள் பதிப்பு குறித்த காலத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கிறார்கள். 19-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியை ஆறுமுக நாவலர் காலம் என்றும் 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியை தாமோதரம் பிள்ளையின் காலம் என்றும் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கமான பகுதியை உ.வே.சாமிநாதய்யர் காலம் என்றும் அவர்கள் வகுத்துள்ளனர்.

 இவர்களில் ""சி.வை.தாமோதரம்பிள்ளை யாழ்ப்பாணத்தில் பிறந்த குற்றத்துக்காக அவர் சரித்திரமாகிய தமிழ்ச் சரித்திரத்தை மறைக்க முயல்வது நன்றிக்கேடு'' என்றும் "தமிழ்தந்த தாமோதரம் பிள்ளை' என்ற கட்டுரையில் சி.கணபதிபிள்ளை குறிப்பிட்டுள்ளார்.

 பதிப்புத்துறையில் தொண்டாற்றிய மேற்கண்ட மூன்று அறிஞர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது. ஆறுமுக நாவலர் 1868-இல் தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையம் உரையைத் தான் ஆய்வுசெய்து தாமோதரம் பிள்ளையைக் கொண்டு பதிப்பிக்கச் செய்துள்ளார்.

 ""ஆங்கில மோகம் அதிகரிக்க, தொல்காப்பியப் பிரதிகள் அருகி, தமிழ்நாடு முழுவதிலும் விரல்விட்டு எண்ணத்தக்க அளவில் சுருங்குவதை தாமோதரம் பிள்ளை கண்டார்; கண்ணீர் வடித்தார்...தொல்காப்பியக் கடலில் இறங்கினார்'' என்று பண்டிதர் சி.கணபதிப்பிள்ளை குறிப்பிடுகிறார்.


 தமது 33-ஆம் வயதில் உ.வே.சா., தாமோதரம் பிள்ளையைச் சந்தித்தார். அப்போது உ.வே.சா., சீவகசிந்தாமணியைப் பதிப்பிக்கும் எண்ணம் கொண்டு சுவடிகளை ஆய்ந்து கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு அப்போது அச்சுத்துறை மிகவும் புதியது. தாமோதரம் பிள்ளையின் சந்திப்புதான் உ.வே.சா.வுக்கு அச்சிடும் ஊக்கத்தை அளித்தது. இதை உ.வே.சாவே, ""இந்த நூலையும் (சீவகசிந்தாமணி) உரையையும் பின்னும் இரண்டொருமுறை பரிசோதித்தற்கு விருப்புடையனேனும், இவற்றை விரைவில் பதிப்பித்து பிரகடனஞ் செய்யும்படி, யாழ்ப்பாணம் ம.ஸ்ரீ.சி.வை.தாமோதரம்பிள்ளயவர்கள் பலமுறை தூண்டினமையால் விரைந்து அச்சிடுவிக்கத் துணிந்தேன்'' என்று 1887-இல் சீவகசிந்தாமணி முதற்பதிப்பு முன்னுரையில் எழுதியிருக்கிறார்.

 இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள சிறுப்பிட்டி என்னும் கிராமத்தில் வைரவநாதபிள்ளை-பெருந்தேவி தம்பதியினர்க்கு மகனாக 1882-ஆம் ஆண்டு செப்டம்பர் 12-ஆம் தேதி பிறந்தார்.

 தாமோதரம் பிள்ளை, சிறுவயது முதல் தமது தந்தையாரிடத்திலே வாக்குண்டாம், நன்னெறி, திவாகரம் போன்ற நூல்களைக் கற்றுணர்ந்தார். தொடர்ந்து சுன்னாகம் முத்துக்குமாரக் கவிராயர் என்பவரிடம் நைடதம், பாரதம், கந்தபுராணம் முதலிய இலக்கியங்களையும் மேலும் சில இலக்கண நூல்களையும் பயின்றார்.


 பிள்ளையவர்களின் ஆங்கிலக்கல்வி தெல்லிப்பிழை அமெரிக்க மிஷன் பள்ளியில் தொடங்கியது. மேலும் ஆங்கிலத்தில் உயர்கல்வியை யாழ்ப்பாணம் பல்கலையில் கற்றார். அங்கு கணிதம், தமிழ், ஆங்கிலம், தத்துவம் போன்ற பாடங்களில் முதல் மாணவராய்த் திகழ்ந்தார்.

 ஆங்கில உயர்தரக்கல்வியை எட்டு ஆண்டுகள் பயின்றபின் தமது 20-ஆம் வயதில் கோப்பாயிலிருந்த பள்ளியில் பிள்ளை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். அக்காலத்திலேயே நீதிநெறிவிளக்க உரையை அவர் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

 சென்னையில் இருந்த பார்சிவல் பாதிரியார் தாமோதரம் பிள்ளையின் தமிழ் அறிவைக் கேள்விப்பட்டு அவரைச் சென்னைக்கு அழைத்து "தினவர்த்தமானி' எனும் இதழின் ஆசிரியராக்கினார். அவ்விதழைச் சிறப்பாக நடத்தி அதில் தனியான ஒரு வசன நடையைக் கையாண்டார் பிள்ளை. மேலும் லஷ்சிஸ்டன்துரை போன்ற ஆங்கிலேயர்க்குத் தமிழும் கற்பித்து வந்தார். இதை அறிந்த அன்றைய அரசாங்கம், தாமோதரம் பிள்ளையை, இன்று மாநிலக் கல்லூரி என்றழைக்கப்படும் அன்றைய "சென்னை இராசதானி' க்கல்லூரியில் தமிழாசிரியராக நியமித்து மகிழ்ந்தார்கள்.


 சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ., தேறிய பிள்ளையை கள்ளிக்கோட்டை இராஜாங்க வித்தியாசாலை உதவியாசிரியராகப் பணியாற்ற அழைத்தது. அப்பள்ளியில் பணியாற்றியபோது அவர் பல சீர்திருத்தங்கள் செய்து நிர்வாகத்துறையிலும் சிறந்து விளங்கினார். இதனால் அவருக்கு அரசாங்க வரவு-செலவுக் கணக்குச் சாலையில் கணக்காய்வாளர் பதவியும், அப்பதவியில் காட்டிய திறமையினால் விசாரணைக்கர்த்தர் பதவியும் வந்து சேர்ந்தன. 1871-இல் தாமோதரம்பிள்ளை பி.எல்.தேர்வில் வெற்றி பெற்றார்.

 எப்பணியை மேற்கொண்ட போதிலும் தமது ஓய்வு நேரங்களில் தாமோதரம்பிள்ளை பழைய நூல்களை ஓலைச் சுவடிகளில் பயின்றுவந்தார். அச்சுவடிகள் ஓரம் சிதைந்தும், இதழ் ஒடிந்தும் சீரழிந்து இருந்தன. அச்சுவடிகளைச் சீராக்கி அச்சேற்றிப் பதிப்பிக்க வேண்டியது தமது தலையாய பணி என்று பிள்ளை கருதினார். ஏற்கெனவே தம் 20-ஆம் வயதிலேயே நீதிநெறி விளக்கத்தை அச்சிட்டு வெளியிட்டுள்ளதால், பிள்ளைக்கு இப்பணி சுமையாகத் தோன்றவில்லை. எனினும் எந்நூலையும் நாவலரவர்கள் பரிசோதித்தலே நன்று என்று கருதி அவருக்கே பிள்ளை உதவி செய்து வந்தார்.

 இந்த நெருங்கிய தொடர்பினால் நாவலர் பரிசோதித்து அளித்த சொல்லதிகாரத்தைத் தம் பெயரினால் பிள்ளை முதன்முதல் 1868-இல் வெளியிட்டார். இந்நூல் வெளிவந்து பதினொரு ஆண்டுகள் கடந்தபின் 1879-இல் ஆறுமுகநாவலர் காலமானார். பிள்ளை மிகவும் மனம் வருந்தியதோடு நாவலரின் பணியைத் தாம் தொடர வேண்டுமென முடிவு செய்தார்.

 நாவலரின் மறைவுக்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்துப் பிள்ளை அரசுப்பணியிலிருந்து விலகி முழுநேரத்தையும் தமிழ்ப்பணிக்கே செலவிடத் துணிந்தார். அதன் பயனாய் வீரசோழியம் (1881), தணிகைப்புராணம், இறையனார் அகப்பொருள் (1883), தொல்காப்பியப் பொருளதிகாரம் (1885), கலித்தொகை (1887), இலக்கண விளக்கம், சூளாமணி (1889), தொல்காப்பிய எழுத்ததிகாரம் (1891), தொல்காப்பிய சொல்லதிகாரம் (1892) முதலியவை தாமோதரம்பிள்ளையால் பதிப்பிக்கப்பட்டு வெளிவந்தன.

 இது மட்டுமன்றி, கட்டளைக் கலித்துறை, வசன சூளாமணி, சைவ மகத்துவம், நட்சத்திரமாலை முதலிய நூல்களைத் தாமே எழுதி வெளியிட்ட பெருமை பிள்ளைக்கே உரியதாகும்.

 அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றபின் பிள்ளை, 1887-ஆம் ஆண்டில் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் 4 ஆண்டுகள் நீதிபதியாகப் பணியாற்றினார். மேலும் சென்னை திராவிடக் கிரந்த பரிபாலன சபை, நியாயப் பரிபாலன சபை போன்ற அமைப்புகளில் உறுப்பினராயும் இருந்து சென்னை பல்கலைக்கழகத்தின் முதல் மாணவர் என்ற பெருமையையும் பெற்றார் தாமோதரம்பிள்ளை.

 அன்றைய சென்னை அரசு இவருக்கு 1875-இல் ராவ்பகதூர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. இவ்வாறு சிறந்த பதிப்புச் செம்மலாக விளங்கியதோடு தமிழ் ஆசிரியராக, கணக்காயராக, நீதிபதியாக, தான் தோன்றிய துறையில் எல்லாம் புகழோடு தோன்றிய பிள்ளை, 1901-ஆம் ஆண்டு தைத்திங்கள் முதல்நாள், வைகுந்த ஏகாதசித் திருநாளில் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

 பல பழைய இலக்கியங்களைப் பதிப்பித்தவர் உ.வே.சா. என்று மகிழும் நாம், பல பண்டைய இலக்கண நூல்களைப் பதிப்பித்தவர் சி.வை.தாமோதரம் பிள்ளை என்பதை அறிந்து பெருமைப்பட வேண்டியது தமிழர் கடமை..

[ நன்றி: தினமணி ]

தொடர்புள்ள பதிவுகள்:
சி. வை. தாமோதரம்பிள்ளை : விக்கிப்பீடியா

திங்கள், 11 செப்டம்பர், 2017

831. கறுப்புச் செவ்வாய் : கவிதை

கறுப்புச் செவ்வாய்
பசுபதி

9/11 தாக்கம்: ‘திண்ணை’ மின்னிதழில் 17 செப்டம்பர் 2001 அன்று வந்த கவிதை. 

கழுகு:
விடிந்தது கறுப்புச் செவ்வாய்
. . வெந்தழல் மேனிச் செவ்வாய் !
வெடித்தது வஞ்சக் குண்டு !
. . வெறுப்புமிழ் விமானம் தாக்கி
இடிந்தது வணிக மையம் !
. . எரிந்தது இழந்தோர் வையம் !
மடிந்தது மனித நேயம் !
. . மறக்குமோ யூயெஸ் தேயம் ?
புறா:
கூவிடும் மக்கள் சோகம்
. . குறைத்திடும் கொலைஞர் தாகம் !
யாவரும் கேளிர் என்றும்
. . யாதுமே நம்மூர் என்றும்
தீவிர வாதம் பேசும்
. . தீயவர் அறிவார் நாளை !
ஏவுவோம் அமைதிக் குண்டு !
. . தூவுவோம் அன்புச் செண்டு !
கழுகு:
சூளுரைப்போம் துடித்தெழுந்த அமெரிக்க நாட்டிற்கு,
. . . "தோழா! உங்கள்
தோளுக்குத் தோள்கொடுத்துத் துஷ்டர்செய் வன்முறையைத்
. . . துண்டம் செய்வோம் !
வாளதனை உறைக்குள்ளே வைத்திருப்போம்; பொறுத்திருப்போம்;
. . . வாய்ப்ப ளிக்கும்
நாளதனில் பாய்ந்திடுவோம் ; நசுக்கிடுவோம் எதிரிகளை ;
. . . நமக்கே வெற்றி !"
புறா:
விண்வெளியின் மேலுண்டோ வேலி ? விசாச்சீட்டு
வன்முறைக்கு வாங்கவும் வேண்டுமோ ? -- அன்றிழந்த
கண்ணுக்குக் கண்பறிக்கக் கங்கணம் கட்டினால்
அந்தகர்கள் ஆவர்உல கோர்.

தொடர்புள்ள பதிவுகள்:

ஞாயிறு, 10 செப்டம்பர், 2017

830. ஏ.கே.செட்டியார் - 1

ஒரு தமிழனின் யாத்திரை 
ஏ.கே.செட்டியார் செப்டம்பர் 10. பயண இலக்கிய முன்னோடி ஏ.கே.செட்டியாரின் நினைவு தினம்.

‘சக்தி’ இதழில் 1939-இல் வெளியான ஒரு கட்டுரை.

தொடர்புள்ள பதிவுகள்:

ஏ.கே.செட்டியார் : தமிழ் விக்கிப்பீடியா

சனி, 9 செப்டம்பர், 2017

829. ஆனந்த குமாரசுவாமி -2

கலையோகி ஆனந்த குமாரசுவாமி
திருமயம் சு.நடராசன்செப்டம்பர் 9. ஆனந்த குமாரசுவாமியின் நினைவு தினம்.

இது ‘சக்தி’ இதழில் 1950-இல் வந்த ஒரு கட்டுரை.


தொடர்புள்ள பதிவுகள்:

ஆனந்த குமாரசுவாமி